இல்துத்மிசு
iltutmicu
முகமது கோரியின் நம்பிக்கைக்கு உரியவரும், அவருடைய அடிமைகளுள் ஒருவருமாகிய குத்புத்தீன் ஐபக்கு (Quth-ud-din Aibak) அடிமைகள் வமிசம் என்று கூறப்பட்ட ஆளும் வமிசத்தை கி.பி.
முகமது கோரியின் நம்பிக்கைக்கு உரியவரும், அவருடைய அடிமைகளுள் ஒருவருமாகிய குத்புத்தீன் ஐபக்கு (Quth-ud-din Aibak) அடிமைகள் வமிசம் என்று கூறப்பட்ட ஆளும் வமிசத்தை கி.பி. 1206–ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தியாவிற்கு வெளியே தலைநகரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்சி செய்த நிலை மாற்றப்பட்டது. இந்தியாவைத் தம் தாயகமாகக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கிய அடிமைகள் தில்லிச் சுல்தானியத்தைத் தோற்றுவித்தார்கள்.
அடிமை வமிசத்தை உருவாக்கிய குத்புத்தீன் ஐபக்கு நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் கி.பி. 1210–ஆம் ஆண்டு இறந்தவுடன் அராம் சா (Aramshah) எட்டு மாதங்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தார். நாட்டை ஆளுவதற்குத் தகுதி எதுவும் இல்லாத அராம் சா எளிதாகத் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அராம் சாவிற்குப் பின்னர் அரசராகப் பதவியேற்றவர் இல்துத்மிசு.
இல்துத்மிசு மத்திய ஆசியாவில் காணப்பட்ட இல்பாரி (Ilbari) இனத்தைச் சார்ந்தவராவார். இவருடைய தந்தை இலாம்கான் (Ilam Khan) அவ்வினத்தின் தலைவர். இவர் இளமையிலிருந்தே புத்திக் கூர்மையும், செயல்திறனும் உடையவராகத் திகழ்ந்தார். இவர் சகோதரர்கள் பொறாமை உணர்வினால் தூண்டப்பட்டு இவரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடிமை வாணிகர் ஒருவருக்கு விற்று விட்டனர். சமாலுத்தீன் (Jamal-ud din) என்ற அவ்வணிகரால் இளைஞரான இல்துத்மிசு கசினிக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து இவர் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டு இரண்டாம் முறையாகக் குத்புத்தீனுக்கு விற்கப்பட்டார். இவர் தம்முடைய தகுதி, திறமையால் படிப்படியாக வாழ்வில் உயர்ந்தார். அரசரின் வேட்டைக்கூட்டத்திற்குத் (Amir-i-Shikari) தலைவரானார். குவாலியர் கைப்பற்றப்பட்டபின் அக்கோட்டையின் பொறுப்பையேற்றார், பின்னர்ப் புலந்த்சகரின் (Bulandshar) ஆளுநராக உயர்த்தப்பட்டார். குத்புத்தீனின் மகளை மணந்து கொண்ட இவர், பின்னர்ப் பதோனின் (Badaun) ஆளுநராக நியமிக்கப்பட்டார். சுக்கர்களை (Khokkors) கி.பி. 1205–06-இல் அடக்குவதற்குத் தம்முடைய திறமையை வெளிப்படுத்திய இவர், அதற்கு வெகுமதியாக அடிமை நிலையினின்றும் விடுவிக்கப்பட்டார். ஐபக்கு இறந்தவுடன் அராம் சா கி.பி. 1210–11 வரை அரசோச்சினார். அராமைவிட திறமையான ஒரு அரசரே அப்போதைய தில்லிக்குத் தேவை என்பது உயர்குடி மக்களின் விருப்பமாக இருந்தது, இல்துத்மிசு அராமைத் தோற்கடித்து கி.பி. 1211-இல் அரியணை யேறினார்.
இல்துத்மிசு அரசராகப் பதவியேற்றபோது தில்லிச் சுல்தானியம் என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. வங்காளம், அல்மர்தன் கில்சியின் கட்டுப்பாட்டிலிருந்தது. இல்துத்மிசு தில்லிக்கும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் அரசரானார், குபாச்சா (Qabacha) முல்தான் பகுதி மீது ஆதிக்கம் செலுத்தி வந்தார். இலாகூரைக் குபாச்சாவும் இல்திசும் (Yildiz) மாறிமாறிக் கைப்பற்றினர். இராசபுத்திரத் தலைவர்கள் சலோர் (Jalor), இராந்தம்பூர் (Ranthambhor), ஆசுமீர் (Ajmer), குவாலியர் (Gwalior) போன்ற இடங்களில் தம் உரிமையை நிலை நாட்டியிருந்தனர் இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையே இவர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அரசரானார். ஐபக்- கின் மருமகனான இவரை அரியணையைப் பறித்தவர் (Usurper) என்று சில வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், துருக்கியர்கள் மரபுரிமையை முழுவதும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், திறமை வாய்ந்தவர்கள் அரசுரிமையைப் பெறுவது வழக்கமாகக் காணப்பட்டது.
இல்துத்மிசிற்கு எதிரான இரு வலிமையான போட்டியாளர்களாகத் திகழ்ந்தவர்கள் இல்திசும், குபாச்சாவுமாவர். குபாச்சா பஞ்சாபில் தம் ஆதிக்கத்தைப் பரப்ப முயன்றார். படிண்டா (Bhatinda), குரம் (Kuram), சரௌசுத்தி (Sarausti) போன்றவற்றைக் கைப்பற்றியிருந்தார். மற்றொருவரான தாசுத்தீன் இல்திசு கசினியைப் பெற்றதுடன் ‘நான் இந்தியா முழுவதற்குமே அரசனாவேன்’ என்று கூறி, முகமதுகோரி இந்தியாவில் வெற்றி கொண்ட பகுதிகளுக்குத் தாமே உரிமையுடையவர் என்ற பழைய உரிமையைப் புதுப்பித்துக் கொள்ள முற்பட்டார். வங்காள ஆளுநராக கி.பி. 1296 இல் நியமிக்கப்பட்டிருந்த அலிமர்தன், குத்புத்தீன் இறந்தபிறகு, தில்லிச் சுல்தானியத்தைப் புறக்கணித்துத் தம்மைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார். ‘சுல்தான் அலாவுதீன்’ என்று தம்மை அறிவித்துக்கொண்டார். சுதந்திரம் பறிபோன நிலையில் மனக்குறை கொண்டிருந்த சிற்றரசர்கள் பலர் அடிபணிய மறுத்தனர். குவாலியர், சலோர், இராந்தம்பூர் ஆகியவை பழைய மன்னர்களால் மீட்கப்பட்டுவிட்டன. ஆசுமீர், தோஆபு (Doab) ஆகிய பகுதிகளும் துருக்கிய ஆதிக்கத்தைக் களைந்தெறிந்தன. இல்துத்மிசின் தொல்லைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் தில்லியின் அமீர்கள் அராம் சாவின் கட்சியுடன் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். மங்கோலியர்களின் படையெடுப்புப் பற்றிய அச்சமும் வடமேற்கு எல்லைப் பகுதிகளைப் பற்றியது. எனவே, இல்துத்மிசு வலிமையான ஆட்சியைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக இராணுவ சாகீரையே (Militaty Jagir) பெற்றிருந்தார். இந்நிலையை வெல்லத் திறமையும் வலிமையும் ஒருங்கே அமையப்பெற்ற அரசராலேயே முடியும் என்ற நிலை காணப்பட்டது. இல்துத்மிசு தம் வலிமை, கூர்த்த மதி ஆகியவற்றின் காரணமாக இறுதியில் வெற்றி பெற்றார்
இல்துத்மிசு முதலில் அமீர்களின் கிளர்ச்சியை அடக்கினார். பின்னர்ப் பதான், அயோத்தி, காசி, சிவாலிக்கு ஆகிய தில்லியைச் சார்ந்த அரசுகளை அடக்கினார்; துருக்கியப் பாதுகாவலர்களையும் கட்டுப்படுத்தினார். இதற்குள்ளாக இல்திசு, குபாச்சாவை இலாகூரிலிருந்து விரட்டியடித்துவிட்டுப் பஞ்சாபின் பெரும் பகுதியைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இல்திசைத் தரைன் (Tarain) போரில் கி.பி. 1215-இல் இல்துத்மிசு தோற்கடித்தார். இந்த வெற்றியால் தில்லி அரசு கசினியின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்டது.
