அடிமைநிலைச் சட்டங்கள்
aṭimainilaic caṭṭaṅkaḷ
மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மெசபடோமிய, கிரேக்க, உரோம் நாகரிகத்தில் அடிமைப் பாகுபாடு உச்ச நிலையில் இருந்தது. தமிழகத்திலும் அடிமைகள் இருந்தனர்.
இரண்டாம் இராசாதி ராசனின் காலம் முதன் மூன்றாம் இராசராசன் காலம் வரை (கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள்) தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர் என்பதனைக் கல்வெட்டுகளினால் அறியலாம்.
அடிமைகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. குறுநில மன்னர்களும் மன்னனின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இவர்கள் கோயில் பணிகளைச் செய்துவந்தார்கள். பஞ்சம், வறட்சி காரணமாகத் தங்களையே வழி வழி அடிமையாக விற்றுக் கொண்டார்கள். இவர்கள் கோயில்களுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ உடைமைகளாகவே இருந்தார்கள். அடிமைகளை விற்பதைக் குறிக்கும் ஆவணங்கள் ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச்சீட்டு’ என்று வழங்கப்பட்டன.
அடிமையாவதில் சில வகைகள் இருந்தன. தன்னைத் தானே விற்றுக் கொள்வது ஒன்று; அடுத்து, தன்னையும் தன் மனைவி மக்களையும் சேர்த்து விற்றுக்கொள்வது; அடுத்து, பின்வரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக்கொடுத்து விடுவது.
தம் அடிமைகளைப் பெருமக்களுக்கோ கோயிலுக்கோ மடத்திற்கோ விற்றுவிடுதல், தாம் பிறரிடம் விலைக்கு வாங்கி மீண்டும் விற்பனை செய்தல், தானமளித்தல் போன்ற பலவகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. பெரும்பாலோர் கோயில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோயிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோயி- லுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமான் கோயிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அமைத்துக் கொண்டார்கள். அரசன் முத்திரையிடப்பட்ட அடிமைப் பெண்கள் அரண்மனையில் அலுவல் பார்த்தார்கள். 700 காசுகளுக்கு மாதர் நால்வர் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு விற்கப்பட்டனர். சிற்றரசர்களிடம் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மணந்துகொண்ட மனைவிமார் அடிமைகள் சிலரைச் சீதனமாகக் கணவன் வீட்டிற்குக் கொண்டு வருதல் அக்கால வழக்கமாக இருந்தது. அங்ஙனம் கொண்டுவரப்பெற்ற அடிமைகளைத் தம் மனைவியர் இசைவுபெற்று வைராதராயர் என்ற பெருமகன் ஒரு மடத்திற்கு விற்றுவிட்டான். உடனே அவ்வடிமைகளுக்குச் சூலப் பொறி பொறிக்கப்பட்டது. அவர்கள் தம் கடமைகளிலிருந்து தவறின் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
வேளாளர் மூவர், மாதர் இருவரையும் அவர்தம் பெண்களையும் திருவக்கரைக் கோயிலுக்கு விற்றுவிட்டனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழையூர்க் கோயிலுக்கும் மடத்திற்கும் விடப்பட்ட அடிமைகள் பலராவர். இவ்வாறே ஒரு பெருமகன் அடிமைகள் பலரை விலைக்கு வாங்கித் திருவாலங்காட்டு மடம் ஒன்றுக்குத் தானமாகக் கொடுத்தான். கி.பி. 1201–ஆம் ஆண்டில் ஒரு வேளாளன் தன்னையும் தன் பெண்கள் இருவரையும் வறுமையின் காரணமாகத் திருப்பாம்புரம் கோவிலுக்கு விற்றுவிட்டான். அடிமைகள் வழி வழியாகக் குறிப்பிட்ட சிலரிடம் இருந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கல் தச்சன், தன்னையும் தன் மனைவியையும் தன் புதல்வர் நால்வரையும் ஒரு கோயிலுக்கு விற்றுவிட்டான்.
பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலும், பாரதத்திலும் அடிமைகள் பற்றிய சில அகச் சான்றுகளைக் காணலாம்.
போர் அடிமைகள்
போரில் வெற்றியடைந்த மன்னர் அந்நாட்டுப் பொன்னையும் பொருளையும் கவர்ந்து வருவது போல், அந்நாட்டுப் படைகளையும் மக்களையும் கவர்ந்து வருதல் மரபு. மூன்று பியூனிக் போர்களிலும் கார்த்தேசு நகர மக்கள் அனைவரும் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்பது கிரேக்க வரலாறு கூறும் செய்தி. கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் கொத்தடிமை முறை இருந்து வந்திருக்கிறது. கி.பி. 1834–இல் திருவாங்கூரில் ஓர் அடிமைச் சந்தை இருந்ததை ஒரு பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
அடிமையை ஓர் ஆளாகக் கருதலாமா என்பது உரோமானியச் சட்டத்தில் தெளிவாக இல்லாத ஒரு செய்தியாகும். அடிமையை ஆளாக மதியாமல் பொருளாகவே மதித்து வந்தார்கள். அடிமை வெறும் பொருளன்று என்பதைக் காட்டும் கூறுகளும் அச்சட்டத்தில் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு: அடிமை, குற்றவியல் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாவது போலவே தீங்கியல் (Torts) வழக்குகளுக்கும் பொறுப்பாளியாகலாம்; முதலாளிக்காகச் சொத்துத் தேடலாம். அவன் சமயம் தொடர்பான சில சலுகைகள் உடையவனாகலாம். இதனால் அடிமையைப் பொருள் என்று கருதுவதினும், ஆள் என்று கருதுவதே பொருத்தமாகும்.
அடிமைக்கு உரிமைகளும் கிடையா கடமைகளும் கிடையா. முதலாளியின் விருப்பத்தினைப் பொறுத்தவை அவனுடைய வாழ்வும் உயிரும்; அவன் தேடும் பொருள் அனைத்தும் முதலாளிக்கே உரியதாகும். அடிமைக்கு எதிராக எவ்விதத் தீர்ப்பும் செல்லுபடியாகாது. அடிமையானவுடன் அவனுடைய கடன்கள் நீங்கிவிடும். அடிமைநிலை நீங்கிய பின்னரும் அக்கடன் புத்துயிர் பெறுவதில்லை.
இத்தகைய அடிமைநிலை சிறிது சிறிதாக நாளடைவில் மாறுதல் அடைந்து வந்தது. இறுதியில் முதலாளி அடிமையைத் திருத்துவதற்காக மட்டுமே அடிக்கலாம் என்றும், அடிமையைக் கொல்வது குற்றமாகும் என்றும் ஏற்பட்டது. முதலாளி கொடுக்கும் சொத்தைப் பாதுகாத்து, அதனைக் கொண்டு வாணிகம் செய்வதால் ஏற்படும் கடன்களை முதலாளியைக் கொடுக்கும்படி செய்யவும் அடிமைக்கு அதிகாரம் ஏற்படுவதாயிற்று.
அடிமைகள் விலை மதிப்புள்ள பொருள்களாக மதிக்கப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் கடனுக்காக அடிமைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள்.
முகமதியர்களிடையே அடிமை நிலை தோன்றுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. முகமதிய அடிமைகள், உரோமானிய அடிமைகளை விட மிகுதியான உரிமையும் பாதுகாப்பும் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
ஐ.நா.வும் உலகத் தொழில் நிறுவனமும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டன. ஐ.நாவின் பொதுச் சபை அதன் மூன்றாவது கட்டத்தில் (1948) மனித உரிமை அறிக்கையை அங்கீகரித்தது. இந்த அறிக்கையின் 4-ஆம் பிரிவு “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமை நிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது” என்று கூறுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 259)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cajauw6h/
தமிழ்“அடிமைநிலைச் சட்டங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cajauw6h/APA
Oliyon Research. (2026). அடிமைநிலைச் சட்டங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cajauw6h/MLA
"அடிமைநிலைச் சட்டங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cajauw6h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment