சைவ சித்தாந்தத்தில் ஆன்மா எவ்வாறு வீடுபேறு அடைகிறது என்பது இலட்சியத்தின் வாயிலாக உணரப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றுமே மும்மலம் எனப்படும். மேற்கூறப்பட்ட மும்மலங்களிலிருந்து ஆன்மா அல்லது உயிர் விடுபட்டுச் செல்வகுற்கு இலட்சியம் ஒரு வழியாக உள்ளது. இந்த இலட்சியத்தை அடைய அல்லது இறைவனின் அருளைப் பெற நான்கு வழிகள் உள்ளன. அவை 1. சரியை, 2. கிரியை, 3. யோகம், 4. ஞானம் என்பன. இறைவன் கோவில்களை அலகிடுதல், மெழுகுதல், சுத்தம் செய்தல், இறைவன் புகழைப் பாடிக் கொண்டே பூமாலை தொடுத்தல், விளக்கு ஏற்றி வைத்தல், சிவனடியார்களைக் சண்டால் அவர்களின் குறிப்பு அறிந்து அவர்களுடைய பணிகளை நிறைவேற்றுதல் முதலிய பணிகள் சரியை என்று முதல் பிரிவில் அடங்கியுள்ளன. இவ்வழியில் சிவனை வழிபடுவோர் சிவன் வாழும் உலகத்தில் (சாலோகம்) இன்புற்றிருக்குமாறு அருளப்பெறுவர். கடவுள் வழி பாட்டில் நிகழும் செயல்களைக் குறிப்பிடுவது கிரியை எனச் சொல்லப்படுகிறது. அகத்தொடு புறமும் கலந்த பயிற்சியே கிரியை. அதாவது உடல் உறுப்புகளாகிய கைகளைக் கொண்டு இயற்றப் பெறும் வழிபாட்டில் உள்ளமும் ஈடுபடுகிறது. பூதசுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி ஆகிய ஐந்து சுத்திகள் செய்யப் பெறுகின்றன. முழுமுதல் கடவுள் எழுந்தருள்வதற்காக இடம் (ஆசனம்), நினைத்த உருவம் (மூர்த்தி), அவ்வுருவத்தின் உள்ளீடாக உள்ள இறையொளி (மூர்த்திமானம் சோதி) ஆகியன உள்ளத்தால் கருதப் பெறுகின்றன (பாவித்தல்). இவ்வாறு மெய்யன்போடு அருச்சனை செய்து, பரவிப் போற்றுதலுடன் எரி ஓம்பல் நாள்தோறும் செய்வோர், இறைவனுக்கு அருகில் (சாமீபம்) உள்ளோர் ஆவர். இதைத் திருஞான சம்பந்தர், ‘நறைமலி தருமலி...’ என்னும் தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். ஐம்பொறிகளை ஒடுக்கி அல்லது அடக்கி மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் உள் வழிகளை அறிந்து, அவ்விடங்களில் பொருந்தித் தியானித்து (பாமந்திர), சந்திர மண்டலத்திலுள்ள அமுதத்தை உடல் முழுவதும் நிரப்பி, முழுச் சோதியை நினைந்திருந்து, வினைகள் கெடுதற்குரிய யோக நெறியைக் கடைப்பிடித்தவர் சிவனது உருவத்தை யோக மூலமாகப் (சாரூபம்) பெறுவர். ஞானத்தினால்தான் வீடு பேறு அடைய முடியும் எனச் சித்தாந்தம் குறிப்பிடும். அஞ்ஞானத்தினால் கட்டு (பாசம்) ஏற்படுகிறது. மெஞ்ஞானத்தால் அக்கட்டு நீங்கும், ஞானபூசை செய்து ஞான வழியை அடையலாம். ஞான நூல்களை ஓதுதல், அவற்றைப் பிறருக்கு ஓதுவித்தல், அவற்றின் பொருளைத் தக்க ஆசானிடம் கேட்டல், தக்கவர்களுக்குத் தான் உரைத்தல், அவற்றின் பொருளைத் தான் சிந்தித்தல் என்னும் ஐந்து வகையான செயல்களை ஞானபூசை எனக் கூறுவர். ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்னும் நான்கு நிலைகளைக் கொண்டதாகும். நிட்டையை நன்றாகப் பொருந்தியவர்கள் வீடு பேறடைவர். இருவினையொப்பு என்பது நல்வினை தீவினைகளினால் பிறப்பு, இறப்பு அல்லது விருப்பு, வெறுப்பு ஆற்ற நிலை ஆகும். இம்மனப்போக்குக் கைகூடப் பெற்றால்தான் இறைவனின் அருளைப் பெற முடியும் எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது. மேலும், சரியை கிரியை, யோகம் என்பவற்றால் உயிர் ஞான நெறியிற் செல்லும் பக்குவம் அடைகிறது. இந்நிலையில் நிகழ்வன இருவினையொப்பு, மலபரிபாகம், சத்தி நிபாதம் என்பனவாகும். குரங்குக்குட்டி தாயை இறுகப் பற்றிக் கொள்வது போன்று உயிர் வீடுபேறு அடைவதற்கு இறைவனை இடையறாத பக்தியால் பற்றிக்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பற்றிய உயிர்களை, ‘பூனை தன் குட்டியைக் கெளவிக் தூக்கிச் செல்வது பே௱ன்று’ இறைவனும் விடாது பற்றி அருளுவான்.