அயல்நாட்டுக் கொள்கை
ayalnāṭṭuk koḷkai
அயல்நாட்டுக் கொள்கை என்பது இறைமை உடைய அரசுகளுக்கிடையே போர், அமைதி முதலிய எல்லாத் துறைகளிலும் உள்ள உறவுகளை அல்லது தொடர்புகளை எடுத்துக்காட்டும் விதிகளைக் குறிக்கிறது.
அயல்நாட்டுக் கொள்கை என்பது இறைமை உடைய அரசுகளுக்கிடையே போர், அமைதி முதலிய எல்லாத் துறைகளிலும் உள்ள உறவுகளை அல்லது தொடர்புகளை எடுத்துக்காட்டும் விதிகளைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாடும் தன் பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உறுதிசெய்து கொள்ளும்பொருட்டு, மற்ற நாடுகளுடன் சிறப்பாக அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்களைப் பேசி முடித்தல் வேண்டும். ஆகையால் ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கும் அரசியல் தந்திரக் கலையும் அயல்நாட்டுக் கொள்கையோடு (Foreign policy) இணைந்ததுதான்.
பண்டைக்காலத்தில் வலிய அரசுகள் வலிமையற்ற அரசுகளை வென்று இணைக்கும் நோக்கத்தோடு தம் படை வலிமையைக் காட்டி, அவற்றை அச்சுறுத்திப் பணிய வைத்தன. சிறிய வலிமையற்ற நாடுகள் தம் சுதந்திரத்தையும் பொருள்வளத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, வலுத்தாக்குதலுக்கெதிராகத் தற்காப்பு ஒப்பந்தங்களைத் (Defensive alliances) தமக்குள் செய்துகொண்டன. இந்த வகையான அயல்நாட்டு ஒப்பந்தம் அல்லது கொள்கை இக்காலத்திலும் சில சிறிய நாடுகளிடையே காணப்படுகிறது. ஒரு வலிமிக்க நாட்டில் படை வலிமைக்கு எதிராக அல்லது இணையாக வேறு பல சிறிய நாடுகள் ஒரு கூட்டாக இணைதல் வேண்டுமென்ற அயல்நாட்டுக் கொள்கையை இங்கிலாந்து கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் உருவாக்கிற்று. இவ்வகையான அயல்நாட்டுக் கொள்கை, சக்தி சமநிலைக் கொள்கை (Balance of Power) எனப்படும். இந்தக் கொள்கையே, கி.பி. 17, கி.பி. 17,18,19–ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சுக்கெதிராகப் பிரிட்டனின் அயல்நாட்டுக் கொள்கையையும், 20–ஆம் நூற்றாண்டில் செருமனிக்கு எதிராகப் பிரிட்டன், பிரான்சு ஆகியவற்றின் அயல்நாட்டுக் கொள்கையையும் உருவாக்கிற்று. சர்வதேச சங்கம் நிலைநாட்ட முயன்ற கூட்டுப்பாதுகாப்பு என்ற கோட்பாடும், இந்த நோக்கத்தையே உடையது. வியன்னா ஒப்பந்தம் (கி.பி. 1815), வெர்செய்ல்சு ஒப்பந்தம் (கி.பி. 1919), கி.பி. 1945–க்குப் பின் நடைபெற்ற பல ஒப்பந்தங்கள், ஐக்கிய நாடுகள் அவை முதலியவை எல்லாம் சக்தி சமநிலைக் கொள்கையை நோக்கமாக உடையவையே என்று ஆசிரியர் மர்கந்த்தால் (Mar) என்பவர் குறிப்பிடுகிறார்.
ஒரு நாட்டு அரசாங்கத்தின் நலன்கள் வேறு நாடுகளில் எடுத்துச் சொல்லப்படுவதற்கும், அயல்நாட்டுக் கொள்கைக்கு ஆதாரமான இன்றியமையாத செய்திகளைத் திரட்டித் தருவதற்கும், அயல்நாட்டுப் பணிகளையே தன் தொழிலாகக் கொண்டுள்ள அயல்நாட்டுப் பணியகம் (Foreign Office) தோன்றிற்று. இவ்வாறு தோன்றிய பின்னர்த்தான் அயல்நாட்டுக் கொள்கையும் முறையான வடிவம் பெற்றது. கொள்கை என்பது நோக்கத்தையும், அதனை அடைவதற்காக வழியையும் காட்டும் ஒரு விதியாகும். அயல்நாடுகளோடு உள்ள உறவு அல்லது தொடர்பு என்பது, ஒரு கொள்கையின் வடிவத்தில் கையாளப்படுகிறது.
முதன்முதலாகத் இக்கால இயந்திரங்களைக் கண்டுபிடித்து அவற்றினுதவியால் தொழில்துறையிலும், வாணிகத்திலும் முன்னேறத் தொடங்கிய இங்கிலாந்து நாடு, கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தனது வாணிகம் வளருவதற்காகக் குடியேற்ற நாடுகளை நிறுவும் கொள்கையையும் (Policy of Colonisation) தடையற்ற வாணிகக் கொள்கையையும் (Free Trade) கடைப்பிடித்தது. இது மேற்கத்திய நாடுகளுக்கிடையே போட்டியையும் போர்களையும் தோற்றுவித்தது. இச்சூழ்நிலைகளில் அமைதியை நிலைநாட்டுதற்காக அரசியல் தந்திரக் கலை மிகவும் பயன்பட்டது. ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்காக அயல்நாட்டு அமைச்சர்கள், தூதுவர்கள், சார்பாளர்கள் முதலிய அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். இவர்களுள் சிலருக்கு ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்கு முழு அதிகாரங்களும், சிலருக்குச் செய்திகளை மட்டுமே அளிக்கும் அதிகாரங்களும் இருந்தன.
இப்பொழுது பழைய குடியேற்ற நாட்டுமுறை அல்லது பேரரசு ஆதிக்க முறை மறைந்து, சுதந்திர அரசு முறைகள் (Free State Systems) தோன்றியுள்ளபடியால், பெருமளவில் அயல்நாட்டுக் கொள்கையானது, இராணுவ ஒப்பந்தங்களில் கூட்டுச்சேராமலிருத்தல், நல்லுறவு, உள்நாட்டு நிலைகளில் தலையிடாமை, ஒன்றுக்கொன்று நாட்டு எல்லைக்கு மதிப்புக் கொடுத்தல், அமைதியான உடன்வாழ்க்கை ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று வாணிகத்தில் உதவி செய்தல் முதலிய நல்ல குறிக்கோள்களை உடையதாக இருக்கிறது. இந்தியத் தலைமை அமைச்சர் நேரு வகுத்த ஐந்துநெறிக் கோட்பாடும் இத்தகைய நல்ல நோக்கங்களை உடையதே. அயல்நாட்டுக் கொள்கையின் நோக்கங்களை அதை ஏற்றுக்கொண்டுள்ள இரண்டு நாடுகளும் உண்மையாக நிறைவேற்றி வைத்தால்தான் அக்கொள்கை வெற்றியாகச் செயல்படும். எனவேதான் அக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் இருநாடுகளுக்கும் பயன்தரத்தக்கதான நோக்கங்கள் அக்கொள்கையில் அடங்கி இருத்தல் வேண்டும். வளர்ச்சியில் நோக்கங்களும், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில் நுட்பக்கலையில் பயிற்சி, கலை இலக்கியத் துறைகளில் பரிவர்த்தனை, அறிவியற் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றில் உதவி முதலியவை சார்ந்ததாக இருக்குமானால், நல்லுறவை வளர்க்கும் அயல்நாட்டுக் கொள்கை உருவாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 564)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b69qhm2n/
தமிழ்“அயல்நாட்டுக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b69qhm2n/APA
Oliyon Research. (2026). அயல்நாட்டுக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b69qhm2n/MLA
"அயல்நாட்டுக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b69qhm2n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment