இங்கிலாந்தில் கி.பி. 1843–ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இனக்குழு ஒப்பாய்வியல் கழகத்திலிருந்து (Ethnological Society) தோன்றியதே இராயல் மானிடனியல் நிறுவனம் (Royal Anthropological Institute) ஆகும். இந்நிறுவனம் மனித சமுதாயத்தைப் பற்றி அனைத்துத் துறைகளிலும் ஆராயும் ஓர் உலக நிறுவனமாகக் கருதப்படுகிறது. மானிடவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதலும், அவற்றைத் தொகுத்து வெளியிடுதலும், மானிடவியல் கல்வி அளித்தலும் இந்த நிறுவனத்தின் முதன்மையான நோக்கங்களாகும். இவை தவிர, திரைப்படங்களை வாடகைக்கு அளித்தல், பள்ளிகளுக்குக் கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், பல்வேறு அறக்கட்டளை நிதிகளைப் பேணுதல் ஆகியவையும் இந்நிறுவனத்தின் பணிகளுள் சிலவாகும். இந்நிறுவனம், தலைவர் ஒருவர், ஆறு துணைத்தலைவர்கள், ஓர் இயக்குநர், ஒரு பொருளாளர், அவை உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள், தொடர்புடை உறுப்பினர்கள் (Corresponding Members), உள்நாட்டுச் செயலர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. இதன் நிருவாகம் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர், பொருளாளர், அவையின் இருபது பொது உறுப்பினர்கள் ஆகியோரால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 2,250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இராயல் மானிடவியல் நிறுவனத்தில் அடிப்படை உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள், சார்புடைய உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், குறைந்த பங்களிப்புக் கட்டும் உறுப்பினர்கள் எனப் பலவகையினர் உள்ளனர். இந்நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அவை உறுப்பினர்களாகவும் இந்நிறுவனத்தின் அலுவலர்களாகவும் இருக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். பேரவை உறுப்பினர்கள் இந்நிறுவனத்தின் வெளியீடுகளை இலவசமாகப் பெறுகின்றனர். இவையன்றி நூல்கள், வரைபடங்கள், வெளியீடுகள் முதலியவற்றைப் பயன்படுத்தும் உரிமையையும் பெறுகின்றனர். குறைந்த பங்களிப்பு உறுப்பினர்களான இருபத்தாறு வயதுக்குட்பட்டவர்கள் சில ஆய்விதழ்களைக் கட்டணமின்றியும், சிலவற்றைக் குறைந்த கட்டணத்துடனும் பெறுகின்றனர். நூலகத்தைப் பயன்படுத்தும் உரிமை அனைவருக்குமே உண்டு. இந்நிறுவனத்தின் நூலகத்தில் சுமார் ஓர் இலட்சம் நூல்கள் உள்ளன. நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருவாய், சொத்துகள் ஆகிய அனைத்தும் நிறுவனத்தின் நோக்கத்தினை உயர்த்துவதற்காகவே செலவிடப்படுகின்றன. எவ்விதமான பங்கீடும் நன்கொடையும் வெகுமதியாகவோ பணமாகவோ உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. தொடக்க காலத்தில் இந்நிறுவனம் ‘இயற்கை பற்றிய நூல்’ (The Book of Nature), ‘மனிதனைப் பற்றிய நூல்’ (The Book of Man) ஆகியவற்றை வெளியிட்டது. வாழ்வியல், உளவியல், உயிரியல் ஆகியவற்றைப் பற்றி ‘முன்னோடி’ (The Pioneer) என்னும் இதழையும் வெளியிட்டது. இராயல் மானிடவியல் நிறுவனத்தின் பருவ இதழ் முதலில் ‘இராயல் மானிடவியல் நிறுவனமும் மனிதனும்’ (The Journal of the Royal Anthropological Institute and Man) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் 95–ஆம் தொகுதியுடன் நிறுத்தப்பட்டது. பின்னர், 1966–ஆம் ஆண்டிலிருந்து ‘மனிதன்: இராயல் மானிடவியல் நிறுவனத்தின் ஆய்விதழ்’ (Man: The Journal of the Royal Anthropological Institute) Institute) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு முத்திங்கள் இதழாகும். சிறிய, பெரிய கட்டுரைகளும் நூல்களைப் பற்றிய மதிப்புரைகளும், மானிடவியல் ஆய்வினைக் குறித்த செய்திகளும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இந்த இதழின் முதல் தொகுதி 1966–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31–ந் தேதி வெளியிடப்பட்டது. மானிடவியலின் பிரிவுகளான சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், உடல்சார் மானிடவியல் (Physical Anthropology), நாட்டுப்புறவியல், தொல்லியல் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆய்வுரைகள் இடம்பெறுகின்றன. இந்நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து ‘இராயல் மானிடவியல் நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் பற்றிய வெளியீடுகள்’ (Proceedings of the Royal Anthropological Institute) என்னும் இதழ் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. இதில் தலைவர் உரை, அக்சுலி (Huxley) நினைவுரை, என்றி மையர்சு (Henry Myers), கர்ல் (Curl) சொற்பொழிவுகள், கர்ல் பிரிவிற்கான கட்டுரைகள், ஆண்டு அறிக்கைகள், நிறுவனத்தின் நிதி விவரங்கள், நிறுவனத்தின் சுருக்க உரைகள், புதிய உறுப்பினர்களின் உரையாடல்கள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. இதன் முதல் தொகுதி 1966–ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஓர் ஆண்டில் சனவரி முதல் திசம்பர் மாதம் வரை தரப்படும் ஆய்வுரைகள் பருவ இதழின் ஒவ்வொரு தொகுதியிலும் இடம்பெறுகின்றன. இத்தொகுதிகளில் முகவுரையாக ஆண்டுக் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரை அளிக்கப்படுகிறது. இரண்டாம் தொகுதியில் கி.பி. 1895–ஆம் ஆண்டிற்கு முற்பட்ட கட்டுரைகளனைத்தும் புதிய இராயல் ஆக்டேவோ வரிசையில் (New Royal Octavo Series) இடம் பெற்றுள்ளன. மூன்றாம் தொகுதியில் 1900–ஆம் ஆண்டின் சனவரி–திசம்பர் மாதங்களுக்கிடையே அளிக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளன. இந்நிறுவனம் இப்போது ‘மனிதன்’ (Man), ‘இன்றைய மானிடவியல்’ (Anthropology Today}, ‘மானிடவியல்சார் அட்டவணை’ (Anthropological Index) ஆகிய மூன்று பருவ இதழ்களை வெளியிடுகிறது. இன்றைய மானிடவியல் என்னும் இதழ் இதற்கு முன்பு ‘இரெயின்’ (Rain) என்னும் பெயரில் வெளியிடப்பட்டதாகும். ‘மனிதன்’ என்னும் இதழ் முத்திங்களுக்கு ஒருமுறையும் ‘இன்றைய மானிடவியல்’ என்னும் இதழ் இருதிங்களுக்கு ஒருமுறையும் ‘மானிடவியல்சார் அட்டவணை’ என்னும் இதழ் முத்திங்களுக்கு ஒருமுறையும் வெளியிடப்படுகின்றன. இவை தவிர, ஆய்வுரைகளைத் தொகுத்தும் பல தொகுதிகளை இந்நிறுவனம் வெளியிடுகிறது. சிறந்த மானிடவியல் ஆய்வுகளுக்கும், சிறந்த கட்டுரைகளுக்கும் மானிடவியலில் ஆற்றப்பட்டுள்ள பணிகளைக் குறித்த சிறந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றிற்கும் இராயல் மானிடவியல் நிறுவனம் பரிசுகளை அளித்து வருகிறது. கால் பிகுவெசுடு (Curl Bequest) என்பார் பெயரில் ஒரு பரிசு அளிக்கப்படுகிறது. மறைந்த சர் என்றி எசு. வெல்கம் (Sir Henry S. Wellcome) என்பவரின் பெயரால் மருத்துவ மானிடவியலில் சிறந்த ஆய்வுக்குப் பரிசு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை ‘இரேய் படப்பரிசு’ (Rai Film Prize) ஒன்றையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது. பரிசிற்கான ஆய்வுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு இராயல் மானிடவியல் நிறுவனத்தின் தலைவரே தலைமைப் பொறுப்பேற்கிறார். இந்நிறுவனம் ஆய்வு ஊக்கத் தொகையளிக்க நிதி நல்கைக் குழுவையும் கொண்டுள்ளது. இராயல் மானிடவியல் நிறுவனம் ‘இரேய் படக்குழு’, ‘வடஅமெரிக்கக் குழு’ (North America Committee), ‘படத் தொகுப்புக் குழு’ (Photographic Committee), ‘கல்விக் குழு’ (Education Committee) ஆகிய குழுக்கள் பலவற்றின் பணிகளை ஒருங்கிணைத்துச் செயற்பட்டுவருகிறது.ம.ந.பு. துணை நூல்கள் The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol.I, Kegan Paul, Trench Trubner and Company, London, 1872. The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol. XXIX (New Series Vol. II), Kegan Paul, Trench Trubner and Company, London, 1899. Notes and Queries on Anthropology, Kemp Hell Press, Oxford, 1929.