ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்களுன் ஒருவன். காவிரிப்பூம்பட்டினத்தரசன் நெடுமுடிக்கிள்ளியின் மகன். இவன் சிறந்த போர்த் திறனும் கலையுள்ளமும் பெற்றிருந்தான். ஒருநாள் கட்டவிழ்த்துத் திரிந்த யானையை அடக்கிவிட்டு ஆடல்மகளிர் தெருவழியாக வரும்பொழுது எட்டி குமரனால் மணிமேகலையை அறிந்தான். இவன் அவளிடம் காதல்கொண்டு அவளைத் தேடி உவவனம் என்னும் மலர்க்காவிற்குச் சென்றான். மணிமேகலை பளிக்கறை மண்டபத்தில் மறைந்துகொண்டதால் காணாமல் திரும்பிவிட்டான். பின்னர்ச் சித்திராபதியால் அறிந்து மணிமேகலையிருக்கும் உலக அறவிக்குச் சென்றான். அங்கு இவன் அவளிடம் தவம் செய்வதின் பயனை வினவ அதற்குப் பதில் கூறிவிட்டு அவள் சம்பாபதியாள் கோவிலுக்குள் நுழைந்தாள். இவனிடமிருந்து தப்பிப்பதற்காக மணிமேகலை காஞ்சனன் என்னும் வானவன் மனைவி காயசண்டிகையின் உருவம் பெற்றாள். காஞ்சனன் பல ஆண்டுகளாகத் தன் மனைவியைக் காணாமல் தேடி அலைந்து அங்கு வந்து சேர்ந்தான். காயசண்டிகை உருவில் உள்ள மணிமேகலையிடம் சென்று தன் மனைவியென எண்ணிப் பழமையை எடுத்துக் கூறினான். அதற்கு அவள் ஒன்றும் கூறாதவளாய்ச் சென்றுவிட்டாள். உதயகுமரன் காதலுடன் தன்னை அணுகியபோது மணிமேகலை அவனுக்கு அறிவுரைகள் சொல்லி, அவனுடைய விருப்பத்தை மறுத்தாள். உதயகுமரன் நடுஇரவில் உலக அறவியில் தங்கியுள்ள காயசண்டிகை உருவில் உள்ள மணிமேகலையிடம் வந்தான். அப்பொழுது மறைந்திருந்த காஞ்சனன் தன் மனைவியிடம் இவன் காம விருப்பத்தோடு வந்துள்ளான் என்று கருதி, உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றான்.