உடம்படு புணர்த்தல்
uṭampaṭu puṇarttal
ஓராசிரியர் தாம் உணர்த்த விரும்பும் செய்தியினைத் தம் நூலுள் உரிய விடத்தில் நேராகத் தெரிவிப்பது இயல்பாகும்.
ஓராசிரியர் தாம் உணர்த்த விரும்பும் செய்தியினைத் தம் நூலுள் உரிய விடத்தில் நேராகத் தெரிவிப்பது இயல்பாகும். நேராகத் தெரிவிக்காமல் அதனைப் பிற வழிகளாலும் தெரிவிப்பதுண்டு. அவ்வாறுணர்த்த அவர் மேற்கொள்ளும் வழிகளுள் ‘உடம்படு புணர்த்தல்’ என்பது ஒன்றாம். இந்த நுவல் திறன் இலக்கிய இலக்கண உத்திகளுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. உடம்படுபு, உணர்த்தல் ஆகிய சொற்கள் ‘உடம்படு புணர்த்தல்’ என்று புணர்ந்து நின்று, ‘உடன்பட்டு உணர்த்துதல்’ என்னும் பொருள் தந்து நிற்கின்றன. இதனை ‘உடம்பொடு புணர்த்தல்’ என்றும் கூறுவர்.
உடம்படுபுணர்த்தலாகிய நுவல்திறன் இலக்கண ஆசிரியர்களால் நன்கு மேற்கொள்ளப் பெற்றுள்ளது. பவணந்தி முனிவர் சில இலக்கண விதிகளை ‘உடம்படு புணர்த்தல்’ என்னும் வழியினை மேற்கொண்டு விளக்கியுள்ளார்.
1) அன்றி, இன்றி என்னும் வினையெச்சக் குறிப்புச் சொற்களின் இறுதியிலுள்ள இகரம் செய்யுளில் உகரமாய் வருமாயின், அவற்றிற்கு முன் வரும் கசதபக்கள் மிகாது இயல்பாகும் என்பது நன்னூலார் கூறும் ஒரு புணர்ச்சிவிதியாகும். ‘அன்றி இன்றி என் வினையெஞ்சிகரம், தொடர்பினுள் உகரமாய் வரின் இயல்பே’ என்பது அதற்குரிய நூற்பா (நன். 173) இந்நூற்பாவில், ‘அன்றி, இன்றி என்பவற்றின் இகரம் செய்யுளுள், உகரமாக வரும்’ என்று ஆசிரியர் கூறவில்லை. ‘உகரமாக வந்தால்’ (வரின்) என்றே கூறியுள்ளார். ‘வந்தால்’ என்பது வரும் என்பதனை உடன்பட்டுக் கூறியதாக உள்ளது. இவ்வாறு ஒரு விதியினை நேரே கூறாமல், ஒரு வகையால் உடம்பட்டுக் கூறுவதும் விதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு கூறியது உடம்படு புணர்த்திக் கூறியதாகும்.
2) நன்னூலாசிரியர் வியங்கோள் வினைமுற்றினைக் கூறுமிடத்து, அதன் இறுதி எழுத்தினை விதந்து கூறி, அவற்றால் முடியும் வியங்கோள் வினைமுற்று ஐம்பால் மூவிடங்களிலும் செல்லும் என்று விதி கூறியுள்ளார். ‘கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலும் இடம் பால் எங்கும் என்ப’ (நன். 338) என்பது அதற்குரிய நூற்பா. இதில் வியங்கோள் வினைமுற்றின் ஈறுகளாக க, ய, ர், ஆகிய மூன்றினையே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அல் என்பதும் வியங்கோள் விகுதியாக நன்னூலாசிரியருக்கு முற்பட்ட கால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. ‘பயனில் சொல்’ எனத் தொடங்கும் குறளில் வரும் (குறள். 196) ‘மக்கட் பதடி எனல்’ என்னும் தொடரில் ‘அல்’ என்பது வியங்கோள் ஈறாக, மக்கட் பதடி என்று கூறுக என்னும் பொருளில் அமைந்தது. இந்த நூற்பாவில் அல் என்னும் விகுதியைக் கூறாது விடுத்தமை குன்றக்கூறல் என்னும் குற்றத்தின்பாற்படும். ஆனால், நன்னூலாசிரியர் வியங்கோள் ஈறுகளுள் ‘அல்’ என்பதும் ஒன்றாகும் என்பதனை உடன்பட்டு, தம் நூலுள் அதனை மேற்கொண்டு, ‘வகுத்துரையாகவும் வகுத்தனர் கொளலே’ (நன்.257) என்று நூற்பா இயற்றியுள்ளார். இதனால் ‘அல்’ என்பதும் வியங்கோள் ஈறாகும் என்பதனை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது புலனாகிறது. இவ்வாறு கூறுதலும் உடம்படு புணர்த்தல் ஆகும். இவ்வுத்தியினை ஆசிரியர் மேற்கொண்டமையால், வியங்கோள் வினை கூறுமிடத்து அல் விகுதி கூறாமை குற்றமாகாது என்பதும் உணரப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 775)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/au29bzbb/
தமிழ்“உடம்படு புணர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/au29bzbb/APA
Oliyon Research. (2026). உடம்படு புணர்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/au29bzbb/MLA
"உடம்படு புணர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/au29bzbb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment