இராசராசேச்சுரம்
irācarācēccuram
இராசராசேச்சுரம் என்பது தஞ்சையிலுள்ள பெரிய கோயிலைக் குறிக்கும் பெயராகும்.
இராசராசேச்சுரம் என்பது தஞ்சையிலுள்ள பெரிய கோயிலைக் குறிக்கும் பெயராகும். சோழ மன்னர்கள் தமிழ்நாட்டில் பல கற்கோயில்களை எடுப்பித்தனர். அவற்றுள் தலைசிறந்து விளங்குவது முதல் இராசராசனால் கட்டப்பெற்ற ‘இராசராசேச்சுரம்’ எனப்படும் இப்பெரிய கோயிலே ஆகும். இக்கோயில் பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்றதென்பதையும்; இதற்கு அம்மன்னன் இட்ட பெயரே இராசராசேச்சுரம் என்பதையும் இதன் கண்ணுள்ள கல்வெட்டொன்று அறிவிக்கிறது.
இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையதாகும். கருவறையின் மேல் நான்கு முகப்புக் கூம்பகமாக 13 அடுக்குகளுடன் எழுப்பப்பட்டுள்ள விமானம் 216 அடி உயரம் உடையது. இவ்விமானம் ‘தட்சிணமேரு’ எனப்படும். விமானத்தில் உச்சித் தளக்கல் 80 கண்டி (Tonnes) நிறையுடையது என்பர்.
கருவறையுள் மிகப் பெரிய இலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள திருமேனியினை இராசராசேச்சுரமுடைய பரமசுவாமி, இராசராசேச்சுரமுடையார், தக்கணமேரு விடங்கர் என்றெலாம் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கருவூர்த் தேவர் என்னும் சைவ முனிவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப் புராணம் கூறுகிறது. இக்கருவூர்த் தேவர் இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
விமானத்தின் உச்சியில் நிறுத்தப்பட்டுள்ள கலசம் 3083 பலம் நிறையுடைய செம்பினால் ஆக்கப் பெற்று, 2926½ கழஞ்சு பொற்றகட்டினால் போர்த்தப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு மூன்று திருவாயில்கள்
இராசராசேச்சுரம்
உள்ளன. அவை முறையே கேரளாந்தகன் திருவாயில், இராசராசன் திருவாயில், திருஅணுக்கள் திருவாயில் என்னும் பெயர்களுடன் விளங்குவதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இராசராசேச்சுரத்தில் கருவறை முகவாயிலைச் சார்ந்த பக்கவாயில்கள் கருவறைக்கு அணுக்கமாக இருபுறமும் உள்ளன. தென்புற வாயில் ‘சீ விக்கிரமன் திருவாயில்’ என்றும் வடபுற வாயில் ‘அட்ட மங்கல வாயில்’ என்றும் பெயர் பெறும்.
உட்கோயில் இறையகம், முகமண்டபம், பெரிய மண்டபம், தாபன மண்டபம், நடன மண்டபம், வாத்திய மண்டபம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. கோயிலிலுள்ள ஏழுவாயில்களிலும் 18 அடி உயரமும் 8 அடி அகலமுமுள்ள 14 வாயிற் காவலர் சிலைகள் பெருமிதத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் திருமதிலுடன் உட்புறம் தொடரும் திருச்சுற்று மாளிகையினைக் கட்டியவன் சேனாதிபதி கிருட்டிணன் இராமனான மும்முடிச் சோழப் பிரமராயன் ஆவான். திருச்சுற்றாலையில் எட்டுத்திக்கிலும் சூரியன் முதலான திக்குப்பாலர்கள் எண்மர்க்கும் சிறிய விமானத்துடன் கூடிய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும். திருச்சுற்றிடத்தின் மேற்குப் பகுதியில் மந்தாரை மரத்துடன் உள்ள மேடையைச் சார்ந்து கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் உள்ளது.
கோயில் திருமுற்றத்தில் உள்ள பெரிய அழகிய நந்தி ஒரே கல்லிற் செய்யப்பட்டதாகும். இதன் உயரம் 12 அடி; நீளம் 19½ அடி; அகலம் 8¼ அடி.
இராசராசேச்சுரம் உடைய பரம சுவாமியுடன். இராசராசன் எழுந்தருளுவித்த அம்மன் திருமேனி உமா பரமேசுவரியார் என்பதை வடபுறத் திருச்சுவரிலுள்ள கல்வெட்டொன்று அறிவிக்கிறது. இப்பொழுது உள்ள அம்மன் கோயிலும் நந்தி மண்டபமும் நாயக்கர் காலத்தில் கட்டப் பெற்றவை. கோயிலைச் சூழ்ந்துள்ள அகழுடன் கூடிய கோட்டை கொத்தளங்கள் சேவப்ப நாயக்கரால் கட்டப்பெற்றவையென்று அறியப் பெறுகின்றன.
இராசராசனின் ஆட்சியில் பொய்கை நாட்டின் தலைவனாக இருந்த ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவன், கோயிலின் வடகிழக்குத் திருமாளிகையிடத்தில் தேவார மூவர்க்கும் படிமங்கள் செய்தமைத்து நிவந்தங்களும் அளித்துள்ளான். திருச்சுற்று மாளிகையின் வடகிழக்குப் பகுதியில் இராசராசனால் நிறுவப்பெற்ற நாகதேவர் திருமேனிகள் உள்ளன.
இப்பெருங்கோயில் மாடக்கோயில் என்பதற்கேற்ற இலக்கணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இராசராசனால் கி.பி. 1005–இல் தொடங்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் திருப்பாணி நிறைவு பெற்றதென்பதைச் சீ விமானத்துச் செம்பின் தூபித் தறியில் வைக்கக் கொடுத்த கலசத்தினைப் பற்றிக் கூறும் கல்வெட்டால் அறிய முடிகிறது.
இராசராசன் சேர, பாண்டியரை வென்று கைப்பற்றிய பண்டாரங்களைக் கொண்டு, பொற்குவியல்களையும் இரத்தினங்களையும் திருமேனிகட்குப் பொன்னணிகளாகவும் இரத்தினக்கலன்களாகவும் வழிபாட்டுக்குரிய பொருள்களாகவும் செய்தளித்துள்ளமையினைக் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
கருவறையைச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுச் சுவர்களில் சோழர் கால ஓவியங்களும் நாயக்கர் கால ஓவியங்களும் உள்ளன. விமானத்தின் முதல் தளத்தில் அமைந்த சுற்றுச் சுவரில் நடனக் கலைக்கமைந்த சிற்பங்கள் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன.
கோயில் கல்வெட்டுச் செய்திகள் இராசராசன் கோயிலில் திருப்பதிகம் நாள்தோறும் பாட 48 பிடாரர்களையும் (ஓதுவார்கள்) கொட்டிமத்தளம், உடுக்கை வாசிப்போர் இருவரையும் நியமித்து நிவந்தம் வழங்கியுள்ளமையினையும், ஆடல் பாடல் கோயில் பணிகள் ஆகியவற்றை திகழ்த்த 400 தளிச்சேரிப் பெண்டுகளைச் சோழ நாட்டில் பிற கோயில்களிலிருந்து நியமித்து, அவர்கட்கு நிலம் வீடு நிவந்தம் செய்துள்ளமையினையும், மெய்காவலர், பண்டாரிகள் ஆகிய கோயில் பணியாளர் பலரை நியமித்து அவர்களுக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளமையினையும் அறிவிக்கின்றன.
தஞ்சை இராசராசேச்சரம் முதல் இராசராசனின் ஆட்சிக்கும் புகழுக்கும் சிவ பக்திக்கும் அமைந்த சின்னமாகவும், சோழர் காலக் கோயில் கட்டடக் கலையுடன் நுண்கலைகளின் வளர்ச்சியினைக் காட்ட அமைந்த பெட்டகமாகவும் விளங்குகிறது.சி.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 39)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c576fhav/
தமிழ்“இராசராசேச்சுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c576fhav/APA
Oliyon Research. (2026). இராசராசேச்சுரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c576fhav/MLA
"இராசராசேச்சுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c576fhav/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment