உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை
uṭaṉikaḻccip poruḷ vēṟṟumai
உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை என்பது வாக்கியத்தில் ஒரு பெயர்ச் சொல்லுக்கும் பயனிலையாக வரும் ஒரு வினைச் சொல்லுக்குமிடையே உள்ள பொருள் தொடர்புகள் சில ஒட்டுகளால் சுட்டப்படுகின்றன.
உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை என்பது வாக்கியத்தில் ஒரு பெயர்ச் சொல்லுக்கும் பயனிலையாக வரும் ஒரு வினைச் சொல்லுக்குமிடையே உள்ள பொருள் தொடர்புகள் சில ஒட்டுகளால் சுட்டப்படுகின்றன. தமிழில் அவ்வொட்டுகள் வேற்றுமை உருபுகள் எனவும், பொருள் தொடர்பு வேற்றுமை எனவும் சொல்லப்படுகின்றன. பொதுவாகத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் வேற்றுமைகளை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை என எண் அடிப்படையில் கூறி வந்திருக்கிறார்கள் இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது மூன்றாம் வேற்றுமையில் கருவி, உடனிகழ்ச்சி ஆகிய இரு பொருள் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளமை காணலாம். உடனிகழ்ச்சியாவது ஒரு செயல் இரண்டு வினைமுதல்களால் இயற்றப்படுவது உடனிகழ்ச்சி ஆகும். எடுத்துக்காட்டாக, 1. கண்ணன் இராமனோடு வந்தான் என்னும் வாக்கியத்தில் வருதலாகிய தொழில் கண்ணன், இராமன் ஆகிய இரு வினை முதல்களாலும் நடைபெறுவதால், இவ்வாக்கியம் உடனிகழ்ச்சிப் பொருளைக் கொண்டுள்ளது. மாறாக, 2. கண்ணன் புத்தகத்தோடு வந்தான் என்ற வாக்கியத்தில் வருதலாகிய தொழில் கண்ணனால் மட்டுமே நடைபெறுகிறது. புத்தகம் வருதலாகிய தொழிலைத் தானாகவே செய்ய இயலாது. எனவே, 2–ஆம் வாக்கியம் உடனிகழ்ச்சிப் பொருளை விளக்கவில்லை என்பது புலனாகின்றது. தொல்காப்- பியர் 558–ஆம் சூத்திரம் பிற்பகுதியில் உடனிகழ்ச்சி வேற்றுமை பற்றிக் கூறியுள்ளார்.
அவர் கூறும் நான்குவகை உடனிகழ்வையும் பொருள் அடிப்படையில் பார்த்தால், உடனிகழ்ச்சி வேற்றுமையாக இருக்க முடியுமா என்ற எண்ணம் மேலெழுகிறது. 1. அதனொடு மயங்கல்: (எ.டு.) தேனொடு பால் கலந்தது; 2. அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவி: (எ.டு) சாத்தனொடு கொற்றன் வந்தான்; 3. அதனொடு இயைந்த வேறுவினைக் கிளவி (எ.டு) மலையொடு பொருத மால்யானை; 4. அதனொடு இயைந்த ஒப்பல் ஒப்புரை; (எ.டு.) பொன்னொடு இரும்பனையார் நின்னொடு பிறரே.
பொருளடிப்படையில் (1) உம் (3) இடவேற்றுமையைக் குறிக்கின்றன. (4)–ஆவது ஒப்புமையைக் காட்டுகிறது. (2)–வது மட்டுந்தான் உடனிகழ்ச்சி வேற்றுமையைக் காட்டுகிறது.
தொல்காப்பியர் சூத்திரம் 557–இல், ஒடு என்ற ஒரேயொரு வேற்றுமை உருபையே மூன்றாம் வேற்றுமையில் வரும் கருவிவேற்றுமை, உடனிகழ்ச்சி வேற்றுமை ஆகிய இரு வேற்றுமைகளுக்கும் கூறுகிறார். நன்னூலார் சூத்திரம் 297–இல் மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாக ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவற்றைக் கூறுகிறார். சங்க இலக்கியத்தில் ஒடு, ஓடு, ஆல் போன்ற உருபுகளும் கண், உடன், வயின் போன்ற சொல்லுருபுகளும் உடனிகழ்ச்சி வேற்றுமைக்குப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். இக்காலத் தமிழில் ஓடு என்ற ஒரேயோர் உருபும் உடன், கூட ஆகிய சொல்லுருபுகளும் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக,
5. கண்ணன் மணிவண்ணனோடு விளையாடினான்
6. அவர் காந்தியடிகளாருடன் வந்தார்.
7. இரமணி அப்பா கூடப் போனான்.
சில வேளைகளில் உடனிகழ்ச்சி வேற்றுமை உருபாகிய ஓடு-வும் சொல்லுருபாகிய ‘கூட’ என்பதும் சேர்ந்து உடனிகழ்ச்சி வேற்றுமைப் பொருளைத் தருவதைக் காணலாம்.
(எ.டு) என்னோடு கூட இரமணி வந்தான். வே.சா.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 815)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckrpav2d/
தமிழ்“உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ckrpav2d/APA
Oliyon Research. (2026). உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckrpav2d/MLA
"உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ckrpav2d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment