முதுகெலும்புள்ள உயிரினங்களின் சிவப்புக் குருதி அணுக்களிலும், தசைகளிலும் காணப்படும் நிறமியை ஹீமோகுளோபின் எனலாம் (கிரேக்க மொழியில் ஹீம் என்றால் குருதி என்றும், குளோபின் என்றால் புரதம் என்றும் பொருள் படும்). ஹீமோகுளோபின் ஒரு கருமை நிறச் சிவப்புப் பொருளாகும். அதைப் படிக வடிவத்தில் பெறலாம். இது நீரில் கரையக் கூடியது. சாராயத்திலும், ஈதரிலும் கரையாதது; வெப்பத்தால் பாதிக்கப் படுவது; அதன் மூலக் கூறு எடை 68,000. இது ஒரு குரோமோ புரதமாகும். இதில், ஹீம் எனப் படும் குரோமோஜென், குளோபின் என்ற புரதத்துடன் இணைந்துள்ளது. பல்வேறு உயிரினங்களில் ஹீமோகுளோபினின் தன்மை மாறு படுகிறது. இது மூலக் கூறின் புரதத் தன்மையைப் பொறுத்துள்ளது. நுரையீரலில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து, ஆக்சிஹீமோகுளோபினாக மாறி, தமனிகள் வழியாகத் திசுக்களுக்குச் சென்று, ஆக்சிஜனை வழங்குகிறது. தசைகளில் மையோ ஹீமோகுளோபினாகக் காணப் படுகிறது. சிவப்பு நிறமியான ஹீம், பார்ஃபைரின், இரும்புச் சத்து ஆகியவற்றின் கூட்டால் உருவாகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை வழங்குவதுடன், திசுக்களிலிருந்து கார்பன் டைஆக்சைடு வளிமத்தை யும், கார்போனிக் அமிலத்தையும் நடுநிலையாக்குகிறது. குருதியின் மிக இன்றியமையாத பணிகளுக்கு, ஹீமோகுளோபினே காரணமாகிறது. —மு.கி.பழனியப்பன் நூலோதி. Jay H.Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983.