உப்புச் சத்தியாக்கிரகம்
uppuc cattiyākkirakam
அண்ணல் காந்தியடிகள் இந்தியத் திருநாட்டினை அடிமைப்படுத்திய அந்நிய ஆங்கிலப் பேரரசுக்கெதிராக நடத்திய அறப்போராட்டங்களுள் முக்கியமான ஒன்று உப்புச் சத்தியாக்கிரகம்.
அண்ணல் காந்தியடிகள் இந்தியத் திருநாட்டினை அடிமைப்படுத்திய அந்நிய ஆங்கிலப் பேரரசுக்கெதிராக நடத்திய அறப்போராட்டங்களுள் முக்கியமான ஒன்று உப்புச் சத்தியாக்கிரகம். மக்கள் நாடோறும் பயன்படுத்தும் முக்கிய பண்டமான உப்பின் மீது ஆங்கில அரசு விதித்த வரிப்பளுவினால் இந்திய ஏழை மக்கள் அல்லலுக்குள்ளாயினர். எனவே உப்புச் சட்டத்தை மீறிக் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்த விழைந்தார். ‘உப்புச் சட்டத்தை மீறுதல்’ என்ற உப்புச் சத்தியாக்கிரகத்தால் காந்தியடிகள் இந்திய மக்களின் உள்ளங்களில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டது. சாதி, சமய மற்றும் இனவேறுபாடுகளின்றி உப்பு அனைவருக்கும் பொதுவானதால் காந்தியடிகள் அதனையே படைக்கலமாகக் கொண்டு, அன்னை பாரதத்தின் அடிமை விலங்ககற்றி இந்தியத் துணைக் கண்டத்திற்கு விடுதலை வாங்கித்தர முற்பட்டார்.
இந்திய அரசப்பேராளரான இர்வின் பிரபுவினால் ‘தேநீர்க் கிண்ணத்தில் எழுந்த புயல்’ (Storm in a Tea Cup) என்றும், ஆங்கில அதிகாரிகளால் ‘சிறுபிள்ளைத்தனமான கிளர்ச்சி’ (Kindergarten Cries) என்- றும் எள்ளி நகையாடப்பட்ட உப்புச் சத்தியாக்கிரகம் இந்திய மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஒருமைப்பாட்டினையும் தோற்றுவித்தது.
உப்புச் சத்தியாக்கிரகம் மேற்கொள்ளப்படலாமென்ற முடிவு 1930–ஆம் ஆண்டு பிப்பிரவரி 14–ஆம் நாள் முதல் 16–ஆம் நாள் வரை சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் நடைமுறைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் காந்தியடிகளின் விருப்பத்திற்கு விட்டுவிட முடிவெடுக்கப்பட்டது. அதற்குச் செயல்வடிவமும் தரப்பட்டது. எனவே அகமதாபாதிலிருந்து 385 கி.மீ. தொலைவிலிருந்த தண்டிக்குச் சென்று, அங்கு உப்புச்சட்டத்தை மீற அண்ணல் முடிவு செய்தார். தம் முடிவினை 2–3–1930–இல் அப்போதைய அரசப் பேராளர்க்கு எழுத்து மூலம் தெரிவித்தார். அதன் மூலம் இந்தியாவின் எண்ணற்ற ஏழைமக்களை ஆங்கில அரசின் கொள்கைகளும் சட்டங்களும் துன்புறுத்துகின்றனவென்பதும் புலப்படுத்தப்பட்டது. ஆயினும், அச்செயலில் தாம் எதுவும் செய்வதற்கில்லையென அரசப் பேராளர் மறுமொழி நல்கினார். எனவே ஆங்கிலப் பேரரசினை அடிபணியச் செய்யச் சத்தியாக்கிரகமே சரியான வழியென அண்ணல் எண்ணினார். உப்புச் சத்தியாக்கிரகத்தை நடைமுறைப்படுத்துவதற்கெனச் செயல்திட்டங்கள் தீட்டப்பட்டன.
போராட்ட வீரர்கள் கதர் அணியவேண்டுமென அறிவிக்கப்பட்டனர். 1930–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் அகமதாபாதில் நடைபெற்ற காங்கிரசின் முடிவின்படி, சத்தியாக்கிரகத்தின்போது ஒவ்வொருவரும் கீழ்க்காணும் உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர். 1. இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட விரும்பும் நான் அமைதியான சட்டமுறையிலமைந்த வழிகளில் இந்தியாவை விடுதலை அடையச் செய்ய வேண்டுமென்ற கொள்கையை ஏற்கிறேன். 2. இப்போராட்டத்தில் சிறைபுகவும், துன்பங்களோடு தண்டனைகளை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 3. சிறை செல்லுங் காலத்தில் குடும்பத்திற்கென எவ்விதமான உதவித் தொகையும் கேட்க மாட்டேன். 4. இயக்கத்திற்குப் பொறுப்பானவர்களின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன். இவ்வாறான உறுதிமொழிகள் மேற்கொள்ளப்பட்டபின் பயணந் தொடர வகை செய்யப்பட்டது.
சபர்மதி ஆசிரமத்தைச் சேர்ந்த 78 சத்தியாக்கிரகிகளுடன் அண்ணல் காந்தியடிகள் 30–3–1930–இல் தண்டிக்குத் தம் பயணத்தைத் தொடங்கினார். பத்திரிகை நிருபர்கள், அரசியல் மேதைகள், கற்றவர்கள், நெசவாளிகள், அரிசனங்கள் ஆகிய பலரும் அவர்களுள் இருந்தனர். 16 வயது இளைஞர் முதல் 61 வயதான காந்தியடிகள் வரை பல பருவத்தினர் அப்பயணத்தில் பங்கேற்றனர். பாதயாத்திரையின் போது அதிகாலை நான்கு மணிக்குக் காந்தியடிகள் எழுந்து வழிபாட்டினை முடித்துக் கொண்டு, கிராம மக்களுடன் உறவாடி, நூற்பு வேள்வியில் ஈடுபட்டுப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், கடிதங்கள் எழுதுதல் போன்ற அன்றாடக் கடமைகளை முடித்துத் தம் பயணத்தைத் தொடர்ந்தார். காந்தியடிகளின் பார்வைபட்ட இடங்களிலிருந்தெல்லாம் போராட்டப் பொறி கிளம்ப, அப்போது இசைக்கப்பட்ட தம்புராக்களின் இசை போர் முரசாக, பாடப்பட்ட பக்திப் பாடல்கள் போர் முழக்கமென ஒலிக்க, நடைப் பயணம் 24 நாட்களுக்குப்பின் மார்ச்சு 5–இல் தண்டியில் சென்று முடிவுற்றது. காந்தியடிகளின் அந்த அறப்போராட்டத்தினை, ‘காந்திக்கு இது ஓர் ஓய்வு நேர விளையாட்டு’ என எள்ளி நகையாடியவர்கள், அண்ணலின் அறப்போர் இந்திய மக்களிடம் ஏற்படுத்திய எழுச்சியினைக் கண்டு, தாங்கள் கொண்டிருந்த ஐயப்பாடு குறித்து நாணமடைவதாக வெளிப்படையாகக் கூறலாயினர்.
அடுத்த நாள் காலை வழிபாட்டிற்குப்பின் அண்ணல் உப்பை அள்ளி உப்புச் சட்டத்தை மீறினார். ‘இந்த ஒரு பிடி இந்திய உப்பில்தான் நம் மானம் அடங்கியுள்ளது. கைமுட்டி முறிந்தாலும் உப்பைக் கைவிட வேண்டாம்’ என முழங்கிய நாட்டுத் தந்தையின் சொல்லுக்கிணங்கி, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட அறுபத்தினாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். பண்டித மதன் மோகன் மாளவியா, முன்சி, தேவதாசுகாந்தி, மகாதேவ நேசாய், பண்டித மோதிலால் நேரு, பண்டித சவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் கைதானவர்களுள் முக்கியமானவர்கள்.
இதனைத் தொடர்ந்து அண்ணயின் அறப்போர் மக்களியக்கமாக மலர்ந்தது. இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது புதிய தலைவர்கள் பொறுப்புகளை மேற்கொண்டு, போராட்டப் பணிகளைத் தொடர்ந்தனர். உப்பு வரிச் சட்ட மீறலுடன் சட்டமறுப்புப் பணிகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டன. பம்பாயில் அரசு ஆணைக்கு மாறாக உப்புக் காய்ச்சப்பட்டதுடன் உப்பு வரியின்றி விற்கப்பட்டது. தலைவர்கள் வீதிகளில் உப்பு விற்று அச்சட்டத்தை மீறினார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் ஆந்திரகேசரிபிரகாசமும் கே. நாகேசுவரராவும் உப்புவரிச் சட்டத்தை மீறினர். சி. இராசகோபாலாச்சாரியார் 13–4–1930 முதல் 28–4–1930 வரை திருச்சியிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வேதாரணியக் கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறினார். ஆங்கில அரசு அடக்கு முறையைத் தீவிரப்படுத்திச் சத்தியாக்கிரகத்தைச் செயலற்றுப்போகச் செய்ய முயன்றது. ஏப்பிரல் 27–ஆம் நாள் சத்தியாகிரகத்தையொட்டி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் மாண்டனர்; பலர் படுகாயமுற்றனர்.
காந்தியடிகள் 4–5–1930 நள்ளிரவில் கைது செய்யப்பட்டுப் புனாவிலுள்ள எரவாடாச் சிறையில் காவலில் வைக்கப்பட்டார். மக்கள் கொதித்தெழுந்தனர். ஆங்கில அரசின் அடக்குமுறை தொடர்ந்தது. எனவே, வேலைநிறுத்தம், கடையடைப்பு முதலியன நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. பம்பாய், புனா போன்ற இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சோலாப்பூரில் இதனையொட்டி எழுந்த சிக்கலின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 25 பேர் மாண்டனர். காந்தியடிகளுக்குப் பின் போராட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்ற அப்பாசு தியாப்சி கைது செய்யப்பட்டார். காந்தியடிகள் ஏற்கனவே முடிவு செய்திருந்தவாறு மே 21–இல் ‘தர்சனா’ என்ற இடத்திலிருந்த உப்பு மண்டியை இமாம்சாகிபு, சரோசினி ச நாயுடு போன்றோர் முற்றுகையிட்டனர். அறவழியில் நடைபெற்ற அப்போராட்டத்தினை ஆங்கில அரசு இரும்புக் கரங்கொண்டு நசுக்கியது. தொண்டர்கள் துன்புறுத்தப்பட்டுத் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
உப்புச் சத்தியாகிரகத்தையொட்டிச் சட்டமறுப்பு இயக்கம் தொடர்ந்தது. இடத்திற்கிடம் மாறுபட்டுச் சூழல்களுக்கொப்ப ஆங்கில அரசுக்கெதிரான பல செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் விடுதலை உணர்வுடன், ஆங்கிலப் பேரரசிற்கு எதிரான வெறுப்பு உணர்வு காரணமாக மேற்கொள்ளப்பட்ட செயல்கள் ஆங்கில அரசினை அச்சங்கொள்ளச் செய்தன. உப்புச் சத்தியாக்கிரகமும் சட்டமறுப்பு இயக்கமும் இந்திய விடுதலைப்போரின் வலிமைமிக்க அடித்தளங்களாக அமைந்தபோது, ஆங்கில அரசு சிக்கங்களுக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கில் 12–11–1930 முதல் 19–1–1931 வரை முதல் வட்டமேசை மாநாட்டை இலண்டனில் கூட்டியது. ஆனால் காந்தியும் பிறதலைவர்களும் அம்மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டனர். உப்புச் சத்தியாக்கிரகம் இந்திய விடுதலைப்போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்து ஆங்கில அரசினை முதன் முறையாகச் சிந்திக்கத் தூண்டியது. மா.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 913)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chnmznbp/
தமிழ்“உப்புச் சத்தியாக்கிரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/chnmznbp/APA
Oliyon Research. (2026). உப்புச் சத்தியாக்கிரகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/chnmznbp/MLA
"உப்புச் சத்தியாக்கிரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/chnmznbp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment