அயல்நாட்டுச் செலுத்துநிலை என்பது நாடுகளுக்கிடையே கொடுக்கல் வாங்கலினால் எழும் பணச் செலுத்துநிலையைக் குறிக்கும். வணிகத் தொடர்பு தொன்மைக் காலத்தில் தொடங்கி அண்மைக் காலம் வரை பல்வேறு மாறுதல்களையும் வளர்ச்சி நிலைகளையும் அடைந்துவந்துள்ளது. இக்காலக் கட்டங்களில் ஏற்றத் தாழ்வுகள் தோன்றியுள்ளன. பல நாடுகளுக்கு மத்தியில் வாணிக நிலை மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்ட நிலையில்தான் அயல்நாட்டுச் செலுத்தல் நிலை என்ற கோட்பாடு உருவாகியது. அயல்நாட்டுச் செலுத்துநிலை (Balance of Payments) என்ற தொடர் முதன்முதலில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில், ஆங்கிலப் பொருளாதார நூல்களில் வணிகக் கோட்பாட்டினர் (Mercantilists) காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு அயல்நாட்டுச் செலுத்துநிலை என்ற கருத்து “மிகுதியான நிலை (Over–Plus), மிகுதியான மதிப்புநிலை (Over–Value), கணக்குச் சமநிலை (Balance of Accounts), செலுத்தல் சமநிலை (Balance of Remittance), மொத்தச் செலுத்தல் சமநிலை (Grand Balance of Payments)” ஆகிய தொடர்களால் குறிப்பிடப்பட்டது. முதன் முதலில் அயல்நாட்டுச் செலுத்துநிலை என்பது வரவினங்களைக் காட்டிலும் செலுத்தல்கள் (Payments) மிகுதியாக உள்ள நிலையைக் குறித்தது. தங்கத் திட்டக் காலத்தில் (Gold Standard) இக்கலைச் சொல், பன்னாட்டு வாணிகத்தால் ஒரு நாட்டினின்று நடைபெற்ற தங்கத்தின் வெளியேற்றத்தைக் குறித்தது. பின்னர், இக்கலைச்சொல் புதிய, நடுநிலையான பொருளில் பயன்படுத்தப்பட்டது. இப்புதிய கணக்கில் பொருளின்படி, இச்சொல் பன்னாட்டுக் கணக்கில் ஏற்படும் சமநிலையையே குறித்தது. அச்சமநிலை உடன்பாடாகவும் (Positive) எதிர்மறையாகவும் (Negative) இருக்கலாம். இக்கருத்து ஒரு நாட்டில் அயல்நாட்டு வாணிகத்தில் ஏற்படும் தங்கத்தின் வெளியேற்றத்தையும் (Ouflow of Gold) தங்கத்தின் உள்ளிறக்கத்தையும் (Inflow of Gold) குறித்தது. வணிகக் கோட்பாட்டினர் தங்கத்தின் உள்ளிறக்கத்தை “உதவியான நிலை” (Favourable Condition) என்றும், அதன் வெளியேற்றத்தைக் “கேடான நிலை” (Unfavourable Condition) என்றும் குறிப்பிட்டனர். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வணிகக் கோட்பாட்டினரின் இக்கருத்தை மறுத்தனர். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள், ஒரு நாட்டின் உண்மையான செல்வம் வெறும் தங்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று; அது பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும் என்ற உறுதியான கருத்தைக் கூறினர். எனவே, தங்கத்தின் உள்ளிறக்கத்தையும் அதன் வெளியேற்றத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அயல்நாட்டுச் செலுத்தல் நிலையைக் குறிப்பது முழுமையான விளக்கமாக அமையாது என்பது இவர்களின் கருத்தாகும். அயல்நாட்டுச் செலுத்தல் நிலையில் செயற்பாடான நிலை (Active), செயற்பாடற்ற நிலை (Passive), உடன்பாடான நிலை, எதிர்மறையான நிலை ஆகிய தொடர்கள் அயல்நாட்டுச் செலுத்தல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இவ்விளக்கங்கள் நிலைபெறவில்லை. காரணம், இவையும் முன்பு குறிப்பிட்ட விளக்கங்களைப் போலவே அரைகுறை விளக்கங்களாகவே அமைந்திருந்தன. இவ்வாறு, பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விளக்கங்களை உள்ளடக்கிய “அயல்நாட்டுச் செலுத்துநிலை” 20–ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கத்தைப் பெற்றது. காரணம், பன்னாட்டுப் பொருளாதார உறவுகளில் இந்நூற்றாண்டில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களே ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின், பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, பல்துறை முன்னேற்றங்கள் ஆகியவற்றுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாறுபட்ட அரசியல் கொள்கைகளையுடைய முதலாளித்துவ நாடுகளும் சமநிலைச் சமுதாய நாடுகளும் கூடத் தங்களிடையே பன்னாட்டு வாணிக உறவை வளர்த்துக் கொண்டு வருகின்றன. எனவே, ‘அயல்நாட்டுச் செலுத்துநிலை’ பன்னாட்டு வாணிக வளர்ச்சியினால் மேன்மேலும் புதிய விளக்கங்களைப் பெற்று முதன்மைநிலை அடைந்து வருகிறது. பி.டி. எல்சுவொர்த்து (P.T. Ellsworth) என்ற பொருளாதார அறிஞர், ‘பன்னாட்டுப் பொருளாதாரம்’ என்ற நூலில் (The International Economy) அயல்நாட்டுச் செலுத்துநிலை பற்றி விளக்கமளித்துள்ளார். “அயல்நாட்டுச் செலுத்துநிலை என்பது மிகவும் சிறந்த கோட்பாடாகும். ஒரு நாடு வெளிநாட்டாருடன் கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளும் இதில் அடங்கியுள்ளன. பொருள்களையும் பணிகளையும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நடப்புச் செயல்களும், வெளிநாட்டுச் சொத்துகளை வாங்குவது, விற்பது, வெளிநாட்டாரிடமிருந்து கடன் வாங்குவது, அவர்களுக்குக் கடன் கொடுப்பது போன்ற நிதி பற்றிய செயல்களும் இதில் அடங்கியுள்ளன, ஒரு பொருளாதார அமைப்பிற்கும் உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருளாதாரங்களுக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் முழுக் கணக்காகும்” என்று எல்சுவொர்த்து கூறினார். சார்லசு பி. கிண்டில் பெர்க்கர் (Charles P. Kindle Berger) என்ற பொருளாதார அறிஞர், அயல்நாட்டுச் செலுத்துநிலையின் பயன்பாட்டினைக் குறிப்பிடும் போது, ஒரு நாட்டின் பன்னாட்டுப் பொருளாதார உறவு நிலையில் மேற்கொள்ளப்படும் பணவியல், நிதியியல், செலாவணி ஆகிய கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அயல்நாட்டுச் செலுத்தல் நிலை செயற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். அயல்நாட்டுச் செலுத்தல் நிலையில், அயல்நாட்டு வாணிக நிலையும் அடங்கியுள்ளது. அயல்நாட்டு வாணிக நிலை (Balance of Trade), கண்ணுக்குப் புலனாகும் இனங்களின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளை மட்டும் குறிக்கும். ஆனால் அயல்நாட்டுச் செலுத்தல் நிலை என்பது, கண்ணுக்குப் புலனாகும் (Visible) இனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளையும், கண்ணுக்குப் புலனாகா (Invisible) இனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி மதிப்புகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாகும். கண்ணுக்குப் புலனாகும் இனங்கள் என்பவை ஒரு நாட்டின் துறைமுகத்தில், விமானத் தளக் கூடத்தில் கணக்கீடு செய்யப்படும் பொருள்சார் பண்டங்களாகும். சில எடுத்துக்காட்டுகள்: உணவு தானியங்களின் ஏற்றுமதி, இறக்குமதி, இரசாயனப் பொருள்கள், சணல், துணிகள், ஆலைக் கச்சாப் பொருள்கள் போன்றவையாகும். கண்ணுக்குப் புலனாகாத இனங்களும் ஒரு நாட்டின் வாணிகக் கணக்குகளில் சேர்க்கப்பட்டிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்: காப்பீட்டுச் செலவுகள், அயல்நாட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி, அயல்நாட்டுக் கப்பல்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம், அயல்நாட்டுத் தூதரகச் செலவு, அயல் நாடுகளுக்குச் செலுத்தும் இன்பப் பயணங்களின் செலவு போன்றவை. அயல்நாட்டுச் செலுத்துநிலைக் குறிப்பு (Balance of Payments Account) என்பது, ஒரு நாடு பிற நாட்டினருக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகையினையும் பிற நாட்டினரிடமிருந்து பெறவேண்டிய முழுத் தொகையினையும் குறிக்கும். இதில் பிற நாட்டவருக்குச் செலுத்தவேண்டிய தொகை இனங்கள் பற்று எனவும், பிற நாட்டவரிடமிருந்து பெற வேண்டிய தொகை இனங்கள் வரவு எனவும் கொள்ளப்படுகின்றன. தங்கத்தின் பெயர்ச்சி, கடன் பேரங்கள், முதலீடுகள் ஆகியன மூலதனக் கணக்கிலும் (Capital Account) மற்றவைகள் நடப்புக் கணக்கிலும் அடங்குகின்றன. அயல்நாட்டுச் செலுத்துநிலையில் பாதகமான சமனற்ற நிலை ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. பருவமழை பொய்த்தல், மிகுதியான அளவில் எந்திரங்கள் இறக்குமதி செய்தல், கச்சாப் பொருள்களின் இறக்குமதி, பணவீக்கத்தால் ஏற்படும் ஏற்றுமதிக் குறைவு, வணிகச் சூழலில் தோன்றும் மந்த நிலை, மக்கள்தொகைப் பெருக்கம், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மந்த நிலையாலும் பணவீக்க நிலையாலும் ஏற்படும் இறக்குமதி மிகுதி, வெளிநாட்டில் கடன் வாங்கு நிலைமை போன்ற காரணங்களால் கேடான செலுத்துநிலை, சமனற்ற சீர்கேட்டை நீண்டகாலம் இருக்கச் செய்தால், உள் நாட்டில் பொருளாதாரம் நிலையற்றதாகிப் பல சிக்கல்கள் தோன்றும், கேடான அயல்நாட்டுச் செலுத்துநிலையைக் குறுகிய கால நடவடிக்கைகள் மூலமும் நீண்டகாலத் தொடர் முயற்சிகளின் மூலமும் ஈடு செய்யலாம். பன்னாட்டுப் பண நிதியிலிருந்து (International Monetary Fund) கடன் பெறுதல், அயல்நாடுகளிலிருந்து கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகள் குறுகிய கால நடவடிக்கைகளாகும். உற்பத்தியைப் பெருக்குதல், இறக்குமதிகளைக் குறைத்தல், பணத் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல், நாணய மதிப்பைக் குறைத்தல் போன்ற செயற்பாடுகள் நீண்டகால நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில், 20–க்கு மேற்பட்ட நாடுகள், நாணய மதிப்புக் குறைப்பு முறையைக் கடைப்பிடித்துள்ளன. இந்தியா இரண்டுமுறை நாணய மதிப்புக் குறைப்பைச் செய்துள்ளது. மாற்று மதிப்பிறக்கத்தின் மூலமாக நாட்டுப் பணத்தின் புற மதிப்பை ஒரு குறிப்பிட்ட அயல்நாட்டுப் பணத்தினோடு குறைத்துக் கொள்ளும் முறையும் உள்ளது. இதனால், பணத்தின் மாற்று வீதம் பாதிக்கப்பட்டு அயல்நாட்டுப் பணத்தின் ஓர் அலகிற்கு முன்னைவிட கூடுதல் அலகுகள் உள்நாட்டுப் பணத்தைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு நாட்டில் கேடான செலுத்துநிலை ஏற்பட்டவுடன், மாற்று மதிப்பிறக்கம் (Exchange Depreciation) தோன்றி, உள்நாட்டுப் பணத்தின் மதிப்பு, அங்காடி அமைப்புகளினால் தானாகவே குறைக்கப்பட்டுவிடும். இந்தச் செயலினால் ஏற்படும் விளைவுகள் நாணய மதிப்பின் குறைவு (Devaluation) விளைவுகளை ஒத்திருக்கும். இந்தச் செயல் தானாகவே ஏற்படக்கூடியது. ஆனால் நாணய மதிப்புக் குறைவு என்பது அரசினால் விரும்பிக் கையாளப்படும் நடவடிக்கையாகும். நாணய மாற்றுக் கட்டுப்பாடு (Exchange Control) முறையை இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் கடைப்பிடித்து அயல்நாட்டுச் செலுத்து நிலையில் உள்ள சிக்கல்களைப் போக்கின. இம்முறையின்படி மக்களால் ஈட்டப்படும் அயல்நாட்டுச் செலாவணியை முற்றிலுமாக மைய வங்கி பெற்றுக் கொண்டு, இன்றியமையாத் தேவைகளுக்கு மட்டும் அதனைப் பங்கீடு செய்கிறது. இந்நடவடிக்கையின் மூலம், இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, ஏற்றுமதியை ஊக்கபடுத்திச் செலுத்துநிலை, சமன் நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. பணவாட்ட (Deflation) முறையின் மூலமும் செலுத்துநிலையில் சமனற்ற நிலையை ஈடுசெய்யலாம். நாட்டில் வழங்கும் பணத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் விலைக்குறைப்பை ஏற்படுத்தலாம். இதனால், பொருள்களின் ஏற்றுமதி பெருரும். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் அமைதியின்மை, அமைப்பற்ற பண அங்காடி வளர்ச்சி குறைந்த தன்மைகளையுடைய ஆகிய பொருளாதார அமைப்பில் இம்முறை பயன்தராது; தீமையே விளைக்கும். பணத் தொடர்புடைய நடவடிக்கைகள் மூலமும் அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் சமனற்ற நிலையை ஒழுங்குபடுத்தலாம். ஏற்றுமதிகளை ஊக்குவிக்க உதவித் தொகைகள் வழங்குதல், ஏற்றுமதி வரிகுறைப்புச் செய்தல், இறக்குமதி வரிகளை மிகுதிப்படுத்துதல், இறக்குமதிப் பொருள்களுக்கு ஈடான பொருள்களை உற்பத்தி செய்தல், இறக்குமதிக்கு வரம்புகள் கொண்டு வருதல் ஆகியவை பணத் தொடர்புடைய நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் அயல்நாட்டுச் செலுத்துநிலை மிகச்சிறந்த பங்கினைப் பெற்றுள்ளது. இங்கு வெள்ளையர் ஆட்சி நடைபெற்றபோது, இந்தியப் பொருளாதாரம், இங்கிலாந்துப் பொருளாதாரத்தின் நன்மைக்காகவே செயற்படுத்தப்பட்டது. அயல்நாட்டுச் செலுத்துநிலை, சுரண்டல் பொருளாதார அமைப்போடு சேர்ந்து இயங்கியது. இந்தியாவின் அயல்நாட்டுச் செலுத்துநிலை, 1939–ஆம் ஆண்டிலிருந்து சமனற்ற நிலையில் இருந்து வந்தது. விடுதலைக்குப் பின் இந்தியா, திட்டமிட்ட பொருளாதார முறையை அறிமுகப்படுத்தியது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் வளத்தைப் பெருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அயல்நாட்டுத் தொழில்நுட்ப உதவி பெறப்பட்டதுடன் அயல்நாட்டு எந்திரங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், தொழில் துறைக்குத் தேவையான எரிபொருள் (Energy) இந்தியாவில் கிடைக்கவில்லை. எனவே, வெளிநாட்டிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதிகளுக்காக அளவிறந்த அயற் செலாவணி செலவு செய்யப்படுகிறது. திட்டக் காலங்களில் இந்தியாவில் எதிர்பார்த்த அளவில் வேளாண்மை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு ஏற்றுமதியும் பெருகவில்லை. இதன் காரணமாக அயல்நாட்டுச் செலுத்து நிலையில் கேடான நிலை ஏற்பட்டது. இந்நிலையை அப்போதைக்கு ஈடுசெய்து, நீண்டகாலப் போக்கில் செலுத்துநிலையில் துணையான போக்கை ஏற்படுத்துவதற்குப் பன்னாட்டுப் பண நிதியிலிருந்து 3,000 கோடி உரூபாயை 1981–ஆம் ஆண்டு, இந்திய அரசு கடனாகப் பெற ஒப்பந்தம் செய்தது. இந்தக் கடனைப் பகுதி பகுதியாகப் பெற முடிவு செய்தது. இந்திய அரசு மீதி 1500 கோடி உரூபாயை 1984–ஆம் ஆண்டில் கடனாகப் பெறப் போவதில்லை என்று கூறிவிட்டது. இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் செயற்படத் தொடங்கியதாலும், ஏற்றுமதிகள் தொடர்ந்து பெருகியதாலும், இறக்குமதிகள் குறைந்து வந்ததாலும், விலைவாசிகள் கட்டுப்பட்டதாலும், பன்னாட்டுப் பண நிதியிலிருந்து வரவேண்- டிய கடனில் ஒரு பகுதியை வேண்டாமென்று இந்திய அரசு கூறியது. கீழ்வரும் அட்டவணை இந்தியாவின் இப்போதைய அயல்நாட்டுச் செலுத்துநிலையை விளக்குகிறது. ::{| style="text-align:center; 1966—67 முதல் 1981–82 வரை உரூபாய் கோடியில் (நிகரம்) !! !! பணம்சார் தங்க நடவடிக்கை (நிகரம்) !! !! செலுத்துநிலை ஆதாரம் இந்திய மைய அரசுப் பொருளாதார ஆய்வுகள்; 1977—78, 1983—84.மு.நா. துணை நூல்கள் Charles, P. Kindle Berger, “International Economics”, 1968. “Report on Currency and Finance Reserve Bank of India”, 1983—84. “Economic Survey”, Government of India., 1983—84 Katrak, H., “International Trade and the Balance of Payments”, Fontana/Collius, 1971.