அகவற்பா
akavaṟpā
தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று.
தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும்.
தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும்.
இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.அ.பி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 127)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aujchmgx/
தமிழ்“அகவற்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aujchmgx/APA
Oliyon Research. (2026). அகவற்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aujchmgx/MLA
"அகவற்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aujchmgx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment