சாணத்திலிருந்து கிடைக்கக் கூடிய எரிவளிமம், சாண எரிவனிமம் (gobar gas) எனப்படும். தற்போது ஈரச் சாணத்தை வரட்டியாகவோ, உரமாகவோ பயன் படுத்துகின்றனர். மாறாக ஈரச்சாணத்தை எரிவளிமக் கருவியிலிட்டுக் கிடைக்கக் கூடிய எரிவளிமத்தின் வெப்பம், அதை வரட்டியாகப் பயன்படுத்தும் வெப்பத்தை விட 20% அதிகமாகக் கிடைக்கிறது. அதே போல், சாண எரிவளிமக் கருவியில் செரிக்க வைத்து வெளித் தள்ளப்படும் சாண வடிசாற்றின் எரு, குழிகளிலிட்டு மட்க வைத்துக கிடைக்கும் எருவை விட 40% அதிகமாகக் கிடைக்கிறது. இந்த எரு தூய்மையானது; கேடற்றது. சாண எரிவளிமக் கருவி, சாண எரிவளிமத் தோற்ற அமைப்பு படம் 1, 2 இல் காட்டப்பட்டுள்ளது. இதிலுள்ள முக்கியமான பகுதிகள் செரிமான அமைப்பு, வளிமச் சேமக் கலம் ஆகியனவாகும். செரிமான அமைப்பு. இது தரை மட்டத்திற்குக் கீழே தோண்டி எடுக்கப்பட்ட ஒரு கிணறு போன்ற கட்டுமானம் ஆகும். அமைக்கப்படும் கருவியின் கொள்திறனுக்கேற்றவாறு கிணற்றின் ஆழம் சுமார் 3.5-6 மீ வரையும், அதன் விட்டம் 1.35-5 மீ வரையும் வேறுபட்டிருக்கும். இதன் மையத்திலுள்ள ஒரு தடுப்புச் சுவர் இக்கிணற்றை இரண்டு அரைவட்டக் கூறுகளாகப் பிரிக்கிறது. தடுப்புச் சுவருக்கு இரு பக்கத்திலும், நீண்ட கல்நார் அட்டைக் குழாய்கள் தரை மட்டத்திலிருந்து கிணற்றின் அடிப்பகுதி வரை சாய்வாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இக்குழாய்களின் திறந்த பகுதிகள் கிணற்றின் இரு பக்கத்திலும் எதிர்வாட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று உட்செல் குழாயாகவும், மற்றது வெளிச்செல் குழாயாகவும் பயன்படும். உட்புறக் குழாயுடன் இணைந்த தொட்டி, வெளிப்புறக் குழாயுடன் இணைந்துள்ள தொட்டியைவிடச் சிறிது உயரமாக இருக்கும். சாணம், நீர் ஆகியவற்றை 4:5 என்ற விகிதத்தில் கலந்து உட்செல் குழாயின் மூலம் நிரப்ப வேண்டும். வேண்டிய அளவு நிரம்பிய பின்பு, எந்த அளவுக்குச் சாணக் கலவை உட்புறத் தொட்டியில் செலுத்தப்படுமோ, அந்த அளவுக்கு வெளிப்புறத் தொட்டியில் நீர்க் கலவை வெளிப்படும். தடுப்புச் சுவர் கிணற்றின் உயரத்தில் முக்கால் பங்கு மட்டுமே எழுந்திருப்பதால் சாணக் கலவையிலேயே அது மூழ்கியிருக்கும். சுமார் ஐம்பது நாளுக்கு வேண்டிய சாணக் கலவை கொள்ளும் அளவுக்கு இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். வளிமச் சேமக் கலம். இது மெல்லிய எஃகு தட்டினாலான கவிழ்ந்த முரசு வடிவ அமைப்பு டையது. இதன் விட்டம் கிணற்றின் உள்விட்டத்தை விடச் சற்றுக் குறைவாகவே இருக்கும். கிணற்றின் மேற்புறத்தில், படத்தில் காட்டியவாறு குல்லாய் போல் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். இது சாணக் கலவையில் அமிழ்ந்து கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள சுவர்ப் பக்க விளிம்பு வரை தாங்கி நிற்கும். செரிமான அமைப்பிலிருந்து வெளிப்படும் வளிமத்தை இம்முரசு சேகரிக்கிறது. முரசின் உட்புறப் பகுதியில் வளிமம் நிரம்ப நிரம்ப முரசு உயர்ந்து எழுகிறது. அதாவது முரசின் உட்புறப் பகுதியில் சேகரிக்கப்பட்ட வளிமத்தின் அழுத்தம் முரசின் எடைக்குச் சமமாக இருக்கும். இவ் வளிம அழுத்தத்தின் அளவு 7.5-10 செ.மீ. நீர்மட்ட அளவில் இருக்கும். இந்த அழுத்தம், முரசின் மேல் பகுதியிலுள்ள குழாயின் வழியாக வெவ்வேறு குடியிருப்புப் பகுதியிலுள்ள அடுப்புகளுக்கும், வளிம விளக்குகளுக்கும் செல்லும் அளவிற்குப் போதுமானது. முரசின் மேல் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டிதழ் இந்த எரிவளிமத்தைக் கட்டுப்படுத்துகிறது. நிரப்பப்படும் வளிமத்தின் அளவுக்கு ஏற்றவாறு முரசு மேலும் கீழுமாக இயக்கமடைவதற்கு வேண்டிய மையத்தண்டு கட்டும் போதே அமைக்கப்படும். எரிவளிமம் உண்டாகும் விதம். சாண எரிவளிமத்தை இரு முறைகளில் பெறலாம். ஒரு தாவரஞ் சார்ந்த பொருளைக் காற்றுப் படும்படி வைத்தால், அதனைச் சார்ந்த வளிமம் வளிமண்டலத்திற்குச் செல்கிறது. எஞ்சியது கலப்பு உரமாக நிற்கிறது. அதாவது, தாவரஞ்சார்ந்த பொருளில் உள்ள பாக்டீரியா ஆக்சிஜனுடன் சேர்ந்து இத்தகைய விளைவை உண்டாக்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு, காற்று வாழ் செரிமானம் (acorobic) என்று பெயர். மற்றொரு நிகழ்ச்சியைக் காற்றில்லாச் (anerobic) செரிமானம் என்பர். இந்நிகழ்ச்சி, ஆக்சிஜன் இன்றி ஏற்படுவதால் பயனுள்ள எரிவளிமம் கிடைக்கிறது. சாண எரிவளிமத்திலுள்ள முக்கிய எரிபொருள் மெத்தேன் எனும் வளிமம் ஆகும். சாண எரிவளிமக் கருவியில் காற்றில்லாச் செரிமானமே நிகழ்கிறது. முதலில் சாணச் சேற்றுப் பொருள்கள் சிறு சிறு மூலக்கூறுகளாகச் சிதைவுறுகின்றன. செரிமான அறைக்குள் செலுத்தப்பட்ட சாண நீரிலுள்ள ஆக்சிஜன் பொருள்களை ஆக்சிஜனேற்றம் செய்து அமிலங்களாகவோ, ஆல்கஹால்களாகவோ மாற்றிக் கார்பன் டை ஆக்சைடை வெளிப்படுத்துகிறது. இரண்டாம் நிலையில், பாக்டீரியா அமிலத்தையும் ஆல்கஹாலையும், மெத்தேனாகவும், கார்பன் டைஆக்சைடாகவும் மாற்றுகிறது. இந்த எரிவளிமத்தில் 60-70% வரை மெத்தேன் அடங்கியிருக்கும். நிலையான அளவுடைய எரிவளிமம் கிடைக்க, இந்த அமைப்புக்குச் சிறந்த சமநிலைச் சூழ்நிலை தேவை. வெப்பம், அமிலத் தன்மை. உள்ளீட்டுச் சாணக் கலவையின் செறிவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டால், வெளிப்படும் எரிவளிமத்தின் அளவு பாதிக்கப்படும். சான்றாக 75°C இல் வெளிப்படும் எரிவளிமம், 25°C இல் வெளிப்படும் எரிவளிமத்தைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். 10°C இல் மெத்தேன் வளிமம் வெளிப்படுவதில்லை. அதே போல் செரிமான அமைப்பில் இருக்கும் சாணக் கலவையின் அமிலத் தன்மை மாறினாலும் வெளிப்படும் எரிவளிமமும் பாதிக்கப்படும். சாணக் கலவையிலுள்ள அமிலத் தன்மையை ஹைட்ரஜன் அயனிச் செறிவு மூலம் குறிப்பிடுவர். அதற்குப் பயன்படுத்தப்படும் pH இன் அளவு 7-7.2 வரையிருந்தால் பெருமளவு மெத்தேன் கிடைக்கும். நிலையான சாண எரிவளிமம் கிடைக்க pH மதிப்பு 6.6 க்குக் குறையாமலும், 7.7 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். pH மதிப்பு 6.2 க்குக் குறைந்தால், சாணக் கலவையில் அமிலம் மிகுந்த பாக்டீரியாக்கள் நச்சுத் தன்மையைப் பெற்று விடும். இதைத் தவிர்க்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு போன்ற தடுப்புப் பொருளைச் சேர்க்க வேண்டும். பயன்கள். வழக்கில் பயன்படும் நிலக்கரி வளிமம் அல்லது பர்ஷேன் வளிமங்களில் அடங்கியிருக்கும் கூட்டமைவில் இருந்து சாண எரிவளிமத்தின் கூட்டமைவு மாறுபட்டிருப்பதால் சாண வளிமத்துக்குத் தனிப்பட்ட அடுப்புச் சிமிழ்களும் வளிம விளக்கு மெல்வலைகளும் தேவை. சாண எரிவளிமத்தை உருளைகளில் அடைத்து வைக்க முடியாது. கால்நடைகள் மிகுந்துள்ள சிற்றூர்களில் சமையல் செய்தல், தெரு விளக்கு ஏற்றுதல், குடி நீருக்காகக் கிணற்றிலிருந்து நீர் எடுக்கும் எக்கிகள், வேளாண்மை விசையேற்றங்கள், உப்பு நீரைக் குடிநீராக மாற்றுதல், குடிசைத் தொழில் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். நன்மைகள். சாண எரிவளிமம் கண்ணுக்கு ஊறு விளைவிக்காத புகையற்ற, நீல நிறச் சுடரை உடையது. விரைவில் சமைக்கலாம். சமையல் பாத்திரங்களில் கறைபடிவதில்லை. எரு. சாண எரிவளிமக் கருவியிலிருந்து வெளி வரும் நீர்மச் சாணக் கலவையில் சத்துள்ள நைட்ரஜனும், இலை தழைகள் மட்கிய சத்துப் பொருளும் அடங்கியுள்ளன. வெளிப்படுத்தப்படும் நீர்மச் சாணம் முழுமையான செரிமானம் அடைந்திருப்பதாலும், சிறப்பாகக் கூறுபடுத்தப்பட்டிருப்பதாலும், பாசன நீருடன் இதைக் கலந்து வயல்களுக்குப் பயன்படுத்தலாம். பாசன நீருடன் நேரிடையாகக் கலக்க முடியாத இடங்களில், நுரைத்தெழும் முறையில் கலப்பு உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக எரிவளிமக் கருவிக்கருகே சில குழிகள் வரிசையாகத் தோண்டி வைக்கப்படும். ஒவ்வொரு குழியிலும் புல், இலை, தழை போன்ற தாவரக் குப்பைகள் இடப்பட்டு, இவற்றின் மேல் நீர்ச் சாணக் கலவை நிரப்பப்படும். இதன் மேல் தாவரக் கழிவுப் பொருள்களைப் போட்டு மூடுவர். இவ்வாறு ஒரு குழி நிரம்பிய பின், அடுத்துள்ள குழியையும் இதேபோல் நிரப்புவர். குழிகளின் வடிவம், எண்ணிக்கை, கருவியின் கொள்ளளவு, இடவசதி ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். இறுதிக் குழி நிரம்புவதற்குள் முதல் குழியில் உள்ள எரு வெளியே எடுத்துச் செல்லும் அளவுக்குப் பதப்பட்டு விடும். கொள்ளளவு. வீட்டில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய சாண எரிவளிமக் கலத்தின் கொள்ளளவு 70 கன அடி. இயல்பாக உணவு உண்டு, நன்கு வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு கால்நடையும் நாளொன்றுக்குக் கொடுக்கக் கூடிய ஈரச் சாண அளவு பின் வருமாறு: எருமை—14 கி.கி; எருது அல்லது பசு —10 கி.கி; கன்று—4 கி.கி. ஒரு கி.கி. ஈரச் சாணம், சுமார் 1.3 கன அடி சாண வளிமம் கொடுக்கும். ஒரு நபரின் ஒரு நாளைய சமையலுக்குத் தேவைப்படும் வளிமத்தின் கொள்ளளவு, 8-15 கன அடி வரை வேறுபடும். ஒரு சாண எரிவளிம அடுப்பை ஒரு மணி நேரம் பயன்படுத்த 12-16 கன அடி வரை சாண வளிமம் வேண்டும். 100 மெழுகுவர்த்தித் திறன் கொண்ட 2 அல்லது 3 வளிம விளக்கு (gas mantle) எரியத் தேவைப்படும் சாணவளிமம் 4-6 கன அடி வரை இருக்கும். வளிமப் பொறி ஒன்று, ஒரு குதிரைத் திறன் ஆற்றலை ஒரு மணி நேரம் கொடுக்க 15-20 கன அடி சாண வளிமம் தேவைப்படுகிறது. இந்தத் தோராயமான புள்ளி விவரங்களைக் கொண்டும், கிடைக்கக் கூடிய கால்நடைகளின் எண்ணிக்கையைக் கொண்டும், தேவையான கருவியை அமைத்துக் கொள்ளலாம். கிடைக்கக் கூடிய வெவ்வேறு கருவிகளின் கொள்ளளவு 2-140 கன மீட்டர் வரை வேறுபட்டிருக்கும். எரிவளிமக் கருவியில் மாட்டுச் சாணம் மட்டுமல்லாது, மனித மலம், சிறுநீர் போன்ற கழிவுப் பொருள்களையும் பயன்படுத்தலாம். சிற்றுண்டி விடுதி போன்ற இடங்களில் வீணாக்கப்படும் சோறு போன்ற கழிவுப் பொருள்கள், தாவரக் கழிவுப் பொருள்கள், செந்நீல நிறமுடைய மணி வடிவ நீர் மலர்கள், கிழங்குத் தண்டுகளையுடைய செடி வகைகள், வேண்டாத களைச் செடிகள், வளர்ப்புப் பறவைகளின் கழிவுப் பொருள்கள், வேண்டாத மீன் உறுப்புகள் ஆகிய பல விதமான கழிவுப் பொருள்களையும் இக்கருவியிலிட்டுச் செரிமானம் செய்யலாம். எனவே, இவ்வளிமத்தைச் சாண எரிவளி எனக் குறிப்பிடுவதுடன், உயிரி வளி (bio - gas) எனவும் குறிப்பிடலாம். —எல்.கே. இராமலிங்கம்