அரிச்சந்திரனுடைய வரலாற்றினை நாடக வடிவில் அமைக்கப்பட்ட நூலாகும். அரிச்சந்திரன் வரலாறு பாரத நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வரையப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக் கதை இயலாகவும் இசையாகவும் நாடகமாகவும் அமைந்து பண்டுதொட்டுப் பாரத மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து, பண்படுத்தி வந்துள்ளது. தமிழ்மொழியில் அரிச்சந்திரபுராணம் என்னும் பெயரில் புலவர்கள் போற்றும் இலக்கிய வகையில் அமைத்த இவ்வரலாறு, உரைநடை நூலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரிச்சந்திரன் வரலாற்றுக் கதையினைத் தமிழில் படிக்கும் நாடகமாகவும் நடிக்கும் நாடகமாகவும் உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். மு.வ. கலியாண சுந்தரம்பிள்ளை, மெய் அரிச்சந்திரன் நாடகம் என்ற பெயரிலும், சாங்கியா பிள்ளை கி.பி. 1899–ஆம் ஆண்டில் நீதிநெறி அரிச்சந்திர நாடகம் என்ற பெயரிலும் எழுதினார்கள். பின்னர்க் கி.பி. 1910–இல் பவானந்தம் பிள்ளை அரிச்சந்திர நாடகம் ஆக்கியுள்ளார். சிறந்த நாடகப் பேராசிரியர்களான சம்பந்த முதலியாரவர்களும் சங்கரதாசு சுவாமிகளும் அரிச்சந்திர நாடகத்தை எழுதியதோடு, தங்கள் நாடகக் குழுவினரால் நாடகமாக நிகழ்த்தியும் காட்டினர். அரங்கப்பிள்ளை, நரசிம்ம ஐயர், பரசுராமக் கவிராயர், வெங்கடராம உபாத்தியாயர், சிவசாமி, தண்டாச்சியாபிள்ளை, வீரலிங்க பாரதி, முத்தழக பாரதி ஆகிய பலரும் தனித்தனியே அரிச்சந்திர நாடகங்களை எழுதிச் சென்ற நூற்றாண்டில் வெளியிட்டுள்ளனர். வாய்மையைக் காக்க அரிச்சந்திரன், தன் நாடு, நகரம், மனைவி, மக்கள் ஆகிய எல்லா உடைமைகளையும் இழந்தான். முடிவில், சூளுரைத்த விசுவாமித்திர முனிவரைத் தோற்கடித்து, இழந்தவற்றையெல்லாம் மீட்டு, வாய்மை வெல்லும் என்பதை நிறுவிக் காட்டினான். பாமர மக்கள் இறை அருளைப் பெற அரிச்சந்திரன் கதையைக் கூத்தாக நடித்துப் போற்றுவர். படித்தவர்கள் வாய்மையின் சிறப்பினை வலியுறுத்த இந்நாடகத்தை மேடையேற்றிப் போற்றுவர். காந்தியடிகள்பால் இலங்கிய அளவற்ற உண்மை வேட்கைக்கு அரிச்சந்திர நாடகம் அடிப்படையாக விளங்- கிய தன்மையினை அவர்தம் சத்தியசோதனை உணர்த்துகிறது.சு.ச.