இவற்றை அராபிய – இந்து எண்கள் என்றும் கூறுவர். எண்களைச் சுட்டிக் காட்டும் குறுயீடுகள் இவை. 10 குறியீடுகளைச் சுட்டிக்காட்டுவர். அவையாவன:– 0,1,2,3,4,5,6,7,8,9 என்பனவாம். இவற்றை எண் உரு என்றும் சொல்வர். இந்த எண்களின் மதிப்பு எண் உரு இருக்கும் இடத்தைப் பொறுத்து அமையும். 257 என்ற எண்ணில் வரும் 2 என்ற எண் இருநாறு என்னும் மதிப்பைக் குறிக்கிறது. அடுத்து வரும் 5 என்ற எண் ஐம்பது என்னும் மதிப்பையும், இறுதியில் வரும் 7 என்ற எண் வெறும் ஏழு என்னும் மதிப்பையும் பெறுகின்றன. சுன்னம் (Zero) எனப்படும் 0 என்ற எண் எந்தவோர் இடத்தையும் நிரப்பக் கூடியது, அதற்கு மதிப்பு இல்லாதது போல் தோன்றினும், அந்த எண்ணுக்கு முன்னரும் பின்னரும் வரும் மற்ற எண்களைப் பொறுத்து அதன் மதிப்புக் கணிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 101 என்னும் எண்ணில் முதலில் வரும் 1 என்னும் எண்ணுக்கு நூறு என்னும் மதிப்பும், அடுத்து வரும் 0 மதிப்பற்றதாக இருந்தாலும் அது பத்துக்கான இடத்தில் வருவதால் அதற்குப் பின்னர் வரும் ஒன்னுக்கு வெறும் ஒன்று என்னும் மதிப்பையும், முன்னர் வரும் எண்ணுக்கு நூறு என்ற மதிப்பையும் அளிக்கிறது. அராபிய எண்கள் தோன்றிய வரலாறு குறித்துத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. மேற்குறித்த எண்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்துக்களின் நன்கொடை என்பர். 1 முதல் 9 வரையிலான எண்கள் கி.மு. 200–ஆம் ஆண்டளவில் பழக்கத்திற்கு வந்திருக்கக் கூடும். சுன்னம் எனப்படும் ‘0’ என்னும் எண்ணையும் கண்டுபிடித்துக் கொடுத்தவர்கள் இந்துக்களே. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த பாசுகராசாரியார் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார் என்பர். இந்தியரால் இந்தியாவில் பயன்படுத்தப்பெற்ற இவ்வெண்களை ஐரோப்பியர், அராபியர்கள் வழியாகத் தெரிந்து கொண்டார்கள். அராபியர் இந்த எண்களைக் கி.பி. 800–ஆம் ஆண்டளவில் தமதாக்கிக் கொண்டு, கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இசுபெயின் (Spain) நாட்டிற்குக் கொண்டு சென்றனர். ஏனைய ஐரோப்பிய நாடுகள் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் அவர்களுடன் வாணிகம் செய்ய வந்த வணிகர்களிடமிருந்து இவ்வெண்களைத் தெரிந்து கொண்டனர். அதேபோல் இசுபானியப் (Spanish) பல்கலைக் கழகங்களில் இருந்த அறிஞர்களும் இவ்வெண்களைப் பயன்படுத்தினர். அச்சுக்கலை சுண்டுபிடிக்கப்பட்டபோது இவ்வெண்கள் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பரவின.