கடன் தொகையைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக் கொடுப்பதற்கும் குறிப்பிட்ட வட்டி வீதத்தில் வட்டியைக் கொடுக்கவும் உறுதி அளிப்பவை கடனுறுதிச் சீட்டுகள். இவை நிறுவனங்களால் அல்லது அரசுகளால் வெளியிடப்படுகின்றன; தனிப்பட்டவர்களால் ஒப்பு அளிக்கப்பட்ட கடன் சீட்டுகளினின்றும் வேறானவை. அரசால் வெளியிடப்படும் கடனுறுதிச் சீட்டுகள் (Govt. Bonds) அரசின் முத்திரையுடன் வெளியிடப்படுகின்றன. சட்டப்படி ஓராண்டிற்கும் கூடுதலான முதிர்வுக் காலத்தையுடைய கடனுறுதிச் சீட்டுகள் பொதுவாக நீண்டகாலச் சீட்டுகளாகவே இருக்கின்றன. அரசின் மேலுள்ள நம்பிக்கையினாலும் அரயின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பினாலும் மக்கள் கடனுறுதிச் சீட்டுகளை வாங்குகின்றனர். அன்றியும் அரசுக்கு வரி வாங்கும் உரிமை இருப்பதால், கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் போதுமான அளவிற்கு இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர். இந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் மக்களால் வாங்கப்படுகின்றன. அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலையானதாக எப்பொழுதும் அமைவதில்லை. உபரி வரவு–செலவுத் திட்டத்தின்போது அரசின் செலவை விட வருவாய் கூடுதலாக இருப்பதால், நாட்டின் வருமானப் பெருக்கம் தடைப்படுகிறது. பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் வருவாயை விடக் கூடுதலாகச் செலவு செய்யப்படுவதால் வருமானம் பெருக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. நிதிக் கொள்கையின் செயற்பாடு, திட்டமிட்ட வருமான மாற்றத்தால் ஏற்படுகிறது. இத்தகைய வருமான மாற்றம் ஓராண்டுக் கால வரவு செலவால் ஏற்படுவதைப் போலவே நீண்டகால அளவிலும் ஏற்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட கால முதலாக்கம் (Capital Formation) தேவையானதால், அவற்றை உருவாக்கும் முயற்சியில் நிகழ்காலக் குடிமக்கள் மட்டுமன்றி எதிர்காலச் சந்ததியும் ஓரளவுக்குப் பங்குகொள்ள வேண்டியது இன்றியமையாதது. கடன் பத்திரங்களை அரசாங்கம் வெளியிடுவதும், அதன் வாயிலாகக் குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெறுவதும், முதலாக்க நடவடிக்கைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். நீண்டகாலக் கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் பொழுது எதிர்காலத்தில் வரி வருவாயிலிருந்து பெறப்படும் தொகையைக் கொண்டுதான் கடனுறுதிச் சீட்டுகளைத் தீர்க்க இயலும். எனவே, முதலாக்கச் செலவால் ஏற்படும் கடன் சுமையின் ஒரு பங்கு எதிர்காலச் சந்ததியினருக்கு மாற்றப்படுகிறது. முதலாக்கத்தின் பலனை அனுபவிப்பதிலும் அதன் சுமையை ஏற்பதிலும் எதிர்காலத்தில் வரி செலுத்துவோருக்குப் பங்கு தரப்படுகிறது. இவ்வாறு கடனுறுதிச் சீட்டுகள், நிகழ்கால - எதிர்காலச் சந்ததியினரிடையே வருமான மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றன. அரசாங்கத்தின் கடன்களைக் குறுகிய காலக் கடன்கள் என்றும் நீண்டகாலக் கடன்கள் என்றும் இருவகைப் படுத்தலாம். இவற்றுள் குறுகியகாலக் கடன்கள், பண அங்காடி (Money Market)யின் கூறாகவும், நீண்டகாலக் கடன்கள் முதல் அங்காடி (Capital Market)யின் கூறாகவும் உள்ளன. குறுகிய காலக் கடன்கள் ஓராண்டிற்குள் திருப்பிக் கொடுக்கப்படுவன. அரசாங்கத்தின் குறுகியகாலக் கடன் ஒப்புதல்களை, நிதி நிறுவனங்களான வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மைய இருப்பு வங்கி முதலியன விரும்பி ஏற்கின்றன. இத்தகைய கடன்களைச் சிறப்பு மிதவைக் கடன்கள் (Special Floating Loans) என்பர். இவற்றுள் வழிவகை முன்பணம் (Ways and means of Advance) ஒன்றாகும். இது மைய இருப்பு வங்கியினால் அவ்வப்பொழுது வழங்கப்படும் கடன் ஆகும். தனியார் துறையில் தொழில் நிறுவனங்களுக்கு வணிக வங்கிகள் அதிகப்பற்று (Over–draft) வழங்குவதைப் போல, அரசுகளுக்கு (குறிப்பாக மாநில அரசுகளுக்கு) மைய இருப்பு வங்கி அளித்து உதவுகிறது. குறுகியகாலக் கடன்களில் அடுத்து வருவது கருவூல உண்டியல்கள் (Treasury Bills) ஆகும். இவை வரையறுக்கப்பட்ட கடன் ஒப்புதல்கள். இவை 90 நாட்களில் முதிர்வு அடையக்கூடியவை. எளிதாக உடைமை மாற்றம் செய்யப்படக் கூடியவை. கருவூல உண்டியல்களை அரசுகளின் பல்வேறு துறைகள், மைய இருப்பு வங்கி, வணிக வங்கிகள், (வெளிநாட்டு வங்கிகள் உட்பட) கூட்டுறவு வங்கிகள் முதலியன விரும்பி வாங்கிக் கொள்கின்றன. அடுத்து வருவது சிறப்பு மிதவைக் கடன் என்பது. இது இந்தியாவில் சிறப்பிடம் பெறவில்லை. அரசாங்கத்தின் நீண்ட காலக் கடன்கள், நிலையான கடன்கள் (Permanent debts) என்றும், நிதியக் கடன்கள் (Funded debts) என்றும் சொல்லப்படுகின்றன. குறைந்தது 15 முதல் 30 ஆண்டுகள் கால வரையறையுள்ள கடனுறுதிச் சீட்டுகள் நிலைக் கடன்கள் எனப்படுகின்றன. மேற்படிக் கடன் தொகைக்கான வட்டியை ஆண்டுதோறும் செலுத்தவும், அது முதிர்வடையும் பொழுது அதனைத் திருப்பிக் கொடுக்கவும், சிறப்பு நிதியம் ஒன்றை உருவாக்கவும், அதனை ஏற்று நடத்தவும் வேண்டியிருப்பதால் அவை நிதியக் கடன்கள் எனப்படுகின்றன. அரசாங்கக் கடன்களை உள்நாட்டுக் கடன்கள் என்றும், வெளிநாட்டுக் கடன்கள் என்றும் இருவகைப்படுத்தலாம். உள்நாட்டுக் கடன்களை உரூபாய்க் கடன்கள் என்றும் வெளிநாட்டுக் கடன்களை அயற்செலாவணிக் கடன்கள் என்றும் கூறலாம். நீண்டகால நோக்கில் ஒரு நாட்டிற்கு உள்நாட்டுக் கடன் தொகை சுமை உடைதாகக் கூறமுடியாது. ஏனெனில், மக்களுள் ஒரு சாரார் செலுத்தும் வரித் தொகையிலிருந்து மற்றொரு பிரிவினருக்கு (அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு) வருமான மாற்றம் செய்யப்படுகிறது. நாட்டை ஓர் அலகாக எடுத்துக்கொண்டால், அதனைச் சுமை என்று கூறுவதற்கில்லை. ஆனால், வெளிநாட்டுக் கடன்கள் அப்படிப்பட்டவையல்ல. அவற்றிற்கான வட்டித் தொகையைச் செலுத்தும் பொழுதும், அசல் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் பொழுதும் நாட்டு மக்களின் வருமானம் பிறநாட்டு மக்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே, வெளிநாட்டுக் கடன் தொகையை ஈடு செய்யும் அளவிற்கு உள்நாட்டில் மூலதன ஆக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி முதலியன ஏற்பட்டிருக்குமேயானால் நாட்டின் உற்பத்தித் திறனும், உற்பத்தி