சமண தோத்திர நூலாகிய திருக்கலம்பக ஆசிரியர். இவர் கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; சமண சமயத் துறவி. இவர் தொண்டை நாட்டிலுள்ள பையூர்க் கோட்டத்து ஆரணி நெடுந்துறையை அடுத்துள்ள ஆர்ப்பாகை என்னும் ஊரைச் சேர்ந்தவர். உதீசி என்னும் சொல் வடதிசை என்று பொருள்படும். இவர் வடதிசையைக் குறிக்கும் சொல்லால் உதீசித்தேவர் என்னும் பெயர் பெற்றார் என்பதனை, ‘உத்தர திசை முதல் வைத்த தேவர் பெயர் பெற்ற நல்லறிவோன்’ என்னும் உரைச் சிறப்புப்பாயிரத் தொடர் உணர்த்துகிறது. இவரை ‘வடபால் மொழி தலை மணந்த தேவன்’ என்று பாயிரப் பகுதி கூறுவதனால், வடமொழியில் இவர் மிக்க புலமையுடையவர் என்பது தெரிகிறது. புத்த சமயத்தை எதிர்த்து வாதிட்டு அதனை அழிக்க முயன்றார் என்பதனால் இவர் ‘சாக்கிய குடாரன்’ என்னும் பெயரால் சிறப்பிக்கப் பெற்றார். இவர் இயற்றிய திருக்கலம்பகம் 110 பாடல்களைக் கொண்டுள்ளது. இக்கலம்பகத்தில் பாண், தழை என்னும் இரண்டு கலம்பக உறுப்புகள் நீங்கலாக 16 உறுப்புகளே உள்ளன. இந்நூலாசிரியர் சிவன், திருமால், முருகன் முதலிய சைவ வைணவத் தெய்வங்கள் எல்லாம் அருகனே என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அம்பிகையும் அருகதேவனின் ஆற்றலே என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தம் நூலில் தமிழகத்தில் விளங்கிய சமணத் தலங்களாகிய உச்சந்தமலை, சும்பை, தீபங்குடி, மயிலாபுரி ஆகியவற்றைச் சிறப்பித்துள்ளார். இவர் சிறந்த சமண சமயத் துறவியாதலின், தம் கலம்பகத்தில் அகப்பொருளைப் பாடாது விடுத்துள்ளார். இவர் தம் திருக்கலம்பகத்தில் சமண சமயக் கோட்பாடுகள் பலவற்றைச் சிறப்புறப் புலப்படுத்தியுள்ளார். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. ஆர்ப்பாகை என்னும் ஊரினரான சந்திரநாதர் புதல்வரான அனந்ததேவர் அதனை எழுதினார் என்பது கூறப்படுகிறது. இவ்வுரையாசிரியர் அனந்தகவி எனவும் வழங்கப்படுவார். பாடலில் இடம் பெற்றுள்ள பல சமண சமயப் பொருள்களை இவ்வுரை தெளிவுற விளக்குகிறது.