பட்டுப் புழு வளர்ப்பு என்பது ஒரு குடிசைத் தொழிலாகும். பட்டுப் பூச்சியை வளர்த்து, அதன் புழுக்களின் கூடுகளிலிருந்து பட்டைப் பெறும் முறையே பட்டுப் பூச்சி வளர்ப்பாகும். கி.மு.2697 ஆண்டுகளுக்கு முன், சீன நாட்டு மன்னர் கீலாகீங்–டியீன் மனைவி சி–விங்–ஷி என்பவரால், கண்டு பிடிக்கப் பட்ட பட்டு இழை, தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவில், பல வகைப் பட்டுப் பூச்சிகள் வளர்க்கப் படுகின்றன. அவை, முசுக்கொட்டைப் பட்டு, ஈரிப் பட்டு, டாசர் பட்டு என்பன. இவற்றில், முசுக்கொட்டைப் பட்டே பெருமளவில் வளர்க்கப் படுகிறது. எனவே, பட்டுப் பூச்சி வளர்த்தல் என்பது முசுக் கொட்டைப் பட்டு வளர்த்தலையே குறிக்கிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு 25°–30°C வெப்ப நிலையும், 70–80% ஈரப் பதமும் இன்றியமையாதவை. இந்தியாவின் வெப்பப் பகுதிகளிலும், பீட பூமிகளிலும், மலைப் பகுதிகளிலும் இத்தகைய வெப்ப நிலை காணப் படுகிறது. ஆனால், முசுக்கொட்டைப் பயிர் எந்த வெப்ப நிலையிலும், எத்தகைய மண்ணிலும் வளர்கிறது. இப்பயிர் செய்வதற்கு முன், ஏப்ரல், மே மாதங்களில் நிலத்தைப் பல முறை உழவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 20–25 டன் தொழு உரமிட்டும், இடைவெளியில் குறுக்குக் கோடுகள் இட்டுக் கோடுகளின் சந்திப்புகளில் சிறு குழியிட்டு, 2 அல்லது 3 முசுக்கொட்டைப் பயிர்க் குச்சிகளை நட வேண்டும். ஒவ்வொரு குச்சியும், 20–22 செ.மீ நீளமிருக்கவேண்டும். இத்தகைய குச்சிகள் வளர்ந்து, ஹெக்டேருக்கு ஆறு அல்லது எட்டு முறை இலைகளை அறுவடைக்கு அளிக்கும். இதன் மூலம், ஹெக்டேர் ஒன்றுக்கு 25–30 மெட்ரிக் டன் இலைகள் கிடைக்கின்றன. இப்பயிர் 12 ஆண்டுகள் வரை இலைகளைத் தரும் தன்மை பெற்றது. புழுக்கள் அடங்கிய தட்டுக்களை வைப்பதற்காக, மூங்கிலால் செய்யப் பட்ட பல அறைகள் அடங்கிய அலமாரி, புழுக்களை இடுவதற்காக மூங்கிலால் பின்னப் பட்ட வட்டமான தட்டு, முசுக்கொட்டை இலைகளைப் பறித்து வருவதற்கான மூங்கில் கூடை, புழுக்கள் கூடு கட்ட, சந்திரிகை எனும் வட்டமான மூங்கில் தட்டு போன்றவை பட்டுப் புழு வளர்ப்பதற்கு அடிப்படையானவை. முட்டையிட்ட பத்தாம் நாளில் புழுக்கள் வெளி வருகின்றன. இவை, கால் அங்குல நீளமுள்ள மயிரிழை போன்றிருக்கும். இவற்றிலிருந்து பொரிக்கப் பட்ட கம்பளிப் புழுக்களை உமி, தவிடு நிரம்பிய மூங்கில் தட்டுகளில் இட வேண்டும். உடல் இளந்தளிர் முசுக் கொட்டைப் பயிர் இலைகளைக் தூளாக வெட்டிப் புழுக்களுக்குப் போட வேண்டும். முதல் மூன்று நாள்களுக்கு 2 அல்லது 3 மணிக்கொரு முறை இலைகளை மாற்ற வேண்டும். முதலில், புழுக்களுக்கு முழு இலை அளிக்கலாம். புழுக்கள் ஒதுக்கிய இலைகளையும், கழிவுகளையும் உடன் நீக்க வேண்டும். முதல் பருவத்தில், ஒரு புழு 0.1 கி. இலைகளை ஒரு நாளில் உண்ணுகிறது. இறுதிப் பருவத்தில் 5 கிராம் இலைகளை உண்ணுகிறது. புழுப் பருவம் முழுவதும் 90 கிராம் எடையுள்ள இலை களை உணவாக எடுத்துக் கொள்கிறது. இந்த எடை முட்டையிலிருந்து வெளி வந்த புழுவைப் போன்று 30,000 மடங்கு மிகுதியாகும். பொன்னிறமாகத் தோன்றும் இப்புழுக்கள் மூன்று நாள்களில் கூடு கட்டிக் கொண்டு, அதனுள் உறங்கத் தொடங்கும். முழு வளர்ச்சி அடைந்த புழுக்களைச் சந்திரிகை எனும் மூங்கில் தட்டில் 8 செ.மீ. இடைவெளியில் வைக்க வேண்டும். அவை உண்பதைத் தவிர்த்துக் கூட்டுப் புழு நிலைக்குத் தம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளும். பட்டுப் புழுக் கூடு பிரிக்கக் கூடியவாறு, ஒரே இழையால் சுற்றப் பட்டிருக்கும். இக்கூட்டிலிருந்து புழுக்கள் வெளியே வருமேயானால், இழைகள் அறுபடும் என்பதால், கூட்டினுள் இருக்கும் போதே, வெந்நீரில் இட்டு அல்லது சூரிய ஒளியில் வைத்துக் கொல்லப் படுகிறது. இதற்கு வேக வைத்தல் என்று பெயர். இத்தகைய கூடுகள் வளர்ந்த பின்னர், அதன் மேற்புறம் தூய்மைப் படுத்தப் பட்டு, மீண்டும் இள வெப்ப நீரில் ஊற வைத்து, 5 அல்லது 6 கூடுகளின் இழைகள் பிரித்தெடுக்கப் பட்டுச செர் இழையாகச் சுற்றப் படும். இத்தகைய பட்டிற்குக் கச்சாப் பட்டு (saw silk) என்று பெயர். 50% மட்டுமே நூற்கும் பட்டாக மாற்றப் படும். எஞ்சியவை கழிவுப் பட்டாகி விடும். பட்டு மீண்டும் பண்படுத்தப் பட்டு, முறுக்கேற்றப் பட்டு உண்மையான பட்டிழையாகிறது. செர் உயர்ந்த கூடு 1 கிராம் எடை உள்ளது. இதில் 60% புழு எடையும், 40% பட்டு எடையுமாகும். எனவே 1 கி.கி. பட்டு இழைக்கு 60,000 கூடுகள் தேவைப் படும். இதற்கு 1 டன் முசுக்கொட்டைப் பயிர் இலை வேண்டும். ஒரு கூட்டிலிருந்து, 1200 மீ. நீளமுள்ள பட்டு இழை கிடைக்கிறது. பட்டுப் பூச்சி வளர்த்தல், இந்தியாவில் விரைந்து வளர்ந்து வருவதற்குக் காரணங்கள் 1942இல் பிரகாம்பூரில் தொடக்கப் பட்ட மையப் பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமும், 1947இல் தொடங்கப் பட்ட மையப் பட்டுப் பண்ணையுமேயாகும். இத்தகைய மையங்களின் கிளைகள் ஓசூர், மூகூர், சித்கைட்டா ஆகிய இடங்களில், பட்டுப் பூச்சி வளர்ப்போர்க்குப் பயிற்சி அளிக்கின்றன. —முத்து. வரதராசன்