அளவும் விரிவாக்கம் செய்யப்படுகின்ற காரணத்தினால் வெளிநாட்டுக் கடன் சுமை அகற்றப்படுகிறது. அவ்வாறு இன்றி, வெளிநாட்டுக் கடன் தொகையில் விளைவாக ஒரு நாட்டில் மூலதன ஆக்கம் ஏற்படுத்தப்படவில்லையானால், அக்கடன் அந்நாட்டிற்குச் சுமையாகவே இருக்கும். அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள், நிதிக் கொள்கையைச் செயற்படுத்தும் கருவியாக இருப்பதைப் போலவே, மைய வங்கியின் பணக் கொள்கையை நிலைநிறுத்தும் கருவியாகவும் செயற்படுகின்றன. மைய வங்கியின் சிறப்பான பொறுப்புகளில் பணத் தொகையைக் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டு பணிகளை இங்கே எடுத்துக் கூறலாம். அவை திறந்த அங்காடி நடவடிக்கைகள் (Open Market Operations), வங்கிவீதக் கொள்கைகள் (Bank rate policy) ஆகும். அரசாங்க நாணயச் சாலை (Mint)யில் வெளியிடப்படும் காசுகளும் (Coins) மைய இருப்பு வங்கியின் பணத்தால் வெளியீடும் (Currency notes) பணமாசுக் (Cash) கருதப்படுகின்றன. இவற்றுள் மைய வங்கியின் கடன் பொறுப்புகள் (Liabilities) பெருமளவில் உள்ளன. எப்பொழுதெல்லாம் மைய இருப்பு வங்கியின் சொத்துகள் (Assets) மிகுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் அதன் பொறுப்புகளும் அதே அளவிற்கு மிகும். அப்பொழுது நாட்டின் பண அளவு மிகுதியாகும். ஒவ்வொரு நாட்டிலும் பணத்தொகையைப் போலப் பன்மடங்கு வங்கி வைப்புகள் (Bank deposits) உள்ளன. இவை உடனடிப் பணத் தொகையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. மைய இருப்பு வங்கியின் பொறுப்புகள், உடனடிப் பணமாக இருப்பதால் அப்பணத்தின் அளவு மிகும் நிலையில் வங்கியின் வைப்புகளும் (வங்கியின் பொறுப்புகளும்) மிகுகின்றன. அதாவது, நாட்டின் மொத்தப் பண அளிப்பு உயரும். நாட்டின் பண அளவினைக் கட்டுப்படுத்த, வங்கிகளின் பொறுப்புகளான வைப்புகளைக் குறைக்க வேண்டும். வங்கியின் வைப்புகளைத் தோற்றுவிக்க உடனடிப் பணம் அடிப்படையாக உள்ளது. எனவே, மைய இருப்பு வங்கியின் கடன் பொறுப்புகளைக் குறைக்க வேண்டும். அதாவது, மைய இருப்பு வங்கியின் சொத்துக்களைக் குறைத்தால்தான் அதன் பொறுப்பான உடனடிப் பண அளவைக் கட்டுப்படுத்த இயலும். மைய இருப்பு வங்கியின் பொறுப்புகள் குறைவதால் பணத்தின் அளவு குறைந்து, வணிக வங்கிகளின் வைப்புத் தொகையைக் குறைக்க வேண்டிய கட்டாயநிலை ஏற்படும். இவ்வாறு வெளி அங்காடி நடவடிக்கைகளின் வாயிலாக மைய இருப்பு வங்கி, நாட்டின் பண அளவினைக் கட்டுப்படுத்த முடியும். இதைப் போலவே மைய இருப்பு வங்கி, கூடுதலான சொத்துகளை வாங்கும் பொழுது உடனடியாகவோ சிறிது காலம் தாழ்த்தியோ நாட்டின் பண அளவை உயர்த்த முடியும். அங்காடி நடவடிக்கைகளை விடச் சிறப்புத் தன்மை வாய்ந்தவை வங்கி வீத (Bank rate) நடவடிக்கைகள் ஆகும். ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும், அந்நாட்டின் வணிக வங்கிகளுக்கு இறுதிநிலைக் கடன் நல்கும் அமைப்பாக உள்ளது. இங்ஙனம் வணிக வங்கிகளுக்கு நேரடியாகவும், இதர நிதி நிறுவனங்களுக்கு மறைமுகமாகவும் மைய இருப்பு வங்கி கடன் கொடுத்து உதவுகிறது. இத்தகைய கடன் தொகையின் அளவு, அதனைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள், அதற்கான வட்டிவீதம், கால அளவு, ஈடாக ஏற்றுக்கொள்ளப்படும் கடனுறுதிச் சீட்டுகள் முதலியவற்றை வரையறுப்பதன் மூலம் மைய இருப்பு வங்கி தனது வங்கி வீதக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. மைய இருப்பு வங்கியின் இந்நடவடிக்கை வட்டி வீதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வட்டிவீதம் என்பது பண அங்காடியிலும் மூலதன அங்காடியிலும் ஆற்றல் வாய்ந்த ஒரு கருவியாகும். நீண்டகால, குறுகியகால வட்டி வீதங்களை முறைப்படுத்துவதும் மைய இருப்பு வங்கியின் வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே ஆகும். நாட்டில் குறுகிய காலக் கடன் தொகையின் அளவைக் குறைத்து, அதற்குப் பதிலாக நீண்டகாலக் கடனுறுதிச் சீட்டுகளை வெளியிடுவதன் மூலமாக, வணிக வங்கிகளின் கடன் அளிக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியும். குறுகிய காலக் கடனுறுதிச் சீட்டுகள் அங்காடியிலிருந்து அகற்றப்படுவதால் குறுகிய கால வட்டிவீதம் உயரவும். நீண்டகாலக் கடனுறுதிச் சீட்டுகளின் விலையுயர்ந்து நீண்டகால வட்டிவீதங்கள் குறையவும் கூடும் இங்ஙனம் வட்டிவீதக் கூட்டமைப்புகளை (Structure of Interest Rates) குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவ்வப்போது மாற்றியமைப்பதே பண அளவுக் கட்டுப்பாட்டின் முதன்மையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பண அளவின் நிருவாகத்தில் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் ஓரிடத்தைப் பெற்றிருப்பதைப் போலவே, பண அளவுக் கோட்பாடுகளிலும், (Quantity Theory of Value) பணவியற் கோட்பாடுகளிலும் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. பணம் ஏன் தேவைப்படுகிறது என்ற வினாவிற்கு அதன் நீர்மைத்தன்மையே (Liquidity) காரணமாகக் கூறப்படுகிறது. ஏனைய சொத்துகளைவிட, பணத்தை அனைவரும் விரும்பி ஏற்பதால் அதற்கு நீர்மை நிலை ஏற்படுகிறது. ஒருவர் தனது வருமானத்தில் ஒரு பகுதியை நீர்மை மிகுந்த உடனடிப் பணமாக வைத்துக் கொள்வதில் ஒரு வகையான மறைமுகச் செலவு ஏற்படுகிறது. பணமாக வைத்துக் கொள்ளதற்குப் பதிலாக வட்டி வருமானம் நல்கக் கூடியதும் இடரிழப்பு இல்லாததுமான அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகளில் முதலீடு செய்வது விரும்பப்படுகிறது. அதனால் உண்டாகும் வருமான இழப்பு, உடடிைப் பணத் தேவைக்கான வாய்ப்புச் செலவாகக் (Opportunity Cost) கருதப்படும். பணவியற் கோட்பாடுகளில் பணம், நீர்மைத் தன்மை மிக்கதும் வருமானம் நல்காததுமான சொத்- தாகவும் உள்ளது. அதற்கு நேர் எதிரான வகையில் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் உள்ளன. இவை வருமானம் நல்கக் கூடியவை. ஆனால் நீர்மைத் தன்மை ஏதும் இல்லாதவை. இந்தியாவில் மைய அரசும் மாநில அரசுகளும் நீண்ட காலக் கடனுறுதிச் சீட்டுகளை வெளியிடுகின்றன. இவ்வகையில் 1981–ஆம் ஆண்டில் மட்டும் 18,683.5 கோடி உரூபாய் அளவிற்கு இச்சீட்டுகள் விற்பனையாகியுள்ளன. ::Source: RBI: Report on Currency and Finance, 1981–82, Vol. II, pp. 120–121 எம்.தி.