இவருடைய ஆட்சிக் காலத்தில் மங்கோலியர்கள் சிந்து ஆற்றங்கரையில் தோன்றிச் செங்கிசுகான் (Genghiz Khan) தலைமையில் விரைந்து மத்திய ஆசியா, மேற்கு ஆசியா நாடுகளின்மீது படையெடுத்துத் தம் ஆட்சிக்குட்படுத்தினர். காவாரிசம் (Khwarizm) பேரரசைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர். அப்பேரரசின் சா சலாலுதீன் மங்கபர்னி (Jalaludin Mangbarni) பஞ்சாபிற்கு ஓடினார். அங்கிருந்து அவர் இல்துத்மிசின் உதவி கோரி தூதுவர் ஒருவரை அனுப்பி வைத்தார். அயல் உறவுக் கொள்கையின் கண்ணோட்டத்தில் அவருடைய வேண்டுகோளை இல்துத்மிசு புறக்கணித்தார். மனிதாபிமானமற்ற செய்கையாக இது கருதப்பட்டபோதிலும் தம்முடைய அரசைச் செங்கிசுகானின் கோபத்திலிருந்து பாதுகாக்கப் பெரிதும் பயன்பட்டது. சலாலுதீனைச் சிறைபிடிக்கும் பணியைத் தம் உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செங்கிசுகான் நாடு திரும்பினார். பஞ்சாபின் வெப்ப நிலையினால் மங்கோலியர்கள் இந்தியாவின் உட்பகுதிக்கு வாராது திரும்பிச் சென்றனர். தோற்கடிக்கப்பட்ட சலாலுதீன் கக்கர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டு குபாச்சாவைத் தாக்கினார். அவர் கி.பி. 1224–இல் பாரசீகத்திற்குச் சென்றபொழுது அங்குக் கொலையுண்டார். இல்துத்மிசின் கூர்த்த மதியினால் மங்கோலியப் படையெடுப்பிலிருந்து இந்தியா தப்பியது. பின்னர் நடைபெற்ற மங்கோலியப் படையெடுப்புகளின் விளைவாகத் தில்லி சுல்தான்கள் பிற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
முகமது கோரியின் அடிமைகளுள் ஒருவரான குபாச்சா பெருஞ் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார். இல்துத்மிசு குபாச்சாவிற்கு எதிராக இருமுனைத் தாக்குதலை மூல்தான் சிந்துவின் மீதும் நடத்தினார். குபாச்சா பக்கார் (Bhakkar) கோட்டையில் ஒளிந்து கொண்டார். இல்துத்மிசின்படை உச்சுக் (Uch) கோட்டையை முற்றுகையிட்டு கி.பி. 1227-இல் அதனைக் கைப்பற்றியது. சரணடைய வேண்டிய நிலையில் இருந்த குபாச்சா மனச்சோர்வுற்றுத் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் படகில் ஏறிச் செல்கையில், படகு கவிழ்ந்து சிந்து ஆற்றில் மூழ்கி இறந்தார்.
வங்காளத்தில் அலிமர்தன்கான் கில்சி தம்முடைய உரிமையை நிலைநாட்டிக்கொண்டார். அவர் கி.பி. 1212–இல் இறந்ததும் அசாமுதீன் இவாசை {Husam–ud–din Ewaz) அரியணையில் அமர்த்தினர். பீகாரைக் கைப்பற்றிய அவர் அருகிலிருந்த செய்நகர் (Jainagar), திர்குடு (Tirhut), காமரூபம் (Kamarupa) போன்ற பகுதிகளில் கப்பம் பெற்றார். வடமேற்கு எல்லைப் பகுதிகளில் தம்முடைய கவனம் முழுவதையும் இல்துத்மிசு செலுத்தியமையால் வங்காள நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. இல்துத்மிசு கி.பி. 1225–இல் தமக்கு எதிராகப் படையெடுக்க ஆயத்தங்களை மேற்கொண்டபோது, கியாசுத்தீன் அவருடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வந்தார். மாலி சானி (Mali Jhani) என்பவரைப் பீகாரின் ஆளுநராக நியமித்தார். இல்துத்மிசு பீகாரை விட்டு நீங்கியவுடன் மாலிசானியைப் பீகாரிலிருந்து விரட்டி விட்டு, மீண்டும் தம் ஆட்சியை ஏற்படுத்தினார். அயோத்தியின் (Oudh) ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த நசீருத்தின் முகமதுசா (Nasir ud-din Mahmud) கியாசுத்தீனை எதிர்த்தார். இலக்னாவுதி (Lakhnauti) முழுவதையும் நசீருத்தின் கி.பி. 1226–இல் கைப்பற்றினார். கியாசுத்தீன் கொலையுண்டு இறந்தார். நசீருத்தின் கி.பி. 1229–இல் இறந்தவுடன் மாலிக் இக்தியாருத்தீன் பல்கா கல்சி (Malik Ikhtiyar–ud–din Balka Khalji) என்பவர் தம்முரிமையை வங்கத்தில் நிலைநாட்டினார். இல்துத்மிசு கி.பி. 1229–இல் அவரைத் தோற்கடித்துக் கொன்றார். வங்காளமும் பீகாரும் மீண்டும் தில்லிச் சுல்தானியத்துடன் இணைக்கப்பட்டன.
இராசபுதனத்தில் கி.பி. 1226–இல் இல்துத்மிசு போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இராந்தம்பூர், மண்டோர் (Mandor), சலோர், பயானா (Bayana), தங்கிர் (Thangir), ஆசுமீர், நகௌர் (Nagaur) போன்ற இடங்களில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார். தோஆபுப் பகுதியில் பதௌன், கனோசி, பகாரய்ச்சு (Baharaich), கேடேகார் (Kadehar) காசி முதலிய இடங்களிலும் தம் அதிகாரத்தை ஏற்படுத்தினார். மாளவத்திற்கெதிராக கி.பி. 1234–35–இல் படையெடுத்துப் பில்சா, உச்சயினி ஆகிய நகரங்களைச் சூறையாடினார். துருக்கியச் சுல்தானியத்தால் இழக்கப்பட்ட அரசுகளை மீண்டும் கைப்பற்றிய இல்துத்மிசு இராசபுத்திரர்களை முழுமையாக அடக்காவிட்டாலும் அவர்களுடைய ஆதிக்க வலிமையைச் சிதறச் செய்தார்.
இல்துத்மிசு கி.பி. 1228–இல் பாக்தாதில் ஆட்சி புரிந்த கலிபாவிடமிருந்து கௌரவ ஆடையையும், இல்துத்மிசு வெற்றிகொண்ட ‘கடல் நிலப்பரப்பு யாவற்றிற்கும்’ அரசனாக்கிச் ‘சுல்தான்–இ–அசாம்’ என்ற பட்டத்தினையும் பெற்றார். சுல்தானுடைய அதிகாரத்தை வலுப்படுத்தும் சக்தியாக இச்செயல் விளங்கியது. சுல்தானின் அதிகாரத்தைச் சட்டப்படியாக்கியது. ஓயாது உழைத்த வாழ்க்கையின் விளைவாகச் சைபுத்தீனுக்கு (Saifuddin) எதிரான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இவர் கி.பி. 1236–இல் இறந்தார்.
இடைக்கால இந்தியாவை ஆண்ட அரசர்களுள் சிறந்த ஒருவராக இல்துத்மிசு கருதப்படுகிறார். குழந்தைப் பருவ நிலையிலிருந்த துருக்கிய அரசு அழிந்து படாமல் இவர் காப்பாற்றினார். இவரது காலத்திலிருந்து தான் இந்தியாவில் முசுலிம்கள் ஆதிக்கம் உண்மையில் தொடங்கிற்று. இவர் நாட்டிற்குத் தலைநகரம் ஒன்றை உருவாக்கினார். தில்லி சுல்தானியத்தை உறுதியாக நிலைநாட்டினார். ஐபக்கின் அடிமையாகத் தம் இளம்பருவ வாழ்வைத் தொடங்கிய இல்துத்மிசு பிற்காலத்தில் துருக்கியத் தலைவர்களுள் ஒருவரானார். தளராத ஊக்கமுடையவராகவும், பகைவர்களைக் கடுமையாகத் தண்டிப்பவராகவும் விளங்கிய இவர், இறுதிவரை போர்ச்செயல்களில் தீரமுடன் ஈடுபட்டார். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது அரசியல் நிலை குழப்பம் மிகுந்ததாகவும் அரசின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுத்துக் கூற இயலாத நிலையிலும் இருந்தன.
இல்துத்மிசு கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார். கட்டிடப் பணி அழகில் சிறந்து விளங்குகின்ற குதுப்மினார் (Kutub–Minar) இன்றளவும் இவரது பெருமைக்கு ஒரு தலைசிறந்த நினைவுச் சின்னமாக விளங்குகிறது. மின்கசு–உச்–சிராசு (Minhaj–uj–Siraj) என்ற வரலாற்றறிஞர் இவருடைய தனிப்பட்ட குண இயல்புகளைப் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளார். ‘இவரைப் போல் நம்பிக்கையையும், இரக்க உணர்வையும், சமயச் சான்றோர் மீது கொண்டிருந்த அளவில்லாத பற்றையும் உடைய அரசர் வேறு எவருமில்லை’ என்பது அவர் கூற்று. இவர் காலத்திய சாசனங்கள் சில இவரைக் ‘கடவுளின் நிலப் பாதுகாவலன்’, ‘கடவுளின் ஊழியர்களைப் பாதுகாப்பவன்’ என்று குறிப்பிடுகின்றன. இவருடைய ஆட்சிக் காலத்தில் தில்லி நகரம் நாகரிகத்தின் மையமாக விளங்கியது. இந்திய மரபினையொட்டி நின்ற ஓர் அரசினை இவர் உருவாக்கினார்.
இல்துத்மிசு சொந்த வாழ்க்கையில் மிகச் சிறந்த பக்திமானாக விளங்கினார். இரவில் நெடுநேரம் வரை தொழுகையிலும் தியானத்திலும் ஈடுபட்டார். சேக் குத்புத்தீன் புக்தியார் காசி (Sheik Gutbudin Bukthiar Kazi), காசி அமீதுத்தீன் நாகூரி (Kazi Hami duddin Nagouri), சேக் சலாலுத்தீன் தபரிசி (Sheik Jalaluddin Tabrizi) போன்ற சூபி (Sufi Saints) ஞானிகளிடம் மரியாதை உடையவராகத் திகழ்ந்தார். அரசவையில் அடிக்கடி சமய விவாதங்களை நடத்தி உலேமாக்களுக்கு (Ulemas) ஆதரவு அளித்தார். தம்முடைய சமயக் கருத்துகளைப் பிறர் பொருட்டு மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. இவருடைய கொள்கைகளின் விளைவாக இவருக்குப்பின் பதவியேற்ற அரசர்களின் நிலை பெருமளவு உறுதியாக அமைக்கப்பட்டது. எஸ்.அ.
துணை நூல்
Majumdar, R.C., Ray Chaudry & Dutta, An Advanced History of India, Macmillan, Madras, 1982.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 256)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az3t9md9/
தமிழ்“இல்துத்மிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/az3t9md9/APA
Oliyon Research. (2026). இல்துத்மிசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/az3t9md9/MLA
"இல்துத்மிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/az3t9md9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment