விநாயகர் மீது பாடப்பட்டுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று. அரும்பாத்தை என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும் என்று கூறுகின்றனர். ஊர்ப் புள்ளிவிவரப் பட்டியலில் (Village Statistics Register) இவ்வூர் அரும்பாத்து என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வூரின் பெயர் அரும்பாத்தி என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இவற்றால் இவ்வூர் அரும்பாத்தை, அரும்பாத்து, அரும்பாத்தி ஆகிய மூன்று பெயர்களாலும் வழங்கப்பட்டது என்பது தெரிகிறது. இந்நூலாசிரியர் பெயரினை அறியக் கூடவில்லை. ஆனால், இந்நூலிலுள்ள சில பாடல்களிலிருந்து இவர் வறுமையில் வாடியவர் என்பதும், புதுச் செல்வம் பெற்ற பலரிடம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி நின்றார் என்பதும் அறியப்படுகிறன. இவர் தமக்கு விநாயகப் பெருமான் அருள்புரிந்த செய்தியினை ‘ஈரடி மீது தியானம் விடாதிரு என்றார்’ (19) என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாசிரியர் தமக்கு இரு புதல்வர் பிறந்தமை, புதல்வர்க்குச் சுப்பிரமணியன் வேதவிநாயகன் எனப் பெயரிட்டமை, விநாயகப் பெருமான் வேண்டியவற்றை அருளியமை ஆகியவற்றை நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் விநாயகருக்குரிய பல பெயர்களை ஒரு பாடலில் தொகுத்துக் காட்டியுள்ளார் (58). இந்நூல் விநாயகரைப் பற்றி அமைந்துள்ளமையால், காப்புப் பருவத்தில் காப்புக் கடவுளுள் ஒருவராக விநாயகர் தனியே குறிப்பிடப்பட்டு வணக்கம் கூறப்படவில்லை. அவையடக்கத்தோடு அப்பருவம் 11 பாடல்கள் கொண்டுள்ளது. இந்நூல், அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகத்தார் வெளியிட்டுள்ள ‘பிள்ளைத் தமிழ்க் கொத்து’ என்னும் தொகுப்பு நூலில் முதலாவதாக அச்சிடப் பெற்றுள்ளது.