இன உணர்வு என்பது வரலாறு, பொருளாதாரம், அரசியல், மன இயல் போன்ற காரணிகளைப் பொறுத்தது. எந்த இனம் பிற இனத்திலிருந்து தனக்கு வேறுபட்ட உயர்ந்த பண்பாடும் சமுதாயப் பழக்க வழக்கங்களும் உள்ளன என்று கருதி அவற்றில் பெருமை கொள்கிறதோ அந்தத் தனியுணர்வு இன உணர்வு எனப்படும். இந்த இன உணர்வு பிற இனத்தை அல்லது இன உணர்வைக் கருதாமல் அல்லது மதிப்பிற்குரியது என்று நினையாமல் இருக்கச் செய்கிறது. இச்செயலே இனப் போர்களை உருவாக்குகிறது. இது நீடிக்கப்படும்போது இன அழிப்புக்கு வழி கோலுவதால் இது இன அழிப்பு (Genocide) எனச் சொல்லப்படுகிறது. இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை; நெடுங்காலம் நீடித்து நிலைக்கக் கூடியவை. இதனால் சமூகத்தின் ஓரினமே அழிக்கப்படும் அபாயக் கூறுகள் மிகவுள்ளன. சில சமயங்களில் அமெரிக்காவில், மேற்கு ஆப்பிரிக்காவில், வியட்நாமில், கொரியாவில் நடப்பதுபோல் நாகரிகம் அடைந்த இனம் நாகரிகமற்ற குழு என அது கருதும் வேறொரு குழுவின் மீது கொள்ளும் அடக்குமுறைப் போராட்டமும் இனப் போர்தான். ஒரே நாட்டைச் சேர்ந்த (இந்தோனேசியா, இசுரேல்) பல குழுக்களிடையே ஏற்படும் சமூகச் சண்டைகளும் இனப் போர்தான். ஆனாலும் இவை இன அழிவில் முடிவதில்லை. முதலில் கூறியதுபோல் இன உணர்வு மேலோங்கி நிற்கும் ஓர் இனம், அதே நாட்டைச் சேர்ந்த மற்றோர் இனத்தை இழிவுபடுத்தும்போதும் தாழ்வாக நடத்தும்போதும் அரசியல் சமூக உரிமைகளை மறுக்கும்போதும் ஏற்படும் இனப்போர் அழிவை உண்டாக்குகிறது. மனித உரிமைகள் மறுக்கப்படுவது மிக இழிந்த செயலாகும். கம்பூச்சியாவில் (இக்காலக் கம்போடியா) 1985 ஏப்பிரல் முதல் நடைபெற்ற கலவரங்கள் மனிதக் குல நாடி நரம்புகளைத் துடிக்க வைக்கும் அஞ்சத் தக்க செயல்களாகும். கியுசாம்பான் அரசு கவிழ்ந்தபின் அமைந்த அமெரிக்க அடிமை அரசக்குல சிசோனக்கு அரசைக் கவிழ்த்துப் பால்–பாட்டுக் குடியரசு ஏற்பட்ட பின்பும், பொதுவுடைமையாளர் அரசைக் கைப்பற்றிய பின்னரும் கெமர் எனப்படும் அந்நாட்டு இனத்தவர் இத்தகைய ஆட்சிப் போர்களினால் அழிக்கப்படுவது மிகுதியாகியுள்ளதே தவிரக் குறையவில்லை. நல்லாட்சியின்மையும் நீதிக்கேடும் தலைவிரித்தாடும். ஒரு பிணக்காடாகக் கம்பூச்சியா மாறிவருகிறது. வெளிநாட்டு உயர் கல்வி, தொழிற் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி ஆகியவற்றைப் பயின்றவர் தேவையில்லை என்று பொதுவுடைமையாளர் முடிவு செய்தது நேர்மையற்றதாகும். நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்குத் துரத்தப்பட்டு வயல்களில் இழிவான நிலைகளில் வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். இத்தகைய துன்புறுத்தல்களால் எண்ணற்ற மக்களும் குழந்தைகளும் பசி, பட்டினி, நோய், வெட்டு, கொலை முதலியவற்றிற்கு ஆளாகி மனித நாகரிகமே மறைந்து போகும் நிலை உருவாகிவிட்டது. அமெரிக்காவும் உருசியாவும் வியட்நாமும் சீனாவும் இந்த நாட்டில் போரிட்டுக் கொண்டதன் விளைவே இத்தகைய கொடுமைகள் என்பது நன்கு புலனாகிறது. இதுபோன்ற அரசியல் பலப் போட்டிகளால் அந்நாட்டின் மக்கள் தொகையின் 1/3 பங்கை அந்நாட்டு மக்களே அழித்துக் கொண்டு வருகின்ற செயல், அந்நாட்டிற்கு மட்டுமன்று மனித இனத்திற்கே சீர்கேட்டைப் பயப்பதுதான். இனி, சிரீலங்காவை