இலிதுவேனியா
ilituvēṉiyā
பால்டிக்குக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஐரோப்பிய நிலப் பகுதியாகும்.
பால்டிக்குக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஐரோப்பிய நிலப் பகுதியாகும். இந்நாடு 1918 முதல் 1940 வரை சுதந்தர நாடாக இருந்தது. பின்னர்ச் சோவியத்து உருசியாவினால் கைப்பற்றப்பட்டது. இன்று இது சோவியத்து உருசியாவின் பதினைந்து குடியரசுகளுள் ஒன்றாக இலிதுவேனியச் சோவியத்துச் சமதருமக் குடியரசு என்னும் பெயரில் வழங்குகிறது. எனினும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இன்னும் சில நாடுகளும் இலிதுவேனியாவைத் தனிநாடெனவே கருதி வருகின்றன.
எல்லைகள்
இலிதுவேனியாவின் மேற்கில் பால்டிக்குக் கடலும், வடக்கில் இலாட்வியாவும் போலந்தும், தென்மேற்கில் உருசியக் குடியரசுகளுள் ஒன்றான உருசிய சோவியத்துக் கூட்டாட்சிச் சமதருமக் குடியரசும் (Russian Soviet Federal Socialist Republic - RSFSR),
இலிதுவேனியா
கிழக்கிலும் தெற்கிலும் பைலோருசியாவும் இதன் எல்லைகளாகும். வில்னா என்னும் வில்னியசு இலிதுவேனியாவின் தலைநகராகும்.
பரப்பு
இலிதுவேனியாவின் பரப்பு 65,200 ச.கி.மீ. ஆகும்.
மக்கள்தொகை
இக்குடியரசின் மக்கள்தொகை 1970–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 31,66,000 ஆகும்.
மக்கள்
இலிதுவேனியாவின் மக்களுள் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் இலிதுவேனியர்களாவர். இவர்கள் தனித்ததொரு தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்; இவர்களுக்கென்றமைந்த பழக்கவழக்கங்களும் மொழியும் இன்றும் வழக்கிலுள்ளன. ஏறத்தாழ 9 விழுக்காட்டினர் உருசியர்கள், போலந்து மக்களும் பெருமளவில் உள்ளளர். ஒரு விழுக்காட்டினர் யூதர்கள். இரண்டாம் உலகப் பெரும்போருக்கு முன்னர் இங்கு ஏறத்தாழ 8 விழுக்காட்டு யூதர்கள் இருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் போரின்போது செருமானிய நாசிகளால் கொல்லப்பட்டனர்.
பெரும்பாலான இலிதுவேனியர்கள் கத்தோலிக்கக் கிறித்தவர்கள், சிறுபான்மையினர் உலூதரின் திருச்சபையைச் சார்ந்த மறுப்புரையாளர்கள் (Protestants). இன்றுள்ள பொதுவுடைமை அரசு சமயவிருப்பு வெறுப்பற்றது.
நாட்டுப்புறச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த இலிதுவேனியா உருசியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், தொழில்மயமாகி வருகிறது. நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. சிறு பண்ணைகளுக்கு மாறாக அரசு மயமாக்கப்பட்ட கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் நகரப் புறங்களில் வாழ்கிறார்கள். உருசியர்கள் பலர் இக்காலத்தில் இலிதுவேனியாவில் குடியேறிப் பெரும்பதவிகளை வகித்து, இதன் தலைவிதியைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
நிலம்
இலிதுவேனியாவின் தென்கிழக்கு, உயரம் மிகுந்த பகுதி நடுத் தாழ்நிலங்களில் நிலம் சரிந்து மேற்கில் உயருகிறது. கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் மணற்குன்றுகள் உள்ளன. அவை மக்கள் வாழுமிடங்களாகவும் உருமாறி வருகின்றன.
இக்குடியரசில் ஏறத்தாழ 3000 சிறு ஏரிகளும் நூற்றுக் கணக்கான ஆறுகளும் உள்ளன. ஏரிகள் இலிதுவேனியாவில் 1½ விழுக்காடு பரப்புடையன. நீமன் என்னும் ஆறு இக்குடியரசின் மிக்க நீளமான ஆறாகும். இந்த ஆறு பைலோருசியாவில் தொடங்கி, தென்கிழக்கில் பாய்ந்து இலிதுவேனியாவுக்குப் பெரிதும் பயன்பட்டுப் பால்டிக்குக் கடலில் கலக்கிறது.
இங்குக் கனிமப்படிவங்கள் குறைவு. களிமண், மணல், மருந்துக்காரை உப்பு, (Gypsum) சுண்ணாம்புக்கல், நிலக்கரி, சுண்ணாம்புப்பாறைவகை (Dolomite) போன்ற இயற்கைச் செல்லங்களைக் கொண்டுள்ளது. காடுகள் இந்நாட்டின் காற்பங்கு நிலத்தைக் கொண்டுள்ளன. மேற்கு இலிதுவேனியாவில் சிறிதளவு பெட்ரோல் கிடைக்கிறது.
தட்பவெப்பம்
சனவரி இலிதுவேனியாவில் மிகக் குளிரான மாதமாகும்; சூலை வெப்பம் மிகுந்த மாதமாகும். ஆண்டொன்றுக்கு இந்நாட்டில் 53 செ.மீ. முதல் 86 செ.மீ. வரை மழை பொழிகிறது.
பொருளாதாரம்
இந்நாட்டைக் கைப்பற்றிய பின்னர்ச் சோவியத்து அரசு பல தொழிற்சாலைகளைக் கட்டி இதன் பொருளாதாரத்தை உயர்த்த முயன்று வருகிறது. இலிதுவேனியாவில் 1940க்கு முன்னர், தொழிற்சாலைகள் மிகக் குறைவு. இன்று பொருளாதார வருவாயில் மூன்றிலிரண்டு பங்கு தொழிற்சாலைகளால் பெறப்படுகிறது. இன்று அனைத்துத் தொழிற்சாலைகளையும் அரசு ஏற்று நடத்துகிறது. அதனால், மக்களின் வருவாய் மிகுதியாக உயர்ந்துள்ளது.
இரசாயனப் பொருள்கள், கட்டுமானக் கருவிகள், மின்சாரச் சாதனங்கள், உணவு பதப்படுத்துதல், இயந்திர உற்பத்தி, உலோகப் பணிகள் போன்ற இலிதுவேனியத் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
இலிதுவேனிய வேளாண்மையில் பால்பண்ணைப் பொருள்களும் இறைச்சி உற்பத்தியும் குறிப்பிடத்தக்கவையாகும். இலிதுவேனியப் பொருளாதாரத்தில் காற்பங்கு வருவாய் வேளாண்மையால் வருகிறது. பண்ணைநிலங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை.
வரலாறு
தொன்று தொட்டே இலிதுவேனியாவில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். உரோமானிய வரலாற்று அறிஞரான தாசிடசு (Tacitus) என்பார் கி.பி. 100–ஆம் ஆண்டு அளவில் பால்டிக்குக் கடலை அடுத்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களை முதன் முதலாக சுட்டிக் காட்டியுள்ளார். இலிதுவேனிய மக்கள் கி.பி. 12–ஆம் நூற்றாண்டினிறுதியில் ஒரு நாட்டினமாக இணைந்தார்கள். அரசரான மிண்டாகாசு (Mindaugas) கி.பி. 1251–இல் இலிதுவேனியர்களின் முதல் மாமன்னர் ஆனார். அவரைப் பிரபுக்கள் கி.பி. 1263–இல் கொன்றுவிட்டனர்.
தியூடானிய வீரர்கள் என்னும் செருமானியக் குழு கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இலிதுவேனியாவைக் கைப்பற்றும் நோக்குடன் முயன்றபோது, இலிதுவேனிய மக்கள் அவர்களை எதிர்த்தனர். இந்நாடு கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் அதன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. அதன் எல்லை கிழக்கில் மாசுகோ நகருக்கு அண்மைவரையிலும், தெற்கில் பால்டிக்குக் கடல்வரையிலும் பரவிற்று.
இலிதுவேனியரான சோகைலா (Jogaila) என்பார் கி.பி. 1386–இல் இலிதுவேனியாவைப் போலந்து நாட்டுடன் இணைத்தார். தொடக்கத்தில் இவ்விரு சுதந்தர நாடுகளின் கூட்டிணைப்பாயிருந்த இது, கி.பி. 1569–இல் ஒன்றாக இணைந்து ஒரே நாடாயிற்று. எனினும், இலிதுவேனியா–போலந்து அரசு கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சிதைந்தது. இலிதுவேனியா கி.பி. 1795–இல் உருசியாவின் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டது. உருசிய ஆட்சியை கி.பி. 1831–இலும் அடுத்து கி.பி. 1863–இலும் எதிர்த்து. இந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்து கலகம் விளைவித்தனர். எனினும், அவர்களால் சுதந்தரம் பெற முடியவில்லை. சார் மன்னர் இலிதுவேனியாவில் உருசியாவின் செல்வாக்கை வளர்க்கப் பெரிதும் முயன்றார். இலிதுவேனிய மொழியில் அச்சிடப் பெற்ற நூல்களைத் தடைசெய்யும்படியும் இலிதுவேனியப் பள்ளிகளை மூடும்படியும் சார் அரசர் ஆணைகள் பிறப்பித்தார். எனினும், இலிதுவேனிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வி புகட்டித் தம் தேசியப் பண்பாட்டை வளர்த்தனர். இக்காலத்திலும் அதற்குப் பின்னரும் பல இலிதுவேனியர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர்.
இலிதுவேனியா விடுதலை இயக்கம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது
இலிதுவேனியா–தலைநகர் வில்னியசு இலிதுவேனிய மக்களால் 1905–ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநாட்டில், உருசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சிக் கோரிக்கையை வெளியிட்டனர். உருசியர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். முதல் உலகப் பெரும் போரின்போது செருமானியப் படைகள் இலிதுவேனியாவைக் கைப்பற்றிக் கொண்டன. உருசியா, செருமனி ஆகிய நாடுகளின் பிடியிலிருந்து 1918–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 16–ஆம் நாள் விடுவித்துக் கொண்ட முதல் பால்டிக்குக் கடல் நாடு இலிதுவேனியாதான். இலிதுவேனியாவில் மக்களாட்சி அரசு மலர்ந்தது. இவ்வரசு நிலச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்து, பெரும் பண்ணைகளைப் பிரித்து, நிலமற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. இவ்வரசு கல்லூரிகளையும் பல்கலைக் கழகத்தையும் நிறுவியது.
முதல் உலகப் பெரும்போர் முடிந்த பின்னரும் இலிதுவேனியாவில் போர் தொடர்ந்தது. உருசியா இந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால், இலிதுவேனியர்கள் உருசியரைத் தோற்கடித்தார்கள். இருநாடுகளுக்குமிடையே 1920–ஆம் ஆண்டில் அமைதி உடன்படிக்கையொன்று கையெழுத்தாயிற்று. இலிதுவேனியாவின் தலைநகரான வில்னியசு நகரத்தை 1920–இல் போலந்து கைப்பற்றி, 1939–ஆம் ஆண்டு வரை அந்நகரத்தைத் தன் வசம் வைத்திருந்தது.
இலிதுவேனியாவின் ஆட்சியை 1926–ஆம் ஆண்டில் ஒருசில படைத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் கைப்பற்றிக் கொண்டனர். செருமனி இலிதுவேனியாவின் ஒரு பகுதியை 1939–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கைப்பற்றிக் கொண்டது. மக்களாட்சியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் முயன்றும் பயன் ஏற்படவில்லை. செருமனியும் உருசியாவும் 1939–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உடன்படிக்கை செய்து கொண்டபோது, பால்டிக்குப் பகுதி உருசியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. உருசியர்கள் இலிதுவேனியாவில் பல இராணுவத் தளங்களை அமைத்தனர்.
உருசியர்கள் 1940–ஆம் ஆண்டில் அனைத்து இலிதுவேனியப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு, அங்குப் பொதுவுடைமைக் கட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சோவியத்துக் குடியரசினை நிலைநாட்டினர். செருமானியர்கள் 1941–இல் உருசியாவின்மீது படையெடுத்த போது, தன்னாட்சி வேண்டி இலிதுவேனியர்கள் உருசிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கலகம் செய்தனர். ஆனால், செர்மானியர்கள் இலிதுவேனியாவை வென்று, 1944–ஆம் ஆண்டு வரை தம்மிடம் வைத்திருந்தனர். இலிதுவேனியா 1944–இல் மீண்டும் உருசியா வசமாயிற்று.
இலிதுவேனிய அதிரடிப்படைவினர் 1944–இலிலிருந்து 1952 வரை உருசியர்களுடன் போரிட்டனர். போரில் பல்லாயிரவர் கொல்லப்பட்டனர். உருசியர்களும் 3½ இலட்சம் இலிதுவேனியர்களைச் சைபீரியாவிலுள்ள தொழிலாளர் பாசறைகளில் தள்ளித் தண்டித்தனர்.
இலிதுவேனியாவில் பெருகி வளர்ந்திருந்த உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கை ஒழிக்கவும் உருசிய அரசு முயன்றது. எனினும், மக்களின் சமய உணர்வு குன்றவில்லை.
பதினேழாயிரம் இலிதுவேனியர்கள் சமய சுதந்திரத்தை நிலைநாட்டக் கோரி 1972–இல் விண்ணப்பம் ஒன்றைக் கையெழுத்திட்டு ஐக்கிய நாடுகளின் அவைக்கு அனுப்பினர். அதேயாண்டில் பல மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் சோவியத்து அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்தினர். பலர் தீக்குளித்து உயிர் துறந்தனர். இன்றும் இலிதுவேனிய மக்கள் விடுதலை வேட்கை மிக்கவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 408)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ba5suagq/
தமிழ்“இலிதுவேனியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ba5suagq/APA
Oliyon Research. (2026). இலிதுவேனியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ba5suagq/MLA
"இலிதுவேனியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ba5suagq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment