சூழல் தடைகள்
cūḻal taṭaikaḷ
ஓரிடத்தின் சூழல் பல்வேறு சூழ்நிலைக் காரணிகளால் அறுதியிடப்படுகிறது.
ஓரிடத்தின் சூழல் பல்வேறு சூழ்நிலைக் காரணிகளால் அறுதியிடப்படுகிறது. பல்வேறு சூழ்நிலைத் தடைகளான (ecological barriers) சூரிய ஒளி, வெப்ப நிலை, நீர், ஊட்டச் சத்து, உயிர்க் காரணிகள் ஆகியவை வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கின்றன. சில காரணிகள் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, ஓரிடத்தின் தாவர இனத்தை ஒளி நேரடியாகப் பாதிக்கிறது. அதே சமயத்தில், சூழ்நிலையின் தன்மைகள் அனைத்தும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. இவை யாவும் இணைந்து, ஓரிடத் தாவரத்தின் சமூகத்திற்கு அடிப்படையாகின்றன. அனைத்துத் தாவரங்களும், பொதுவாக ஒரே தேவையைக் கொண்டுள்ளமையால், தாவரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
நீர், ஊட்டச் சத்து, சூரிய ஒளி முதலிய தன்மைகள் தகுந்த அளவு இல்லாத போதோ, வளர்ச்சிக்கேற்ற வெப்ப நிலை இல்லாத போதோ தாவர இனங்கள் ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்து வாழா. சூழ்நிலைக் காரணிகளில் பற்றாக் குறை பெருகும் போது, அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வது கடினமாகும். சூழல் ஏற்புத் திறன் கொண்ட சில தாவரங்கள் (ecotypes) மாறுபட்ட சூழ்நிலைத் தடைகள் உள்ள இடங்களில் வளர்வதற்குப் பல்வேறு புறத் தகவமைப்புகளையோ, தகுந்த வினையியல் மாற்றங்களையோ கொண்டு தனித்து விளங்குகின்றன.
இயற்கையில் தாவர இனங்கள் போதுமான வளர்ச்சியைக் கொண்டிருந்த போதும், பெரும் போட்டியின் காரணமாக, நிலைத்த தன்மையைப் பெறாமலும் போகலாம், மண்ணின் அமில–காரத் தன்மை, உவர் களர் நிலங்கள், அதிக வெப்பம் அல்லது உறை பனி, ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதிப்பு, காற்றோட்டமின்மை போன்ற சூழ்நிலைத் தடைகள், தாவர இனங்கள் குறிப்பிட்ட இடத்தில் செழித்து வளர்ந்து நிலைத்து நிற்கவோ, வளராமல் அழியவோ காரணமாக உள்ளன. மேற்கூறிய தடைகளைத் தவிர, கடினமான சூழ்நிலையில் ஒரு தாவர இயல் வளர, அதன் தகவமைப்புகளும், வினையியல் ஆற்றல்களும் காரணமாக உள்ளன.
தாவர இனங்கள் ஓரிடத்திலிருந்து புதியதோர் இடத்திற்குப் பரவவும், புதியதொரு சூழ்நிலையில் வளரவும், பல்வேறு சூழ்நிலைத் தடைகள் காரணமாகின்றன. இவற்றில் சில நிலையில்லாத் தடைகளாகவோ, நிலையான தடைகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக, மலைத் தொடர், அமில–கார நிலங்கள், திறந்த புல் வெளிகள், நில அமைவு (topography), பயிர் செய்யும் முறைகள், எரித்தல் முதலியனவாகும். நிலையில்லாத் தடைகள் சில ஆண்டுகள் நிலைத்து நிற்கும். நீர் தேங்கியுள்ள குட்டைகள், பெரிய ஏரி முதலானவை முழுமையற்ற அல்லது முழுமையான தடைகளாகவும் இருக்கலாம். இவை, சில நீர்த் தாவரங்கள் அல்லது நிலத் தாவரங்கள் பரவுதலுக்குத் தடைகளாக உள்ளன.
நீர் நிரம்பியுள்ள ஏரி, நிலத் தாவரங்களும் வறள் நிலத் தாவரங்களும் வளரத் தடையாக உள்ளது. வறண்ட பாலைவனங்கள் புது வகைத் தாவரங்கள் வளர ஏற்றவாறு இல்லை. உயிர்க் காரணித் தடைகளான மனிதன், விலங்கு, ஒட்டுண்ணித் தாவரங்கள் (parasites) முதலியன புதியதொரு தாவரக் கூட்டம் பரவி, நிலைக்கத் தடைகளாக உள்ளன. நிழல் தாவரங்கள் திறந்த புல் வெளிகளில் வளரா. அவ்வாறே, அடர்ந்த காடுகளில் காணப்படும் குறைந்த சூரிய ஒளி, அதிக நீர் முதலான ஒளி நாட்டத் தாவரங்கள் (sun-loving plants) வளரத் தடைகளாக உள்ளன. மனிதன், விலங்கு, வெள்ளம் முதலானவை புதிதாக ஒரு தாவர இனம் அமையவோ, அங்குள்ள தாவர இனம் அழியவோ காரணமாக உள்ளன. மகரந்தச் சேர்க்கைக்குத் தேவையான குறிப்பிட்ட வண்டினங்கள் ஓரிடத்தில் இல்லாவிடில், குறிப்பிட்ட தாவரங்கள், இனப் பெருக்கம் செய்ய இயலாமல் அழிந்து விடும். இவ்வாறு சில சூழ்நிலைத் தடைகள் தாவர இனங்கள் பரவுவதற்குத் தடைகளாக உள்ளன.
மண்ணின் அமில–காரத் தன்மை சில தாவர இனங்கள் நன்கு வளரவும், வேறு சில தாவரங்கள் வளரத் தடையாகவும் உள்ளது. மண்ணின் pH 4 க்குக் கீழும், pH 9க்கு மேலும் இருந்தால், தாவரங்கள் வளரா. தாவரங்கள் வளர்வதற்குத் தேவையான தாதுப் பொருள்கள் அல்லது ஊட்டச் சத்துகள், அதிக அமில–கார நிலங்களில் பயனற்றவையாக மாற்றப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, அமில நிலங்களில் இரும்புச் சத்து, மாங்கனீஸ், அலுமினியம் போன்றவை நச்சுத் தன்மை உண்டாக்கும் அளவில் பெருகித் தாவரங்கள் அழியக் காரணமாக உள்ளன. கார நிலங்களில், மண்ணின் செயல்களால், ஊட்டச் சத்துகள் பயனற்ற அயனிகளாக மாற்றப்பட்டுத் தாவர வளர்ச்சிக்குக் கிடைப்பதில்லை. நிலத்தில் 0.5%க்கு மேல் உப்புகள் இருக்குமேயானால், தட்ப வெப்ப நிலை அல்லாமல், நிலத்தின் தன்மையே, தாவர சமுதாயத்தை அமைக்கிறது.
குதிரை மசால் தாவரம் pH 7–7.5 வரை உள்ள நிலத்தில் நன்கு வளரும். ஓட்ஸ் தாவரம் குறிப்பாக pH 5 உள்ள நிலத்தில் செழித்து வளரும். உவர் நிலங்களில் வளரும் தாவரங்கள், பல புறத் தகவமைப்புகளைப் பெற்றுள்ளமையால், வேறுபட்ட சூழ்நிலையிலும், சூழ்நிலைத் தடைகளால் பாதிப்பின்றி வளரும். இத்தகைய தாவரங்களின் வேர்ப் பகுதி நீண்டும், தண்டுப் பகுதி சதைப் பற்றுடனும், பச்சையத்துடனும் காணப் படுகின்றன. கனிகளிலேயே விதை முளைக்கும் திறன், குறைவான நீராவிப் போக்கு போன்ற தகவமைப்புகளையும் கொண்டு, தனித் தன்மையுடன் வளருகின்றன. பிற தாவரங்கள் உவர் மண்ணில் நன்கு வளரா.
ஒரு தாவர சமூகம் ஓர் இடத்தில் நிலைத்து வளர, நில நீரின் அளவு முக்கிய காரணமாக உள்ளது. ஈரமான இடத்தில் வளரும் தாவரங்கள், வளி மண்டலத்தில் ஈரம் மிகுந்துள்ள இடங்களிலேயே வளர வல்லன. பெரணி வகைகள் ஈரம் நிறைந்த நிழலான வெப்ப மண்டலக் காடுகளிலேயே மிகுதியாக வளரும். மலையைக் கடக்கும் வெப்பக் காற்று உயரே சென்று, சரிவில் பொழிகிறது. கடலை நோக்கி இருக்கும் மழைச் சரிவில் மழை மிகுந்தும், நிலப் பக்கத்தை நோக்கி இருக்கும் சரிவில் மழை குறைந்தும், இருக்கும். இவ்விரு பக்கங்களிலும் வளரும் தாவர வகைகள், பெய்யும் மழையின் அளவிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.
வெப்ப நிலை, தாவரங்களில் அளவியலான மாற்றங்களையும், பண்பியலான மாற்றங்களையும் உண்டாக்குகிறது. மித வெப்பப் பகுதித் தாவரங்கள் 5°Cக்கு வளருவதில்லை. அதிக வெப்ப நிலையில் வளரும் தாவரங்கள், அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் பெற்றோ, புறத் தகவமைவுகளால் அதிக வெப்பத்தைத் தவிர்த்தோ வளர்கின்றன. பிற சாதாரண நிலத் தாவரங்கள், அதிக வெப்பத்தைத் தாங்கி வளர இயலாமல் அழிந்து விடுகின்றன. காற்றின் வேகமும், இலைப் பரப்பின் அளவும், இலையின் வெப்ப நிலைக்கு அடிப்படையாகின்றன. வறண்ட சூழ்நிலையில் காற்றின் வெப்ப நிலை 45°Cக்கு அதிகமாவதால், அகன்ற இலையுடைய தாவரங்கள் அழுகி விடுகின்றன. ஆதலால், சிறிய இலைகளையுடைய தாவரச் சமூகமே வெப்பமான வறண்ட சூழ்நிலைகளில் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறனைக் கொண்டு வளரும்.
உறை பனியின் தாக்குதலிலிருந்து, தாவரங்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் பல தகவமைப்புகளையும், வினையியல் தன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோஸ், கோதுமை, இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் முதலியன குறைந்த வெப்ப நிலையில் கடினமாதல் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டு, பிறகு உறை பனியைத் தாங்கும் திறனைப் பெற்று வளர்கின்றன. ஒரு தாவரம் வளர ஏதுவான இயங்கு நிலை, அதனுடைய மரபு வழிச் செயல் ஆக்க முறையால் (physiological genetics), கட்டுப்படுத்தப் படுகிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும், சில தாவரங்கள் கடினமாகும் தன்மை அடைகின்றன. இவ்வகைத் தாவரங்கள் 55°Cக்கு வெப்பத்தையும் தாங்கி வளர வல்லவை.
மண் வாழ் உயிரிகளில் பல நுண்ணுயிர்கள் செயல்படும் போதே, ஒவ்வொரு வேதி நிலையும் இயங்கி இடைப் பொருள் கிடைக்கும். மேட்டுப் புவியில் இலைமட்கு (peat) உண்டாவதற்கு வெப்ப நிலை ஏற்றதாக இருக்க வேண்டும். காற்றோட்டம் குறைவாக உள்ள நிலத்தில், ஒடுக்கும் செயல்கள் (reduction reaction) மிகுதியாக நிகழ்வதால், அவை தாவர இனங்கள் வாழத் தடையாக உள்ளன. குறைந்த காற்றோட்டத்தால், மண்ணில் வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சியடையா. மேலும், நச்சுப் பொருள்கள் குறைவான காற்றோட்டமுள்ள இடங்களில் உண்டாவதால், அவை தாவரங்கள் வளர்ந்து நிலைத்து நிற்கத் தடையாக உள்ளன. மேற்கூறிய சூழ்நிலைக் காரணிகளால் ஏற்படும் தடைகளைக் குறிப்பிட்ட சில தாவர இனங்கள் வென்று நிலைத்து நிற்கின்றன. வேறு வகைத் தாவரங்கள் மாறுபட்ட சூழ்நிலைத் தன்மைகளில் வளரா. ஓரிடத்தின் நில அமைப்பு, தட்ப வெப்பக் காரணிகளைப் பொறுத்துத் தாவர சமுதாயம் அமைகிறது.
—கு. பத்மநாபன் நூலோதி. H. G. Jones, Plants and Microclimate, Cambridge University Press, Cambridge, 1983; A.C.Leopold and P.E. Kriedemann, Plant Growth and Development, Tata McGraw-Hill Pub. Co.. New Delhi, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 705)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cje9wfpf/
தமிழ்“சூழல் தடைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cje9wfpf/APA
Oliyon Research. (2026). சூழல் தடைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cje9wfpf/MLA
"சூழல் தடைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cje9wfpf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment