இளங்குழவி இறப்பு என்பது ஒரு வயதுக்கும் குறைவான இளங்குழந்தைகளின் இறப்புத் தன்மையாகும். ஓராண்டில் பிறக்கும் 1000 குழந்தைகளுள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இளங்குழவி இறப்பு (Infant Mortality) வீதம் கணக்கிடப்படுகிறது. இல்வீதம் குறைவாக உள்ள நாடுகளிலும் சமூகங்களிலும் கருவளம் (Fertility) குறைந்து காணப்படும் எனவும், இளங்குழவி இறப்பு மிகுதியான சமூகங்களில் கருவளம் மிகுந்து காணப்படும் எனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் இறப்பு பிறந்த சில மணித்துளிகள், சில மணி நேரம், நாட்கள், வாரம், மாதம் என்ற வாழ்வுக்காலத்தில் மிகுந்து கொண்டே செல்கிறது. இளங்குழந்தைகளின் வாழ்க்கைத் தொடக்க நிலையிலும் அதன் பிற்பட்ட நிலையிலும் ஏற்படும் இறப்புகள் குறிப்பிட்ட அளவில் மாறுபடுகின்றன. எனவே, இளங்குழவி இறப்பை மிகவும் கவனமாக, ஆய்வு முறையில் இறப்பு நிகழும் வயதை அடிப்படையாகக் கொண்டு இருவகையாகப் பிரித்துள்ளனர். முதல் வகை, நான்கு வார கால வாழ்வைக் கடக்கு முன்பே இறந்து போகும் இளங்குழந்தைகளைக் கொண்டது. இக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இறப்பு வீதம், பிறப்பின் முந்தைய இறப்பு வீதம் (Neonatal Mortality Rate) எனப்படும். இரண்டாம் வகை 28 நாட்கள் முதல் 365 நாட்களுக்கிடையில் இறந்த இளங்குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். இக்காலத்தின் மீதான இறப்பு வீதம் பிறப்பின் பிந்தைய இறப்பு வீதம் (Post Neo Natal Rate) எனக் கூறப்படுகிறது. அண்மைக் காலத்தில் உலகமெங்கும் பொது இறப்பு வீதம் வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. இது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பொதுவானது. ஆனால், அதன் அளவு பல்வேறுபட்ட வயதுகளில் பலவாறாக வேறுபடுகிறது. இளம் வயதுப் பிரிவினரின் இறப்பு, குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இளங்குழவி இறப்பு வீதத்தின் குறைந்த அளவானது பொது இறப்பு நிலையின் குறைந்த அளவோடு தொடர்பு கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் (United Nations) வெளியிட்ட உலக நாடுகளின் இளங்குழவி இறப்பு வீத அட்டவணையிலிருந்து 1970–ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலத்தில் நிலவிய இளங்குழவி இறப்பு நிலையை அறியலாம். அட்டவணை–1 வளர்ச்சி பெற்ற நாடுகளில் (சப்பான் தவிர்த்து) 1950–1975–ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 4 முதல் 5 விழுக்காடு அளவு வரையில் இளங்குழவி இறப்பு குறைந்துள்ளது. அக்காலத்தில் இளங்குழவி இறப்பு வீதம் சப்பானில் 7 முதல் 8 விழுக்காடாகவும் அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 விழுக்காடாகவும் இருந்தது என இதன் தொடர்பான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றைக் குறித்த புள்ளி விவரங்களைப் பதிவு செய்யும் முறை, முழு விவரங்கள், காரணங்கள், காலம் ஆகியவை முழுமையற்றனவாகவும் முறையற்றனவாகவும் நாட்டுக்கு நாடு வேறுபட்டவையாகவும் காணப்படுவதால், தெளிவான ஒப்பீட்டு விளக்கங்களை அறிய இயலாத நிலை காணப்படுகிறது. எதிரிடையான நிகழ்ச்சிகள் (Unfavourable Events), இயற்கையின் கொடுமைகள் (Natural Calamities), சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றின் காரணமாகச் சில நாடுகளில் இளங்குழவி இறப்பு வீதம் உயர்ந்து, ஏற்றத்தாழ்வுகள் (Fluctuations) ஏற்பட்டிருக்கின்றன. வங்காள தேசத்தில் 1970–ஆம் ஆண்டில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையினால் இளங்குழவி இறப்பு அக்காலத்தில் மட்டும் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. பிரேசில் நாட்டில் 1960–70–ஆம் ஆண்டுக் காலங்களில் காணப்பட்ட உயர்ந்த 48 விழுக்காடு இளங்குழவி இறப்பிற்கும், அக்காலத்தில் நிலவிய மிகக் குறைந்த உண்மை ஊதிய (Real Minimum wage) நிலைமைக்கும் தொடர்பு உள்ளது எனக் கருதப்படுகிறது. இளங்குழவி இறப்பு வீத மதிப்பீட்டின்படி (Estimates) அவ்வீதம் உயர்வாக உள்ள இடங்களில் ஒரு வயதிற்கும் 5 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் (Child Mortality Rate) உயர்வாக இருப்பதற்கான இடர்ப்பாடுகளும் (Risks) வாய்ப்புகளும் மிகுதியாக உள்ளன எனக் கூறப்படுகிறது. அதற்கு அவ்விடங்களில் பொதுவாக நிலவும் ஊட்டச்சத்துக் குறைவும் தொற்றுநோய்ப் பரவலும் வயிற்றுப்போக்கும் குறிப்பிடத்தக்க காரணங்களாகும். ஆப்பிரிக்காவில் உலகிலேயே பேரளவிலான இளங்குழவி இறப்பு நிகழ்வதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. அங்குப் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு 40 குழந்தைகளே ஓராண்டுக்கு மேல் உயிர் வாழ்கின்றன; எஞ்சியவை இறக்கின்றன. இக்கணக்கீடு வளர்ச்சியடைந்த நாடுகளின் வீதத்தைவிட 40 மடங்கு மிகுதியானது. இளங்குழவி இறப்பிற்கான காரணிகள் இருவகைப்படும். அவை அகக் காரணிகள், புறக் காரணிகள் எனப்படும். அகக் காரணிகள் உயிரியல் சார்ந்தனவாகவும், புறக்காரணிகள் சமூகப் பொருளாதார சூழ்நிலைகளைச் சார்ந்தனவாகவும் பகுத்தாராயப்பட்டுள்ளன. இவ்விரு காரணிகளுக்கும் உள்ளார்ந்த செயல் விளைவுகள் பெருமளவில் இருப்பதால், இவ்வகைப் பாகுபாடு செயற்கையானதாகவே விளங்குகிறது. சமூகப் பொருளாதார நிலைக் காரணிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக உயிரியல் காரணிகளில் சில மாற்றங்களை உண்டாக்க இயலும். அகக் காரணிகள் இக்காரணிகள் கருப்பையிலிருக்கும் கருவின் (Foetus) அமைப்போடு (Congenital) தொடர்பு கொண்டதாகவும், குழந்தை பிறக்குமுன் (Pre Natal) தேவைப்படும் கவனம் செலுத்தாமை தொடர்பானதாகவும், குழந்தைப் பிறக்கும்போது (Birth Process) தேவையான கவனக் குறைவு தொடர்பானதாகவும் இருக்கும். இறப்புகளானதால் இவை உயிரியல் காரணிகளாகும். கரு, பிறப்பின் முந்தைய நிலை ஆகியவற்றினால் ஏற்படும் இளங்குழவி இறப்புகளுக்குத் தலையாய காரணிகளாக விளங்குவன: (1) தாயின் வயது (2) பிறப்பின் எண்ணிக்கை வரிசை (3) பிறப்புகளுக்கிடையேயான கால இடைவெளி (4) கரு முதிர்ச்சியின்மை (5) பிறக்கும் குழந்தையின் எடை (6) ஒன்றுக்கு மேற்பட்ட பிறப்புகள் போன்றவை. இவற்றுள்ளும் தாயின் வயது, தாய்மையின் வரிசை எண், பிறப்பின் வரிசை எண் ஆகியவை மிகவும் ஆழ்ந்து பகுத்தறியப்பட்டுள்ளன. பிறப்பின் முந்தைய இறப்பு வீதங்கள் தாயின் இளம் வயதில் மிகுந்து காணப்படுவது புள்ளி விவரங்களுடன் அறியப்பட்ட உண்மையாகும். இவ்விறப்பு வீதங்கள் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட தாய்மையின் முதல் தடவையிலும், முதல் பிறப்பிலுமே பொதுவாக நிகழ்கின்றன. படிப்படியாக வயது ஏற ஏற 29 வயது வரையில் குறைந்து வருகின்றன. இவ்வாறாகவே இரண்டாம் மூன்றாம் பிறப்பு வரிசைகளில் குறைந்தும், பின்னர் மறுபடியும் தாயின் வயது, தாய்மையின் வரிசை எண், பிறப்பின் வரிசை எண் போன்றவை உயர உயர இறப்பு வீதமும் உயர்கிறது. இக்காரணிகளின் அடிப்படையில் நிகழும் இறப்பு தாளில் வீதப் புள்ளிவிவரங்களை வரைகட்டத் (Graph Sheet) குறித்து வரைந்தால் அது ‘U’ வடிவ வளைகோடாகத் தோற்றமளிக்கும். பிறப்பின்போது இளங்குழந்தையின் முதிர்ச்சியும் எடையும், பிறப்பின் முந்தைய இறப்பிற்கும் பிந்தைய இறப்பிற்கும் முதன்மையான காரணிகளாகக் கூறப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1960–ஆம் ஆண்டு வாக்கில் பிறந்த குழந்தைகளின் எடை மிக- வும் குறைவாயிருந்ததாலேயே பிறப்பின் முந்தைய இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்களவுக்கு இறந்துள்ளன. குழந்தைகளின் எடை கூடுவதால் குறிப்பிடத்தக்க வகையில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளதாகவும், 3501 முதல் 4000 கிராம் வரையான எடையே குழந்தை உயிர் வாழ்வதற்கு உகந்த எடையாகவும் கண்டறிந்துள்ளனர். பன்மைப் பிறப்புகளில் செத்துப் பிறத்தலின் வீதமும், பிறப்பின் முந்தைய இறப்பு வீதமும் மிகையானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், இவை பெரும்பாலும் மரபுவழிக் காரணிகளால் ஏற்படுகின்றன என்பதை அறியவேண்டும். புறக் காரணிகள் இளங்குழவி இறப்பில், குறிப்பாகப் பிறப்பின் பிந்தைய கால இறப்பில் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைக் காரணிகள் சிறப்பான பங்கேற்கின்றன. தவறான பாலூட்டும் முறையினாலும், ஊட்டச்சத்துக் குறைவினாலும், தூய்மைக் கேடுகளின் காரணமாகவும் இவ்விறப்புகள் நிகழ்கின்றன. நெருக்க மிகுதியுடன் (Density) தூய்மைக் கேடு வாய்ந்த சூழ்நிலையைக் கொண்டு, காற்றோட்ட வசதியற்றதும், போதுமான சூரிய ஒளியைக் கொண்டிருக்காததுமான குடியிருப்புகளில் சூழ்நிலைக் காரணிகளின் செயலாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. அறியாமை, கல்வியறிவின்மை, சமுதாய மூடப்பழக்க வழக்கங்கள், சமூகப் பண்பாடுகள், மதச் சடங்குகள் சார்பான காரணிகளும் புறக் காரணிகளுள் அடங்கும். கல்வியறிவு பெற்ற பெண்களின் குழந்தைகளிடையே பிறப்பின் முந்தைய மற்றும் பிந்தைய இறப்பின் வீதம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. சட்ட முறைப்படியல்லாத (Illegal) பிறப்புகள் மிகுதியான இளங்குழவி இறப்புக்கு முதல் காரணங்களாகின்றன. சட்டப்படியான மற்றும் சட்டப்படியல்லாத இளங்குழவி இறப்பு வீதங்களுக்கிடையான வேறுபாடுகள் மிகவும் மிகுந்து காணப்படுகின்றன. இதற்கான காரணமும் வெளிப்படையான ஒன்றே ஒரு பெண்ணுக்குத் திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்தாலும், தாய் தந்தை உறவுகளில் சிக்கல்கள் இருந்தாலும், அக்குழந்தையைத் தாயும் சமூகமும் கூடப் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதன் விளைவாக அக்குழந்தைக்குத் தேவையான கவனமும் ஊட்டச்சத்தும் பிற வசதிகளும் கிடைக்கப் பெறாமல் இறந்து போவது உண்மையே. இந்தியாவில் இந்தியாவிற்கான இளங்குழவி இறப்பு வீதங்கள் பல்வேறு கால அளவுகளுடன் கீழ்க் காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உதவியுடன் இறப்பின் போக்கையும் அறிந்து கொள்ளலாம். அட்டவணை 2 இந்தியாவில் இளங்குழவி இறப்பு வீதம் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. அட்டவணையில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் 1931–ஆம் ஆண்டு வரை உயிரோடு பிறந்த 1000 குழந்தைகளில் 200க்கும் அதிகமான குழந்தைகள் ஒரு வயதைக் கடக்குமுன்பே இறந்துள்ளன. இந்தியாவில் 1901–1911–இல் இருந்த 287.3 என்ற அளவே மிக உயர்ந்த இளங்குழவி இறப்பு வீதமாகும். இது 1983–இல் 122 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது இளங்குழவி இறப்பு வீதம் 100 விழுக்காடுக்கும் மேலாக குறைந்திருந்த போதிலும், இப்பொழுது காணப்படும் இளங்குழவி இறப்பு வீதத்தைக் குறைந்ததென்று மதிப்பிடலாகாது. ஏனெனில், வளர்ச்சியடைந்த நாடுகளில் இளங்குழவி இறப்பு வீதமானது 30க்கும் குறைவானதாகும். இந்தியாவில் இளங்குழவி இறப்பு வீதம் இந்த அளவிற்காவது குறைந்திருப்பது மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும், அதன் காரணமாகப் பெருமளவில் இளங்குழவி இறப்பிற்குக் காரணமான நோய்கள் அழிக்கப்பட்டதும், சத்துள்ள உணவுகளைக் குழந்தைகளுக்கு அளிக்க வகை செய்ததும். சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கும் உடல்நலத்தைப் பேணிக்காப்பதற்கும் சிறப்பிடம் கொடுக்கப்பட்டதும் ஆகிய காரணங்களினாலேயே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் இளங்குழவி இறப்பு வீதம் உயர்ந்து காணப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 1921–25-இலிருந்து 1966–70 வரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் சராசரி ஆண்டு இறப்பு வீதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இளங்குழவி இறப்புப் பற்றிய விவரங்கள் அவ்வளவு போதுமானதாகவும் நம்பத் தகுந்ததாகவும் இல்லாதபோதுங்கூட, கிடைக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழ் நாட்டில் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் உள்ள காலங்களில் (1921–25, 1936–40) இளங்குழவி இறப்பு வீதம் மிகவும் உயர்ந்திருந்தது. ஆனால், போருக்குப் பிறகு மருத்துவத்திலும் மற்றும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததன் காரணமாக இளங்குழவி இறப்பு வீதமானது, 1941–45–இல் 171–இலிருந்து 1966–71–இல் 63–க்கு மிகவும் அட்டவணை 3 (Period) !! இளங்குழவி இறப்பு வீதம் (Infant Mortality Rate) விரைவாகக் குறைந்திருக்கிறது. இந்தச் சரிவு 100 விழுக்காட்டிற்கும் மிகுதியானதாகும். ஆகையால் தமிழ்நாட்டில் இளங்குழவி இறப்பு வீதம் அண்மைக் காலங்களில் மிகவும் சரிந்து வருவது தெளிவாகிறது. இளங்குழவி இறப்பு வீதம் மிகக் குறைவான அளவில் இருக்கும் நாடுகளில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேலான இறப்புகள் பிறப்பின் முந்தைய நிலைகளில் ஏற்படுவதேயாகும். ஏனெனில் அந்நாடுகள். தத்தம் பொருளாதார முன்னேற்றத்தால் இறப்புகளுக்குக் காரணமான சூழ்நிலைக் காரணிகளை முழு அளவிற்குத் தவிர்த்துவிட்டன. எனவே, இந்நாடுகளில் இளங்குழவி இறப்புக்கான முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுபவை மரபு வழி அல்லது உயிரியல் காரணிகளே. இதற்கு மாறாக இளங்குழவி இறப்பு மிகுதியாகக் காணப்படும் நாடுகளில் பெரும்பாலும் இவ்விறப்புகள் சூழ்நிலைக் காரணிகளால் பிறப்பின் பிந்தைய நிலைகளில் ஏற்படுகின்றன. துணை நூல்கள் Chandrasekhar, S., Infant Mortality – Population Growth and Family Planning in India, George Allen and Unwin, London, 1972. Donald Bogue, J., Principles of Demography, John Wiley and Sons, New York, 1969. Henry Shrycock et. al., The Methods and Materials of Demography, Bureau of Census, Washington, 1971. Census of India–1961, Demography and Vital Statistics, Government of India, Madras, 1969. Agarwala, S.N., India's Population Problem, Tala Mc Graw Hill Publishing Company Limited, New Delhi, 1977.