தமிழிலுள்ள முதன்மையான பாக்களில் அடங்கும் வெண்பாவின் வகையுள் ஒன்று. செப்பலோசை உடையதாய், ஈற்றடி மூன்றுசீர் கொண்டதாய், ஏனைய அடி நாற் சீராய் வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்தளை பொருந்திப் பிறதளையும் சீரும் விரவப் பெறாமல், காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் முடிவது என்பது வெண்பாவின் பொதுவிலக்கணம். இப்பொதுவிலக்கணத்தோடு, நான்கு அடிகளைக் கொண்டதாய் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தா- லும் வந்து, தனிச்சொல் இல்லாமல் அமையும் வெண்பா இன்னிசை வெண்பா எனப்படும். அன்றியும், வெண்பாவின் பொதுவிலக்கணத்தோடு, நான்கு அடிகளில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தால் வருவனவும், மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவனவும், பல விகற்பங்கொண்டு ஒவ்வோரடியிலும் ஒரூஉத் தொடை பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவில் சிறிது வேறுபட்டு நான்கடியாக வருவனவும் இன்னிசை வெண்பாவில் அடங்கும். மூன்றடியாலமையும் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பாவுக்குரிய இலக்கணம் பெற்றமையுமாயின் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.