எடுத்துக் கொண்டால் அங்கே இப்போது நடைபெற்றுவரும் – இனியும் நடைபெறப்போகும் – தமிழ் இன அழிப்பு, காலம் காலமாக அதாவது 1956–58–இலிருந்து சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே நடைபெற்று வந்திருக்கும் இனப்போரின் விளைவேயாகும். இந்தத் தீவு ஆங்கிலக் குடியேற்ற நாடாக இருந்தது. சுதந்திரம் அடைதற்பொருட்டுச் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து போராடினர்; ஆயினும் பெரும்பான்மை மக்களான சிங்களவர்கள் தமிழ் இனத்தார்களுக்குக் குடியுரிமை, வாக்குரிமை போன்ற உரிமைகள் பெறுவதற்குக் கூடச் சில கட்டுப்பாடுகளை அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தினர். ஒரு சாராருக்கு நன்மையாக அமைந்த இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது அதன் விளைவை அறியாத தமிழர்கள், ஆங்காங்கே உரிமைகள் மறுக்கப்- பட்டுச் சலுகைகள் பெற முடியாதபோதுதான் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றி அறிந்தனர். உயர் நிலையிலுள்ள சிங்களவரே 1955 வரை ஆட்சியிலிருந்ததால், அவர்களே அரசியலிலும் தேர்தலிலும் பங்கு கொண்டதால் இனச்சிக்கல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்தது. புதிய உயர் வேலை வாய்ப்புகள், வாக்குரிமை முதலியவை மறுக்கப்பட்டாலுங் கூட ஏற்கனவே உயர் பணிகளில் இருந்தவர்கள் சிங்கள அரசால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமலிருந்தார்கள். ஆனால், 1956க்குப் பிறகு சிங்கள உயர்நிலை அரசு, கீழ் நிலை மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சிக்கு ஒரு வகையில் காரணமாயிற்று. அரசியலில் கீழ்நிலைச் சிங்களவரும், புத்த மகா சங்கத்தினரும் பங்கேற்கும் நிலை உருவாகியது. அவர்கள் பெரும்பான்மையினராக இருந்ததால் சிங்கள அரசு சிறுபான்மையினரான தமிழினத்தின் மேல் கடுமையான கொள்கைகளை விரைந்து திணிக்கத் தொடங்கியது. ஒடுக்கப்படத் தொடங்கியதும் தமிழினம் தன் உரிமைகளைப் பெறப் போராட்டத்தைத் தொடங்கிற்று. தமிழினத்தின் இத்தகைய போராட்டம் அவ்வப்போது அடக்கி நசுக்கப்பட்டு வந்தது. தமிழ் விடுதலைப் புலிகள் என்னும் இளைஞர் தீவிர இயக்கம், 1973க்குப் பிறகு தீவிரமாகப் போராடத் தொடங்கிற்று. இதன் விளைவு, சிங்கள மேட்டுக் குடியினர் இராணுவத்தையும் புத்த மகா சங்கங்கள், கீழ் நிலையிலுள்ள சிங்களவர் ஆகியோரின் பேராற்றலையும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாயினர். சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்தத் தாக்கத்தை உணரவே, இன்று அங்கே இரு இன மக்களுக்கிடையே நடக்கும் போர் இன அழிப்புக்கு வழிகோலி விட்டது. தமிழ்நாடும் இந்தியத் துணைக்கண்டமும் இந்த முயற்சிகளுக்கு ஊக்கமும் படைக்கலமும் பயிற்சியும் அளிப்பதாகச் சிங்கள அரசு உலகெங்கும் அறிவித்துக் குற்றஞ்சாட்டி, அதனால் இசுரேலிய மொசாட்டு, பிரிட்டன் ஆகிய நாடுகளின் படை உதவியை நாடி, அவர்களின் மூலம் தமிழினத்தை அழித்து வருகிறது. இதை இந்தியா ஐ.நா.விற்கு எடுத்துச் சென்றால் அது அனைத்துலகச் சிக்கலாகித் தீர்வு காண இயலாத ஒன்றாகி விடும் என்று தயங்குகிறது. சமாதானப் பேச்சுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஒன்றைக் காண இயலும். அ.சி.