இது பறவைகள் தொகுதியில், கொராசிபார்ம் வரிசையில் கிங்ஃபிஷர் பெருங் குடும்பத்தில் வண்டு உண்ணிக் குடும்பத்தில் அடங்கும். பஞ்சுருட்டான் பறவை, உலகில் காணப் படும் பறவைகளில் மிகுதியான நிறங்களைக் கொண்டு காணப் படும். 50 கி. எடையும் 17–35 செ.மீ. நீளமும் உடையது. அலகு நீளமாகவும், கூர்மையாகவும், கீழ்ப் புறம் சிறிது வளைந்தும் காணப்படும். கால்கள் குட்டையாகவும், சிறியனவாகவும், மீன் கொத்திப் பறவையை ஒத்தும் காணப் படும். இறகுகள் நீளமாகவும், கூர்மையாகவும் காணப் படும். நீலம் கலந்த பசுமை, பசுமை, சிவப்புப் போன்ற நிறங்களில் இறகுகள் காணப் படுகின்றன. தொண்டைப் பகுதி கண் கவரும் நிறத்தில் தோன்றும். சில குருவிகள் நீளமான, வால் பகுதியையும், சில குருவிகள் பிளவு பட்ட வால் பகுதியையும் பெற்றுக் காணப் படும். இக்குருவிகளில் 7 பேரினங்களும், 24 வகைகளும் காணப் படுகின்றன. பஞ்சுருட்டான் பறவை (Bee–eaters) மரங்களிலும் தந்திக் கம்பங்களிலும் மிகுந்து காணப் படும்.கூடு கட்டி முட்டையிடும் தன்மையுடையது. கூடு மணலிலோ, கூரைகளிலோ காணப் படும். பெண் பறவை, உயர் அளவாக 5 முட்டைகள் இடும். புணர்தலுக்கு முன், இரு பால் பறவைகளும், ஒன்றை ஒன்று கவருவதற்காகக் குரல் ஒலி எழுப்பும். இப்பறவை கரப்பான், வண்டு போன்றவற்றை, இறகால் பிடித்து உண்ணும். பூச்சியைப் பிடித்தவுடன், கடினமான பகுதியில் அடித்து, அது செயலிழந்தவுடன் உண்கிறது. பெரும்பாலும், அனைத்து இடங்களிலும் இப்பறவை காணப் பட்டாலும், நியூசிலாந்தில் காணப் படுவதில்லை. மைதானம், காடு ஆகிய பகுதிகளில் காணப் படும் பறவை இடம் பெயரும் தன்மையுடையது. குளிர் காலங்களில், வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இது சென்று விடுகிறது. பச்சை நிற வால் பகுதியை உடைய பஞ்சுருட்டான் பறவை, சிறிய பஞ்சுருட்டான் பறவை எனப் பல வகையுண்டு. இவை சிறியனவாகவும், 7 செ.மீ. நீளம் உடையனவாகவும் காணப் படும். இதன் மேல் பகுதி பச்சை நிறமாகவும், தொண்டைப் பகுதி மஞ்சளாகவும், வால் பகுதி சதுரமாகவும் விளங்கும். ஆப்பிரிக்கா, சஹாரா ஆகிய பகுதிகளில் இப் பறவைகளைக் காணலாம். சிவப்புத் தொண்டைப் பஞ்சுருட்டான் பறவை 26 செ.மீ. நீளம் கொண்டிருக்கும். இப்பறவை செனகல், உகாண்டா, கெமரூன் ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இதன் தொண்டைப் பகுதி, சிவப்பு நிறத்தில் காணப் படும். கறுப்பு நிறப் பஞ்சுருட்டான் பறவை 20 செ.மீ. நீளம் இருக்கும். இது உகாண்டாவில் மிகுந்து காணப் படுகிறது. —அ. சிவானந்தம்