சுழல் தாரை
cuḻal tārai
வானூர்தியைச் செலுத்த உதவும் ஒரு வகை எந்திரம் சுழல் தாரை (turbo jet) எனப்படுகிறது.
வானூர்தியைச் செலுத்த உதவும் ஒரு வகை எந்திரம் சுழல் தாரை (turbo jet) எனப்படுகிறது. பெரும்பாலும், சுழல் தாரையே முதன் முதலில் வானூர்திகளுக்குச் செலுத்தம் உருவாக்கப் பயன்பட்டதாக அறியலாம். பிற வகைத் தாரை எந்திரங்கள் அனைத்துமே சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்ட சுழல் தாரையே ஆகும்.
சுழல் தாரை—செயல்பாடு. இதில் உள்ள உள்ளீர்ப்பு விரவி (inlet diffuser) காற்றை எந்திரத்தின் உள்ளே இழுக்கிறது. இவ்வாறு இழுக்கப் பட்ட காற்று, அழுத்தியுள் (compressor) செலுத்தப் படுகிறது. மிகை ஓலி வேகப் பறப்பில் காற்று உள்ளிமுக்கப்படுவதால், உள்ளீர்ப்புக் குழாயில் கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், உள்ளீர்ப்புக் குழாயின் உட்புறச் சுவர்களைச் சீரமைப்பதன் மூலம், அதிர்ச்சியின் விளைவைக் குறைக்கலாம். உள்ளிழுக்கப்பட்ட காற்றின் அழுத்தம், அழுத்தத்தின் மூலம் மிகுதியாக்கப்படுகிறது. அழுத்திகள் அச்சுப் பாய்வு அல்லது மைய விலக்கு வகையாக இருக்கலாம்.
அச்சுப் பாய்வு வகை அழுத்திகளில், நீள் அச்சுத் தண்டு ஒன்றில் மின் விசிறி போல் சிறு சிறு அலகுகள் (அச்சுத் தண்டைச் சுற்றிலும்) பொருத்தப்பட்ட பல சக்கரங்கள் அச்சுத் தண்டு நெடுகிலும், அடுத்தடுத்து அமைக்கப்படுகின்றன. சுழலி அலகுகள் அழுத்தியின் சுவரிலிருந்து அமைக்கப்படுகின்றன. காற்று உள் நுழைகையில், முதல் சுழலி காற்றை அழுத்தி முதல் நிலை அலகிற்குத் தள்ளுகிறது. இந்த நிலை அலகுகள், காற்றைத் திசை மாற்றி இரண்டாம் சுழலிக்குள் செலுத்துகின்றன. இவ்வாறு, அடுத்தடுத்து அழுத்தம் ஏற்றப்படுவதால், உள் நுழையும் காற்றின் அழுத்தத்தைப் போல் ஏறக் குறைய 30 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் காற்று வெளி வருகிறது.
மைய விலக்கு அழுத்திகளின் மையப் பகுதியில், காற்று உள் நுழைந்து, சுழலும் அழுத்தியினால் அழுத்தப்பட்டு, வெளிப் புறமாகத் தள்ளப்படுகிறது. அச்சுப் பாய்வு அழுத்தியில் உள்ளது போல, இங்கு அடுத்தடுத்து அழுத்தம் ஏற்ற இயலாது. எனவே, வெளியேறும் காற்று, உள் நுழையும் காற்றினைப் போல் ஆறு மடங்கு மட்டுமே அழுத்த முடியும்,
இவ்வாறு ஏதேனும் ஓர் அழுத்தியின் மூலம் அழுத்தம் ஏற்றப்பட்ட காற்று எரி அறையினுள் செலுத்தப்படுகிறது. இங்கு 25—40% வரையிலான காற்று எரி பொருளுடன் கலந்து எரிகிறது. இந்தக் கனற்சியினால், வளிமங்களின் வெப்ப நிலையும், அழுத்தமும் உயரும்.
எரி அறையிலிருந்து வெளிப்படும் சூடான வளிமம், சுழலி (turbine) அலகுகளின் ஊடே அனுப்பப்படுகிறது. இந்தப் பாய்வின் போது, நகரும் வளிமம் சுழலியின் அலகுகளில் மோதிச் சுழலியை இயக்குகிறது. இந்தச் சுழலியின் தண்டு அழுத்தியோடு இணைக்கப்பட்டிருப்பதால், இச்செயல் அழுத்தியை இயக்கும் என்பதை உணரலாம். சுழலியைத் தாண்டியதும், வளிமம் மூக்குக் குழாயை (nozzle) அடைந்து, வேகமாக வெளியேறும் போது, எதிர் விளைவாக உந்து ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் வளிம வேகம், மணிக்கு 1,600 கி.மீ. வரை இருப்பதுண்டு. மிகை ஒலி வேகப் பறப்பிற்கான மூக்குக் குழாய்கள் முதலில் குறுகிப் பின்னர் விரிகின்றன. இந்த அமைப்பின் மூலம், வளிமத்தின் வேகம் உயர்த்தப்படுகிறது.
சில வகைத் தாரைகளில், பின் எரிப்பான் அமைத்தலும் உண்டு. பொறியின் உந்து ஆற்றலைப் பின் எரிப்பான் மூலம் உயர்த்தச் செய்யலாம். சுழலிக்கும், மூக்குக் குழாய்க்கும் இடையே பின் எரிப்பான் பொருத்தப்படுகிறது. எரிந்து மூக்குக் குழாயை நோக்கி வரும் வளிமங்களில், ஆக்ஸிஜன் மிகுதியாய் இருக்கிறது. பின் எரிப்பானில் எரியூட்டப்பட்டால், ஆக்ஸிஜனின் உதவியால் நன்கு எரிந்து, வளிமங்களின் வெப்ப நிலை மிகவும் உயருகிறது. இவ்வாறு திறன் உயர்த்தப்பட்ட வளிமம், மூக்குக் குழாய் வழியே வெளியேறும் போது, மிகுதியான உந்தத்தை உருவாக்கிறது. ஆனால், பின் எரிப்பானில் எரி பொருள் செலவாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். —வயி. அண்ணாமலை —அ. சேதுநாரயணன் நூலோதி. P.L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 548)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cj3vxgeg/
தமிழ்“சுழல் தாரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cj3vxgeg/APA
Oliyon Research. (2026). சுழல் தாரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cj3vxgeg/MLA
"சுழல் தாரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cj3vxgeg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment