இறந்த மொழி என்பது ஒரு காலத்தில் பெருவழக்கினைப் பெற்றிருந்ததோடு, குறிப்பிட்ட ஒரு சமுதாயப் பிரிவினர்க்குத் தாய்மொழியாகவும் (Mother tongue) அமையப் பெற்றிருந்தது. காலப் போக்கில் அது தாய்மொழி என்ற சிறப்புத் தகுதியினை இழந்து, குறிப்பிட்ட சில சமுதாயப் பணிகளை (Social functions) நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் மொழியாக மாறியது. அதாவது, மொழிப் பயன்பாட்டில் பெருவழக்கினைக் கொண்டதாகவும் தாய்மொழியாகவும் தகுதி பெற்றிருந்த ஒரு மொழி, காலப்போக்கில் அதன் பேச்சு வழக்கினை முழுமையாக இழந்த நிலையில், எழுத்து வழக்கில் மட்டுமே நிலவி, சில சமுதாயப் பணிகளுக்காக மட்டில் பயன்படுத்தப்படும் நிலையினை உடையதாகிறது. எடுத்துக்காட்டாக, தொல் கிரேக்கம், பழைய ஆங்கிலம், இலத்தீன், வடமொழி போன்ற மொழிகள் ஒரு காலத்தில் பெருவழக்கினைப் பெற்றிருந்த மொழிகளாக மிகுந்த செல்வாக்குப் பெற்று வழக்கில் இடம்பெற்றிருந்தன. ஆனால், பெரும்பாலான இம்மொழிகள் பெருவழக்கினையும் பேச்சுவழக்கினையும் ஒருசேர இழந்து, இன்று சமயப் பணிகளுக்காகவும் கோயிற் பணிகளுக்காகவும், மொழி மற்றும் பிற ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் மட்டிலுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலத்தீன் மொழி, கிறித்தவக் கோவில்களில் வழிபாட்டிற்கும், மொழி ஆய்விற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் இறந்த மொழியின் நிலையினைப் பெற்றுள்ளது. இம்மொழி, இன்றைய சமூகத்தில் எப்பிரிவினருடைய தாய்மொழியாகவும் பயன்படுத்தப்படவில்லை. இதே போன்று இந்தோ–ஆரிய மொழியான வடமொழி இந்து சமயப் பணிகளுக்கும், இந்துக்களின் கோயில் வழிபாட்டிற்கும் மற்றும் இந்தோ–ஆரிய, இந்தோ–ஐரோப்பிய மொழிகளின் மொழிகளின் ஒப்புமை ஆய்விற்கும் (Comparative Linguistie Study) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஈபுரு (Hebrew) என்ற மொழி ஒருகாலத்தில் யூதர்களின் தாய்மொழியாகவும் பெருவழக்கினைக் கொண்ட எழுத்துமொழியாகவும் வழங்கி வந்து, காலப்போக்கில் அது இறந்த மொழியின் நிலையைப் பெற நேர்ந்தது. ஆனால், மிகச் சிறப்பான முறையில் ‘மொழித் திட்டமிடுதல்’ (Language Planning) எனச் சமுதாய மொழியில் ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக, இம்மொழி இப்போது மீண்டும் உயிர்பெற்று ஒரு வாழும் மொழியாகவும் (Living Language) யூதர்களின் தாய் மொழியாகவும் விளங்குவதோடு, எல்லா நிலைகளிலும், எல்லாச் சமுதாயப் பணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் இன்று மொழி வரலாறு காட்டுகிறது. கி.க.