அட்டாதச இரகசியங்கள் என்பது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களின் பொருளையும் வேதாந்தங்களின் நுண்பொருளையும் கூறும் பதினெட்டு அரிய வைணவ நூல்களின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் வைணவராகிய பிள்ளை லோகாசாரியர் (1264–1369). இவர் தந்தை வடக்குத் திருவீதிப் பிள்ளை; தாயார் சீரங்க நாச்சியார், தென்னாட்டில் முடும்பை என்னும் ஊரில் ஐப்பசித் திருவோணத்தில் பிறந்தார். இவர் நூல்கள் அனைத்தும் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன. நூல்கள் வருமாறு:- (1) தனிப்பிரணவம்: இந்நூல் எட்டெழுத்தாலான திருமந்திரத்தின் பொருளை விவரிக்கிறது. (2) தனித்துவயம்: மந்திர இரத்தினமான துவயத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. துவயம் என்பது “ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்னும் இரு மந்திரங்களாகும். (3) தனிச்சரமம்: பகவத்கீதையின் சரமசுலோகத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. (4) யாத்ருச்சிகப்படி: இந்நூல் முன்னர்க் குறித்த மூன்று நூல்களிலுள்ள மந்திரங்களின் பொருள்களையே மிகவும் விரிவாகக் கூறுகிறது. (5) பரந்தபடி: முதல் மூன்று நூல்களின் விளக்கமாகும். (6) சிரியபதிபடி: மேற்கூறிய மூன்று மந்திரங்களின் பொருள்களையே மிகவும் சுருக்கமுமின்றி மிகவும் விரிவுமின்றி இடைநிலையில் விளக்கம் செய்கிறது. இந்நூலில் வடமொழிச்சொற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. (7) முமுட்சுப்படி: மேற்கூறிய மூன்று மந்திரங்களையே மூன்று பிரிவுகளில் கூறுகிறது. இது மிகச் சுருக்கமும் மிக விரிவுமின்றி வடமொழிச் சொற்கள் அதிகமின்றிச் சூத்திர வடிவில் அமைந்துள்ளது. மோட்சமடையும் இச்சையுடையவன் முமுட்சு. அவன் அறிய வேண்டிய தன்மை, வழி, குறிக்கோள் என்னும் மூன்று இரகசியங்களை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. (8) தத்துவத்திரயம்: நூற்பாவாக அமைந்துள்ள இந்நூல் சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்களை விரித்துக் கூறுகிறது. தத்துவம் என்பது ‘உண்மைப் பொருள்’ எனப் பொருள்படும். (9) அர்த்த பஞ்சகம்: இந்நூல் உயிரின் தன்னிலை (சுயசொரூபம்), இறைவன் நிலை (பரசொரூபம்) ஒருவன் விரும்பும் பேற்றின் நிலை (புருடார்த்த ரூபம்), தான் பெறும் பயனை அடைய ஒட்டாமல் தடுக்கும் தடையின் தன்மை (விரோதி சொரூபம்), தடையைப் போக்கி இறைவனை அடைவதற்குரிய வழியில் தன்மை (உபாய சொரூபம்) ஆகிய ஐந்து பொருள்களின் தன்மையை விவரித்துக் கூறுகிறது. இவ்வைந்து பொருள்களைக் கூறுவதால் இதற்கு இப்பெயர் அமைந்தது. (10) தத்துவசேகரம்: தத்துவம் என்பது திருமாலைக் குறிக்கிறது. சேகரம் என்பது அணி விசேடம், இந்நூல் திருமாலே பரம்பொருள் என்பதனை மறைகள் முதலானவற்றிலிருந்து தகுந்த சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. உயர்நிலை முதலானவையும் கூறப்பட்டிருப்பினும் இதன் காரண- மாகவே இப்பெயர் அமைந்துள்ளது. (11) பிரபந்த பரித்திராணம்; தன்னை அடைந்தவர்களைக் காத்தல் திருமால் ஒருவருக்கே இயல்பானது. மற்றெவரும் அதற்குரியரல்லர் என்பதனை மேற்கோள்களுடன் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. (12) நவவிதசம்பந்தம்; இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தந்தை, மகன் (பிதா, புத்திர), காப்பவன், காக்கப்படுவது (ரட்சக, ரட்சீய), அதிகாரி, சேவகன் (சேடன், சேட்டி), கணவன், மனைவி (பர்த்துரு, பாரியை), அறிபவன், அறியப்படுவது (ஞாத்துரு, ஞேய), உடைமை, உடையவன் (சுவ, சுவாமி) தாங்குபவன், தாங்கப்படுவது (ஆதார, ஆதேய), உடல், உடலில் உறைபவன் (சரீர, சரீரி) நுகர்பவன், நுகரப்படுவது (போத்துரு, போக்கிய) என்னும் ஒன்பது வகை உறவுகளை இந்நூல் விவரித்துக் கூறுகிறது. (13) நவரத்தினமாலை: ஒன்பது வகை இரத்தினங்களாலான மாலையைப் போன்று ஒன்பது வகையான பொருள்களை ஒருவன் நினைத்திருக்க வேண்டிய முறையை இந்நூல் கூறுகிறது. அவையாவன: தான், தனக்குப் பகையாய் நிற்கும் உடல், உடலினைப்பற்றி நிற்கும் உறவினர், ஊழ் வினையால் ஏற்பட்ட பிறப்பில் அல்லலுறும் மக்கள், தெய்வங்கள், சீவைணவர்கள், ஆசாரியன், பிராட்டி, இறைவன். (14) சாரசங்கிரகம்: துவயம் என்பது மறையின் சாரமாம். இந்நூல் அதனை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. துவயத்தில் அடங்கிய பொருள்களைக் கூறுகிறது. (15) பிரமேய சேகரம்: பிரமேயம் என்பது சான்றுகளினால் அறியப்படுவது, இறைவன் திருவருளைப் பெற்ற ஓருயிர் அவன் திருவடிகளில் ஆற்றும் தொண்டே அஃது அடையும் பயன் என்பதை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. (16) சம்சார சாம்ராச்சியம்: சம்சாரமென்னும் அரசாட்சி பற்றிக் கூறுகிறது. மன்னனுக்குப் படைவீடு போன்றது ஒருவனுக்கு அவனது உடல். இந்த உடலிலிருந்து ஆளும் ஆன்மாவை இறைவன் தன் திருவருளாலே திருத்திச் சேர்த்துக் கொள்ளுவான் என்று விளக்கிக் கூறுகிறது. (17) அருச்சிராதி கதி: அருச்சித என்பதற்குத் தேவர் என்பது பொருள். தேவர் முதலானவர் எதிர் கொள்ள ஒருவன் போகும் வழியான முக்தி நெறியைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. பிரமேய சேகரம் என்னும் நூலில் சுருங்கக் கூறியதை இந்நூல் விரித்துக் கூறுகிறது. திருவாய் மொழியிலுள்ள ‘சூழ் விசும்பணி முகில்’ என்று தொடங்கும் திருப்பாசுரம் இப்பொருளைப் பற்றியே கூறுகிறது. (18) சீவசன பூடணம்: இரத்தினாபரணம் என்பது இரத்தினங்கள் மிகுந்த அணிகலன், அதுபோலவே ஆசாரிய பரம் வசனங்களை மிகுதியாகக் கொண்டதாகவும் படிப்பவர்க்குப் பேரொளியைத் தருவதாகவும் இருப்பதனால், இந்நூல் இப்பெயர்பெற்றது. இது தென்கலை வைணவ ஆசாரிய பரம்பரையினரின் வழிமுறைகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இந்நூலின் சிறப்பு மணவாள மாமுனிகளின் உபதேசரத்தின மாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இவற்றுள் முமுட்சுப் படி, தத்துவத்திரயம் ஆகியவற்றுக்கு மணவாள மாமுனிகளே உரை எழுதி இருப்பது இந்நூல்களின் சிறப்பைக் காட்டும். ந.க.