நுண்ணுயிரிகள் பல வகைப்படும். இவற்றுள் நன்மை பயப்பவையும், தீமை பயப்பவையும் உள்ளன. இவை காற்று, நீர், சளி, தோல் ஆகியவற்றின் மூலம் உட்சென்று நோயை உண்டாக்குகின்றன. நில நுண்ணுயிரிகள் குருதி, நிண நீர் மூலமாகப் பரவுகின்றன. நுண்ணுயிரிகள் சில குழந்தைகளை மட்டும் பாதிக்கின்றன. வேறு சில அனைவரையும் பாதிக்கலாம். புணர்ச்சி மூலம் பரவும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றைக் கடத்தும் விலங்குகள், நோய்ப் பரப்பிகள் (vectors) எனப்படும். இவற்றுள் கொசு, தெள்ளுப் பூச்சி, மணல் ஈ, எலி, நாய், ஈ முதலியன அடங்கும். நோய்த் தாக்கத்திற்குரிய நுண்ணுயிரை அறுதியிட்டாலே, உரிய மருத்துவம் அளிக்க முடியும். முதலில், நுண்ணுயிர்களைத் தனிமைப் படுத்த வேண்டும். அதற்குச் சிறுநீர், குருதி. மலம், சளி ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். காச நோய் நுண்ணுயிரை (மைகோபேக்டிரிய வகையைச் சார்ந்தது) ஷல்–நீல்சன் என்னும் வண்ணமேற்றும் முறையால் கண்டு பிடிக்கலாம். லீஷ்மென் சாயமேற்றல், கிராம் முறை, மெத்தலீன் புளு முறை, கியெம்சா முறை ஆகியவற்றால், பெரும்பாலான நுண்ணுயிரிகளைக் கண்டு பிடிக்கலாம். சில நோய்களில் சிறுநீர், குருதி, சளி, மூளைத் தண்டு வட நீர் ஆகியவற்றை ஊட்ட ஊடகங்களிலிட்டு (culture media) அவற்றை வளரச் செய்து, இனங் காணலாம். சீமைப் பெருச்சாளி போன்ற ஆய்வக விலங்குகளினுள் ஊசி மூலம் செலுத்தி, நுண்ணுயிரி வளர்ச்சியை உறுதி செய்து ஆவன செய்யலாம். சிவப்புக் காய்ச்சலில், தொண்டையிலிருந்து பூச்சை (throat swab) ஆய்வு செய்தால், குருதியில் ஸ்ட்ரெப்டோலைசின் எதிர் ‘O’ (anti streptolysin ‘O’ titre-ASO) மிகுந்துள்மையைக் கொண்டு நோய் அறுதியிடலாம். ஊட்ட ஊடகங்களில் வளர்ச்சியடைந்த நுண்ணுயிரிகளைப் பல்வேறு நுண்ணுயிர் எதிர் மருந்துகளின் வினைக்கு உள்ளாக்கிச் சிறப்பாக வினை புரியும் மருந்தை அறிந்து கொள்ளலாம். சில நுண்ணுயிரிகள் புற நச்சுகனையும், சில அக நச்சுகளையும் வெளியிடுகின்றன. இதைப் பொறுத்து நோயின் போக்கு அமையும். —மு.கி. பழனியப்பன் துணை நூல். A.B. Christie, Infectious Diseases, Epidermology & Clinical Practise, Third Edition, Churchill Livingstone, Edinburgh, 1980. வைரஸ். வைரஸ் பாக்டீரியாவை விட உருவத்தில் சிறியது. எளிய அமைப்பு உடையது. இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப் படுகின்றது. இதில் புரோட்டோப் பிளாசம் இராமையால், இது பிற உயிரிகளைச் சார்ந்தே வாழ்கிறது. வைரஸ் தம் வளர்ச்சிக்கும், இனப் பெருக்கத்திற்கும் குறிப்பிட்ட ஓம்புயிரிகளையே நாடுகிறது. வைரஸ் பலவித அளவிலும், அமைப்புகளிலும் காணப்ப டுகின்றது. தாவரங்களைச் சார்ந்துள்ள வைரஸ் குச்சி போன்ற அமைப்பிலும், ஏனைய உயிரிகளைச் சார்ந்து வாழும் வைரஸ் வட்ட உருவத்திலும் காணப் படும். வைரஸ் புரதம் நியுக்ளிய அமிலம் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மேல் தோல், புரதத்தால் ஆனது. டீஆக்சி ரைபோஸ் நியுக்ளிய அமிலம் (DNA), ரைபோஸ் நியுக்ளி அமிலம் (RNA) என நியுக்ளிய அமிலம் இரு வகைப் படும். சில வைரஸ்களில் நியூக்ளிய அமிலம் DNAவாகவும், சில வைரஸ்களில் நியூக்ளிய அமிலம் 10 ஜீன்களையும், சில வைரஸ்களில் நியூக்ளிய அமிலம் 500 ஜீன்கள் வரையிலும் பெற்றிருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் வைரசுக்குப் பாக்டீரியோஃபேஜ் (bacteriophages) எனப் பெயர். இது தலைப் பிரட்டை உருவத்தில் உள்ளது. அறுகோண வடிவில் உள்ள அகன்ற தலைப் பகுதியும், நீண்ட வால் பகுதியும் கொண்டுள்ளது. தலையின் உள்ளே காணப்படுவது நியூக்ளிய அமிலம் ஆகும். வால் பகுதியில், வால் தண்டு (tailcove), வால் உறை (tail fibres) ஆகியன உள்ளன. பாக்டீரியாவின் உடல் சுவரிலிருந்து நீண்ட இழைகள் தோன்றுகின்றன. இவற்றை, நீள் இழை (pill)என்பர். வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்), இந்த நீள் இழைகளுடன் தம் வால் இழைகளால் ஒட்டிக் கொள்கிறது. பிறகு, பாக்டீரியாவின் சுவர் கரைக்கப்பட்டு, வைரசின் நியூக்ளிய அமிலம் பாக்டீரியாவினுள் செல்கிறது. இதன் பிறகு, பாக்டீரியாவினுள் நடைபெறும் இயல்பான வளர் சிதை மாற்றங்கள் (metabolism) நிறுத்தப் பட்டு, அவற்றின் நொதிகளும், நொதிச் செயல் களும் முறியடிக்கப் படும். இதன் பின், பாக்டீரியாவின் நியூக்கிளிய அமிலம் கட்டுப் படுத்தப் பட்டு, வைரசின் நியூக்கிளிய அமில உற்பத்தியில் ஈடு படுத்தப் படும். பாக்டீரியாவின் ஊட்டப் பொருள்கள் யாவும் பயன் படுத்தப் படும். வைரசின் நியூக்ளிய அமிலம் மிகுதியாக உண்டான பின், வைரஸ் புரதச் சுவர்களும் உருவாக்கப் படுகின்றன. இதனால், பாக்டீரியாவின் உடலினுள் எண்ணற்ற வைரஸ்கள் உண்டாகின்றன. இவ்வைரஸ் பாக்டீரியாவின் புறச் சுவர் வெடித்து, வைரஸ் வெளியேறுகிறது. புதிய பாக்டீரியாக்களைச் சென்றடைந்து, தம் வாழ்க்கையைத் தொடர்கிறது. ஏனைய வைரஸ்களும், இம்முறையிலேயே இனப் பெருக்கம் செய்கின்றன. எஸ்செரிச்சியா கோலை (escherichia coli), என்னும் பாக்டீரியாவைத் தாக்கும் வைரசின் இனப் பெருக்க ஆய்வு மூலம் இதனைக் கண்டறிந்தனர். வைரசை மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் வைரஸ், தாவரங்களைத் தாக்கும் வைரஸ், தீங்கற்ற வைரஸ் எனப் பல வகைகளாகப் பிரிக்கலாம். குறிப்பாக, ஆக்சிஜன், நீக்கப் பட்ட ரைபோஸ் கலந்த நியூக்ளிய அமிலம் (DNA) கொண்ட வைரஸ் எனவும், ரைபோஸ் நியூக்ளிய அமிலம் (RNA) கொண்ட வைரஸ் எனவும் இரு பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கலாம். புகையிலை தேமல் வைரஸ் (tobacco mosaic virus), புகையிலைச் செடியின் இழைகளைத் தாக்கும். இந்த வைரசின் நியூக்ளிய அமிலம், ரைபோஸ் நியூக்ளிய அமிலம் (RNA) ஆகும். இளம் பிள்ளை வாத நோய், இன்ஃபுளூயன்சா காய்ச்சல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வைரஸ்களில் சிலவே நியூக்ளிய அமிலங்களாக உள்ளன. ஏனைய வைரஸ்களில் DNA நியூக்ளிய அமிலமாக உள்ளது. அம்மை நோய் வைரஸ் (pox virus). நீர்க் கட்டைத் தோற்றுவிக்கும் வைரஸ் (corona cold virus) போன்றவை தீங்கிழைக் கூடியன. பொதுவாக, மனிதருக்கும், ஏனைய உயிரிகளுக்கும் தோன்றும் நோய்களில் பெரும்பாலானவை இத்தகைய வைரஸ்களாலேயே தோன்றுகின்றன. வைரஸ்களில் பலவித புற்று நோய்கள் உண்டாவதை அறிஞர்கள் விளக்கியுள்ளனர். வைரஸ் சில ஜீன்களை ஒரு பாக்டீரியாவிலிருந்து, மற்றொரு பாக்டீரியாவிற்கு எடுத்துச் செல்வதைக் கடத்துதல் (transduction) என்பர். பாக்டீரியா. இது அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப் படுகிறது. பாக்டீரியாக்களை, நன்மை பயக்கும் பாக்டீரியா, தீமை பயக்கும் பாக்டீரியா எனப் பிரிக்கலாம். பாக்டீரியா அனைத்தும் ஒரு செல் உயிரியாகவே உள்ளன. உயிரி வாழ்வதற்கும், இனப் பெருக்கம் செய்வதற்கும், தேவையான அனைத்துப் புரதங்களையும், நியூக்ளிய அமிலத்தையும், ஏனைய நொதிகளையும், பாக்டீரியா தாமே தயாரித்துக் கொள்கிறது. எனவே, இது உணவும், வசதியும் குறைந்திருக்கும் சூழ்நிலையிலும் செழித்து வளரும் தன்மையைப் பெற்றுள்ளது. இது பாலிலா இனப் பெருக்க முறையில், தன் இனத்தைப் பெருக்கும். தொடர்ந்து பாலிலா இனப் பெருக்க முறையில், தன் இனப் பெருக்க முறைகளால், நாளடைவில் இவ்வினம் வலிவை இழந்து விடும். திடீர் மாற்றங்கள் (mutation) காரணமாக, சில ஜீன்களை இழப்பதால், புரத உற்பத்தித் திறனும் பாதிப்படையும். எனவே, இழந்த வலிவையும், திறனையும் பெறப் பாக்டீரியா பால் இனப் பெருக்க முறையை மேற்கொள்கிறது. இதைப் பாக்டீரியாவின் மறு இணைவு (recombination) என்பர். லீடர்பர்க், ஜெடேட்டம் இ.எல். என்போரால் இது கண்டறியப் பட்டது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பாக்டீரியாவின் மறு இணைவு முறையில் வலிமையிழந்த இரண்டு பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, தாம் இழந்த ஆற்றலைப் பெறுகின்றன. இச்செயலின் போது, இரண்டு பாக்டீரியாக்கள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்ந்து நெருங்கி அமையும். இவ்விரு பாக்டீரியாக்களில் ஒன்று ஆண் உயிரியாகவும், மற்றது பெண் உயிரியாகவும் செயல் படும். இது பாக்டீரியாக்களுக்கு இடையில், இடைச் சுவர்கள் மறைந்து ஓர் இணைப்பு ஏற்படுகிறது. இதனால், இரண்டு பாக்டீரியாக்களின் உள்பொருள்களும் கலக்கின்றன. ஆண் உயிரி வழங்கும் உயிரி (donor) எனவும், பெண் உயிரி ஏற்கும் உயிரி (recipient) எனவும் குறிப்பிடப் படுகின்றன. ஆண் உயிரிகளில் F என்னும் கருவுறல் காரணி (fertility factor) உள்ளது. இவற்றை இணைந்த காரணி (episomes) என்றும் கூறுவர். இரண்டு பாக்டீரியாக்களுக்கிடையே உள்பொருள் கலக்க ஏற்பட்ட இணைப்பிற்கு, இணைவி நாளம் என்று பெயர். இதன் பின், இணைவி பாக்டீரியாக்கள் பிரிந்து, தனித் தனியே பாலிலா இனப் பெருக்கம் மேற்கொள்கின்றன. பாக்டீரியா வட்டம், குச்சி, சுருள் போன்ற பல அமைப்புகளில் காணப் படலாம். இறந்த அல்லது உயிருள்ள உடல்களிலும், அனைத்து (உலகின்) வாழிடங்களில் இது பரவலாகக் காணப் படுகிறது. பாக்டீரிய உருவத்தில், வைரசை விட ஓரளவு பெரியது. இது செல் சுவர் புரோட்டோப் பிளாசம் இவற்றைக் கொண்டும், புரோட்டோப் பிளாசத்தில் பல நுண் உறுப்புகளைக் கொண்டும் உள்ளது. —ஜி.எம். நடராஜன் —அ. ஷேக் தாவூத்