சிறு தானியங்கள்
ciṟu tāṉiyaṅkaḷ
சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரை வாலி, பனி வரகு போன்றவை சிறு தானி-
சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரை வாலி, பனி வரகு போன்றவை சிறு தானி-
யங்கள் (millet crops) எனப்படும். சிறு தானியப் பயிர்கள் கிராமினே என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. மேலும், இவை தானியக் கனி வகையைச் (caryopsis) சேர்ந்தவையாகும். விதை உறையும், சூலக உறையும் ஒன்றாக இணைந்து, உமியாகத் தானியத்தைச் சூழ்ந்திருக்கும். சிறு தானியங்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும் பெருமளவில் உணவாகப் பயன்படுகின்றன. வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டுள்ளமையால், இவை பெரும்பாலும் புன்செய்ப் பயிர்களாகப் பயிரிடப்படுகின்றன. குறுகிய காலத்தில் இவை பயன் தரக் கூடியவை. தினை, சாமை போன்ற சிறு தானியங்கள் பருப்பு வகைப் பயிருடன், ஊடு பயிராகவும் பயிரிடப்படுகின்றன.
கடும் வறட்சியைத் தாங்கும் தன்மை பெற்றிருப்பதுடன், பிற பயிர்கள் பயிர் செய்ய முடியாத வளம் குன்றிய நிலங்களிலும் நன்கு வளர்கின்றன. இவற்றின் விதைகள் நீண்ட காலம் முளைப்புத் தன்மை கெடாமலும், நோய், பூச்சிகளால் தாக்கப்படாமலும் இருக்கும். இவ்வகைப் பயிர் உற்பத்திக்கு உரத் தேவை, பயிர்க் காப்பு, நீர்த் தேவை. பயிரிடுவதற்கான செலவு முதலியவை குறைவு. பஞ்ச கால உணவாகச் சேமித்து வைத்துக் கொள்ளவும் இவை ஏற்றவை.
சோளம் (Sorghum vulgare). இது ஒரு விதையிலை வகுப்பில் குளுமேசி தொகுதியில் கிராமினேகுடும்பத்தில் சோர்கம் பேரினத்தில், வல்கேர் சிற்றினத்தில் அடங்கும். சோளம் முதன் முதலில், கி.மு.2200ஆம் ஆண்டில் எகிப்தில் பயிரிடப்பட்டது. இந்தியா தற்போது சோளம் பயிரிடும் நாடுகளில் முதன்மையாகத் திகழ்கிறது. முதிர்ந்த தானியங்கள் பருத்த உருண்டையான பல கிளைகளைக் கொண்ட நீண்ட கதிரில் அடர்த்தியாக அமைந்திருக்கும். மணிகள் பழுப்பு நிறமாகவோ, வெள்ளை நிறமாகவோ இருக்கும். சோளம் கூட இந்தியாவில் பெரும்பாலோரின் அன்றாட உணவாகப் பயன்படுகிறது. இதன் தண்டும், இலைகளும் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும். இது 3—4 மீ. உயரம் வளரும்.
கம்பு (Pennisetum typhoides). இது ஒரு விதையிலை வகுப்பில் குளுமேசி தொகுதியில், கிராமினே குடும்பத்தில், பென்னிசிட்டம் பேரினத்தில், டைபாய்டஸ் சிற்றினத்தில் அடங்கும். பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கம்பு பயிரிடப்படுகிறது. இது 4 மீட்டர் உயரம் வளரக் கூடியது. இதன் கதிர்கள் ஏறத்தாழ ½மீ. நீளமுடையவை. கம்பில் மாவுச் சத்து மிகுந்துள்ளமையால் ரொட்டி தயாரிக்கப் பயன்படுகிறது. உடலுக்கு மிகு வெப்பத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ளமையால் பெரும்பாலும், குளிர் காலத்தில் இதை உணவாகக் கொள்கின்றனர். இதன் தண்டும், இலைகளும் கால் நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும்.
கேழ்வரகு (Eleusine coracana). இப்பயிரின் இருப்பிடம் இந்தியாவாகும். இது தென்னிந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படுகிறது. புன்செய்ப் பயிராகவும், இறைவைப் பயிராகவும் நன்கு வளரக் கூடியது. 1 மீ. வளரக் கூடிய இப்பயிரின் கதிர், விரல்களைப் போன்று கிளைத்துப் பழுப்பு நிற மணிகளை மிக நெருக்கமாகக் கொண்டிருக்கும். கடின உழைப்பாளிகளுக்கு இது சத்துள்ள உணவாகும். பால் கொடுக்கும் கால் நடைகளுக்குச் சிறந்த தீவனமாகவும் உள்ளது.
தினை (Setaria italica). இது பெரும்பாலும் பருப்பு வகைப் பயிர்களுடன் ஊடு பயிராகவே புன்செய் நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஏறத்தாழ 1 மீ. உயரம் வளரக் கூடிய பயிரில் அடர்த்தியான மணிகளைக் கொண்ட கதிர் மென்மையாகவும், ஓர் அடி வரை வளரக் கூடியதாகவும் இருக்கும். இதுஅனைத்துப் பருவத்திலும் கலப்புப் பயிராகவும், ஊடு பயிராகவும் பயிர் செய்ய ஏற்றது. இதில் கோ. 4 வகை மிகக் குறுகிய வயதுடையது. 65 நாளில் அறுவடைக்கு வரும். இதைத் தனிப் பயிராகச் சாகுபடி செய்தால், ஹெக்டேருக்கு ஏறக் குறைய 800 கி. கி. தானியம் கிடைக்கும். பருவ மழை தவறும் காலத்துப் பிந்திய பட்டமாகவும், இதைப் பயிர் செய்யலாம்.
வரகு (Paspalum Scrobiculatum linn). இது தமிழ்நாட்டில் மிகுதியாகப் பயிர் செய்யப்படுகிறது. வரகு நீண்ட காலப் பயிர்; இதன் வயது ஏறக் குறைய 150 நாள் ஆகும். எனவே, இது துவரையுடன் கலப்புப் பயிர் செய்ய ஏற்றது. இதை ஆடி அல்லது புரட்டாசிப் பட்டத்தில் விதைக்கலாம். மிகக் குறைந்த மழை இருந்தாலும், பயிர் வளர்ந்து விளைச்சல் தரும். சிறு தானியப் பயிர்களிலேயே வரகே உயர் விளைச்சல் தரும் தன்மை பெற்றுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து கோ.2 (150 நாள்), கோ. 3 (125 நாள்) என்னும் வகைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சாமை (Panicum miliare). சாமை மிகச் சிறிய பளபளப்பான தானியமாகும். இதை மலைப் பகுதிகளில் பயிரிடலாம். தமிழ்நாட்டில் கோ.2 என்னும் வகை பரவலாகப் பயிர் செய்யப்படுகிறது. இது 85 நாளில் பயன் தரக் கூடியது.
குதிரை வாலி (Echinochloa frumentacea). இப்பயிர் கடும் வறட்சியைத் தாங்குவதுடன், நீர் தேங்கிய சதுப்பு நிலங்களிலும் வளரக் கூடியது. இதில் முக்கியமான வகைகள் கே. 1, கோ.1 ஆகியன. இவை இரண்டும் ஏறக்குறைய 110 நாள் வயதுடையவை.
பனி வரகு (Panicum miliaceum). புரட்டாசி மாதத்தில், பயிர்கள் அறுவடை செய்த பின்னர், இதை விதைத்தால், குறைந்த நாளில் எஞ்சியிருக்கும் ஈரத்திலும், இப்பருவத்தில் உள்ள பனியிலும் வளர்ந்து பயன் தரும். இதன் தானியம் 15% புரதச் சத்துக் கொண்டது. கோ. 2 என்னும் வகை 70—75 நாளில் அறுவடைக்கு வரும். —இரா. குழந்தைவேலு
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 344)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bznac92s/
தமிழ்“சிறு தானியங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bznac92s/APA
Oliyon Research. (2026). சிறு தானியங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bznac92s/MLA
"சிறு தானியங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bznac92s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment