இன்பியல் இசை நாடகம் என்பது இசையும் கதையும் உரையாடல் பகுதிகளும் நடனமும் கொண்ட நிகழ்ச்சியைக் குறிக்கும். இது இசைக் கதைகள் (Musicals) என்ற வகையினைச் சேர்ந்ததாகும்; இன்பியல் நாடகத்தினின்று (Comedy) வேறுபட்டதாகும். இன்பியல் இசைநாடகங்கள் (Musical Comedies) அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றின. இவை உலகெங்கிலும் மக்களால் வரவேற்கப்படுகின்றன. இன்பியல் இசை நாடகங்களின் முன்னோடியாகக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இங்கிலாத்தில் சான் கே (John Gay) என்பவரால் எழுதப்பட்ட ‘இரப்போனின் இசைநாடகம்’ (The Beggar's Opera) என்னும் இசை நாடகத்தைக் குறிப்பிடலாம். ஐரோப்பாவில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மெல்லிசைப் பகுதிகளையும் நகைச்சுவை உரையாடல்களையும் கொண்ட குறுகிய கால இசை நாடகங்கள் (Operettas) மக்களிடையே வரவேற்புப் பெற்று வந்தன. இவற்றில் நாட்டுப் பாடல்களும் இடம் பெற்றன. இக்காலத்தில் இன்பியல் இசை நாடகங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயற்றப்பட்ட நையாண்டிக் கதைகளைக் கொண்டவையாகவும் சமூக அடிப்படையில் அமைந்த கதைகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. சில இசை நாடகங்கள் ஐரோப்பிய நாடோடி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன. இவற்றில் உள்ள நாடோடி இசையும் நகைச்சுவை நிறைந்த உரையாடல்களும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இவை நாடோடி இசைநாடகங்கள் (Gypsy Operas) என்து குறிப்பிடப்படுகின்றன. புகழ்பெற்ற மேடை இசை நாடகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இத்தகைய இசை நாடகங்கள் இன்பியல் இசைக் கதைகள் (Musical Comedies) அல்லது இசைக்கதைகள் (Musicals) என்று குறிப்பிடப்படுகின்றன. ‘மன்னனும் நானும்’ (The King & I), ‘என் இனிய மங்கை’ (My Fair Lady) ஆகிய இசைக்கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவற்றைக் காட்டிலும் புகழ்பெற்ற இன்பியல் இசைக்கதையாக ‘இசையின் ஒலி’ (The Sound of Music) என்னும் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் 1963–ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுப் பெரும்பாலான நாடுகளில் திரையிடப்பட்டு ஏறக்குறைய 20 கோடி மக்களால் கண்டுகளித்துப் புகழப்பட்டதாகும். இத்திரைப்படக் கதை இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் வியன்னா நகரத்தில வாழ்ந்து வந்த ஆசுத்திரியா நாட்டின் படைத்தலைவர் ஒருவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் உண்மைக் கதையாகும். செருமானியப் படைகள் வியன்னாவைச் சூழ்ந்து கொண்ட பொழுது, அப்படைத்தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் அமெரிக்க ஐரோப்பாவை விட்டுத் தப்பியோடி ஐக்கிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு அப்படைத்தலைவர் 1954-ஆம் ஆண்டு வரையில் ‘குடும்ப இசைக்குழு’ (Family Music Group) என்னும் புதிய முறையில் அமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பெரியவர்கள் முதல்சிறு குழந்தைகள் வரையில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் இசை நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு பாடல்களைப் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் நீண்டநேர இசை நிகழ்ச்சிகளை நடத்துவது ‘குடும்ப இசைக்குழு’ எனப்படுகிறது. ‘இசையின் ஒளி’ என்னும் படம் இத்தகைய குடும்ப இசைக்குழு உருவானதை இசை நாடக வடிவில் தருகிறது. இதனைப் பின்பற்றி 1970–ஆம் ஆண்டுக்குப்பின் ‘சனிக்கிழமை இரவு உணர்வு’ (Saturday Night Fever), ‘அப்பா’ (Abba) போன்ற இசைக் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்து, மக்களால் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன. இளந்தலைமுறையினரையும் அவர்களுள் குறிப்பாக இளம் மாணவர்களையும் பெரிதும் கவர்ந்த இன்பியல் இசைக் கதையாகக் கிரீசு (Grease) என்னும் படத்தைக் குறிப்பிடலாம். இப்படத்தில் பள்ளி மாணவ மாணவியரின் ஆரவாரம் மிக்க இறுதியாண்டு வாழ்க்கை ஆடல் பாடல்களுடன் சித்திரிக்கப்படுகிறது. இன்பியல் இசைக்கதைகளின் இருபதுக்கு மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுகின்றன. இசை அமைப்பாளர் புதிய இசையமைப்பினைப் பாடல்களுக்குக் கொடுக்கின்றனர். சில படங்களில் புகழ்பெற்ற இயலிசைப் புலவர்களின் இசையும் இடம்பெறுகிறது. இக்கால நடனங்களுள் விரைவு நடனங்கள் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. மேடை நாடகங்களாக இவை நிகழ்த்தப்படும்பொழுது, பல மாதங்கள் ஒரே அரங்கில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. புகழ்பெற்ற இன்பியல் இசைக்கதைகள் நியூயார்க்கு நகரத்திலுள்ள பிராட்வே என்னும் அரங்கில் நடைபெறுகின்றன. நாளேடுகளும் தொலைக்காட்சியும் இந்த நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து திறனாய்வு செய்து விட்டால் இந்த நிகழ்ச்சிகள் பல மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும்.