காசுமீரத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள். கார்க்கோட மரபினர் ஆட்சியை கி.பி. 855–ஆம் ஆண்டில் கைப்பற்றிய அவந்திவர்மன் என்பாரே இம்மரபின் முதல் அரசராவார். இவரே அம்மரபின் புகழ்மிக்க மன்னரும் கூட. உத்பல (Utpalas) அரசர்கள் கார்க்கோட மரபினருடன் மணஉறவு கொண்டிருந்தார்கள். இம்மரபினைச் சார்ந்த அவந்திவர்மன் கி.பி. 855 முதல் 883 வரை அரசாண்டார். வன்முறையில் அடிப்படையில் எழுந்த அயல்நாட்டுக் கொள்கையைப் புறக்கணித்த இவர், உள்நாட்டின் வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாய்ச் செயற்பட்டார். தமக்குமுன் ஆண்ட பிந்தைய கார்க்கோட அரசர்களின் சீர்கெட்ட ஆட்சியின் விளைவுகளை நீக்கும் நோக்குடன் இவர் இத்தகைய கொள்கையைப் பின்பற்றினார். தம்மாட்சியின்போது செல்வாக்குற்ற நாட்டுப்புற நிலவுடைமையாளரான தமரர்களின் (Damaras) ஆதிக்கத்தை இவர் கட்டுப்படுத்தினார். இவர் வைணவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர். ஆனால் இவருடைய தலைமை அமைச்சராகப் பணியாற்றிய சுர (Sura) என்பார் ஆழ்ந்த சைவர். அவந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் சுரபுரம் (Surapura) என்னும் ஊரும் அவந்திபுரம் (Avantipura) என்னும் ஊரும் உருவாக்கப்பட்டன. சிவன்கோயில்கள் பல கட்டப்பட்டன. இருப்பினும் இக்கோயில்கள் இலதிதாத்யன் கோயில்களைவிடத் தரம் குறைந்தவை. அவந்திவர்மன் பல மடங்களையும் உருவாக்கினார். இவருடைய அருஞ்சாதனைகளுள் ஒன்று சீலம் (Jhelum) ஆற்றுக்குக் குறுக்காக கட்டப்பெற்ற பெரும் நீர்த்தேக்கமாகும். இதனால் சீலம் ஆற்று வெள்ளைத்தைக் கட்டுப்படுத்தி, சீலத்தின் போக்கையே மாற்றியமைக்கும் வழியேற்பட்டது. இவர் அவ்வாற்றின் கரைகளைக் கற்களால் உயர்த்திக் கட்டினார். இம்மன்னனுக்கு உறுதுணையாக இவருடைய பொறியாளர்களுள் ஒருவரான சூயர் (Suyya) என்பார் இருந்தார். அவந்திவர்மன் கற்றோரைப் போற்றினார். இவருடைய அவையில் ஆனந்தவர்த்தனர் (Anandavardhana) என்னும் நூலாசிரியர் இருந்தார். துவன்யலோகம் (Dhvanyaloka) என்னும் நூலுக்கு இவரே உரை எழுதினார். கப்பனாப்யதயம் (Kapphanabhyadaya) என்னும் புத்தசமய இதிகாசத்தின் ஆசிரியரான சிவசாமின் (Sivasvamin) என்பாரும் அரிவிசயம் (Harivijaya) என்னும் நீண்ட காவியத்தை எழுதிய இரத்னாகரரும் (Ratnakara) பாணரின் காதம்பரி என்னும் நாடகத்தைச் செய்யுள் வடிவில் அமைத்த அபிநந்தரும் (Abhinanda) அவந்திவர்மனின் அவையை அலங்கரித்தனர். அவந்திவர்மனை அடுத்துச் சங்கரவர்மன் அறியணை ஏறினார். இவர் கி.பி. 883 முதல் 902–ஆம் ஆண்டு வரை அரசு நடத்தினார். இவர் போராடி வெற்றிபெற்ற பின்னரே பதவியைப் பெற்றார் கார்க்கோடப் பேரரசைப் புதுப்பிக்கவும் இவர் முயற்சி செய்தார். மிகிரபோசரின் (Mihira Bhoja) பெருகி வளரும் அதிகாரத்தை இவர் கட்டுப்படுத்தித் தடை செய்தார். மிகிரபோசரின் குறுநில மன்னர்களுள் சிலரை இவர் வென்றார். இதற்குப் பின்னர் இவருடைய ஆக்கிரமிப்புக் கொள்கை வெற்றிபெறவில்லை. சங்கரவர்மன் தம் பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைத்துக் கொடுங்கோலாட்சிக்கு வழி வகுத்தார். ஏழை மக்களை ஒறுத்துக் கட்டாயமாகப் பணி செய்ய வேண்டுமென வருத்தினார். கோயில்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட சிற்றூர்களைப் பறித்துக் கொண்டு, அக்கோயில்களுக்குக் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கினார். எடைக்கற்கள், படிகல் போன்றவற்றின் அளவுகளைக் குறைத்து அரசின் வருமானத்தைப் பெருக்கவும் இவர் முயற்சி செய்தார்; கற்றோரைப் போற்றிப் புரக்கும் பணியையும் விடுத்தார். ஆனால், இவர் சங்கரபுரம் (Sankarapura) என்னும் ஊரில் இரு சிவன் கோயில்களைக் கட்டியதுடன், பல்லதசதகம் என்னும் நூலை யாத்த பல்லதர் (Bhallata) என்பாரைப் போற்றிக் காத்தார். பல்லதர் பத்மமஞ்சரி (Padmamanjari) என்னும் பேரகராதியையும் தொகுத்தார். சங்கரவர்மன் படையெடுப்பிலிருந்து திரும்பியபோது கி.பி. 902–ஆம் ஆண்டில் காலமானார். சங்கரவர்மனுக்குப்பின் அவர் தம் மனைவியான சுகந்தா ஆட்சி செய்ய முயன்றாள். இவனுடைய ஆட்சியின்போது தந்திரிகள் (Tantrins) என்னும் படைத்தலைவர்கள் வல்லாட்சி நடத்தினர். இந்தத் தந்திரிகளைக் குறுநில மன்னர்கள் சிலர் இணைந்து அடக்கினர். உத்பலமரபினரின் ஆட்சியைப் பிராமணர்களின் அவையொன்று முடிவுக்குக் கொணர்ந்தது. யசசுகாரர் (Yasaskara) என்பார் முடிமன்னராக்கப்பட்டார்.