இராசராச சோழன், மூன்றாம்
irācarāca cōḻaṉ, mūṉṟām
மூன்றாங்குலோத்துங்க சோழன் கி.பி.
மூன்றாங்குலோத்துங்க சோழன் கி.பி. 1218–ஆம் ஆண்டில் இறந்தார். அதற்கு இரண்டாண்டுகட்கு முன் கி.பி. 1216–இல் இளவரசுப்பட்டம் கட்டப்பட்டிருந்த மூன்றாம் இராசராச சோழன் சோழப் பேரரசிற்கு அரசராக முடிசூட்டப்பெற்றார்.
சோழ மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து கொண்ட இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள் இவர் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவர் ஆவார்.
இவ்வேந்தரின் கல்வெட்டுகளில் இரு மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘சீர் மன்னி இருநான்கு திசை விளங்கும்’ என்று தொடங்குகிறது. மற்றொன்று ‘சீர்மன்னு மலர்மகளும் சிறந்த தனி நிலைச் செல்வியும்’ என்னும் தொடக்கத்தையுடையது.
இவர் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகித் தன் சீருஞ்சிறப்பும் இழந்தது. இவர்தம் முன்னோர்கள் தம் பேராற்றலால் உயர்நிலைக்குக் கொணர்ந்த சோழப் பேரரசை அதன் நிலை குன்றாதவாறு தாங்கிப் புரத்தற்குரிய ஆண்மையும் வீரமும் இவர்பால் இல்லாமற்போயினமையே அதன் வீழ்ச்சிக்கு முதற் காரணமாகும். சோழப் பேரரசிற்கு வடமேற்கே ஒய்சளரும், தெற்கே பாண்டியரும் வல்லரசுகளாகித் தம் பேரரசை நிறுவுவதற்குப் பெரிதும் முயன்று அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று வந்தனர். எனினும், அவ்விரு பேரரசர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றமையால், நடுவிலிருந்த சோழப் பேரரசு அவர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டு அவர்கள் அரசுக்குள் ஒடுங்கி மறைந்தொழியாமல் ஒருவாறு நிலைபெற்றிருந்தது எனலாம். சோழப் பேரரசிற்கு வடகிழக்கே நெல்லூருக்கு அருகில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தெலுங்குச் சோழர்கள் தமக்கு வடக்கேயிருந்த காகதீயரை உற்ற நண்பராகவும் கொண்டு வலிமை எய்தி வந்தனர். இந்நிலையில், மகத நாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக் காடவராயர் முதலான குறுநில மன்னர்கள் இராசராசனோடு பகைமை கொண்டு, உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டு பண்ணித் தாமே தனியரசு நடத்த முயன்றனர்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசின் மீது இரண்டு முறை படையெடுத்துச் சோழப் பேரரசின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். இக்காலத்தில் போசள மன்னன் உதவி புரிந்தான் என்றும், காவேரியாற்றங்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் வீரநரசிம்மனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்றும், வெற்றியெய்திய போசள மன்னனுக்குப் பாண்டியன் பணிந்து கப்பஞ் செலுத்தினார் என்றும் கத்திய கர்ணாமித்தம் என்னும் நூல் கூறுகிறது.
இவ்வேந்தர் கல்வெட்டுகள் தென்னார்க்காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, சேலம், சித்தூர், கடப்பை, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுவதால், இவர் தந்தையின் ஆட்சிக்குட்பட்டுச் சோழப் பேரரசிலிருந்த நாடுகளுள் பாண்டிய நாடு ஒன்று நீங்கிய பிற நாடுகள் எல்லாம் இவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம்.
இவர் தந்தையின் ஆட்சிக்காலம் போலவே இவரது காலத்திலும் சைவசமயம் உயர்நிலையில் இருந்தது என்பது, இவர் காலத்துக் கல்வெட்டுகள் எல்லாச் சிவன் கோயில்களிலும் மிகுதியாக உள்ளமையால் நன்குணரக் கிடக்கின்றது. வைணவம், சமணம் முதலான சமயங்களையும் மூன்றாம் இராசராசன் முன்னோர்களைப் போல் ஆதரித்துள்ளார்.
இவரது ஆட்சியில் 41–ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் கல்வெட்டுகள் கிடைக்காமையால். இராசராசன் கி.பி. 1256–இல் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவர் தாம் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே கி.பி. 1246–இல் தம் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப்பட்- டம் கட்டி, அது முதல் அவ்விளவரசனே நாட்டை ஆண்டுவருமாறு செய்து விட்டார்.இரா.இரா.
துணை நூல்கள்
Sastri, K.A.N., The Cholas, University of Madras, Madras, 1985.
Majumdar, R.C. & Others, The Struggle for Empire, History and Culture of the Indian people Vol. V. Bharatiya Vidya Bhavan, Bombay, 1979.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 37)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az34sjyt/
தமிழ்“இராசராச சோழன், மூன்றாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/az34sjyt/APA
Oliyon Research. (2026). இராசராச சோழன், மூன்றாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/az34sjyt/MLA
"இராசராச சோழன், மூன்றாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/az34sjyt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment