உடலியல்சார் உளவியல்
uṭaliyalcār uḷaviyal
உடலியல்சார் உளவியலானது உயிரிகளின் உடலின் அடிப்படை உறுப்புகளின் இயக்கங்களையும் அவற்றின் தொடர்பாக ஏற்படும் நடத்தையையும் ஆராயும் உளவியற் பிரிவு ஆகும்.
உடலியல்சார் உளவியலானது உயிரிகளின் உடலின் அடிப்படை உறுப்புகளின் இயக்கங்களையும் அவற்றின் தொடர்பாக ஏற்படும் நடத்தையையும் ஆராயும் உளவியற் பிரிவு ஆகும். இக்காலத்தில் ஓர் உயிரியின் நடத்தைக்கான உண்மைகள் பல நன்கு தெளிவாகி உள்ளன. ஆனால் மனிதன் போன்ற சிக்கலான உயிரியின் நடத்தையை முற்றிலும் அழிவதற்கு இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பொதுவாக உளவியல், குறிப்பாக உடற்கூற்று உளவியல் உடற்கூற்றியல் (Anatomy), வேதியியல், நாளமிலாச் சுரப்பியியல் (Endocrinology), மரபியல் (Genetics) போன்ற துறைகளில் உள்ள உண்மைகளையே பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையிலுள்ளது. உடலியல் துறையினைக் கொண்டுதான் வாட்சன் (J.B. Watson) நடத்தைக் கோட்பாட்டினை உருவாக்கினார். வாட்சன், அவரைப் பின்பற்றிய பல உளவியலார்கள், தாண்டைக்கு (T.H. Thorndike), இசுகின்னர் (B.F. Skinner), ஆர்லோ (Harlow) ஆகிய விலங்கியல் உளவியலார்கள், கோலர் (Kohler), காப்கா (Koffca) போன்ற முழுமை உளவியலார்கள் ஆகியோர் உயிரியின் நடத்தை விதிகளைப் பற்றி எலி, பூனை, குரங்கு போன்ற விலங்கினங்களைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் அடிப்படைகளும், உருசிய நாட்டு உடற்கூற்று மேதையான பாவ்லவு நாய்களைக் கொண்டு நடத்தி வெளியிட்ட ஆக்கநிலையிருத்தக் கொள்கையும் உடலியல்சார் உளவியலுக்குப் பெருத்த உதவியாக அமைந்தன.
உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள தொடர்பினைத் தொன்றுதொட்டு இந்தியாவிலும் மேனாடுகளிலும் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் பண்டைக்காலம் முதல் உள்ளம் உடலைச் சார்ந்து எழுவது, அதன் காரணமாக உடலழிந்தால் உள்ளமும் அழிகிறது என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேலைநாட்டில் ஆன்மாவையும் உள்ளத்தையும் வேறுபாடின்றிக் கருதிவந்தார்கள்; உளவியல் ‘ஆன்ம இயல்’ எனவும் பொருள்படும்.
முதன்முதலாகத் தருக்கமுறையில் உடல்–உள்ளத் தொடர்பை ஆராய்ந்தவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேகார்ட்டு என்னும் பிரெஞ்சு அறிஞராவர். அவர் வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு உடல் உள்ளத் தொடர்பைப் பல்வேறாக வெளியிட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இசுபினோசா (Spinoza), இலாக்கு (Locke), பார்க்கிலே (Berkeley), யூம் (Hume) போன்ற தத்- துவ அறிஞர்களாவர். இவர்களின் மாறுபட்ட கருத்துகளை இணைக்க முயற்சி செய்தவர் பிராட்லி (Bradley) என்னும் செருமானியத் தத்துவ அறிஞர். மேற்கூறிய ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் உள்ளம் என்பது பிறப்பால் அமைந்தாலும் அது சூழ்நிலை தூண்டுதல்களினால் வெளிப்படுகிறது என்று கருதினார்கள். இங்கிலாந்து அறிஞர்கள் பிறந்த ஒரு குழந்தையின் உள்ளம் ‘வெறும் பலகை’ போன்றிருக்கிறது என்னும் குழந்தை வளர வளரவே, சூழ்நிலைத் தூண்டுதல்களினால் உள்ளம் வளரத் தொடங்குகிறது என்றும் கருதினர்.
இந்த நூற்றாண்டில் நரம்பியல் துறை மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இத்துறையில் முதன்முதலாக உளவியலாரது ஆர்வத்தைத் தூண்டியவர் செரிங்ட்டன் (Sherrington) என்பவர். இப்போது ஓர் உயிரியின் நடத்தை இரண்டுவகையாக ஆராயப்படுகிறது. ஒன்று விலங்குகளின் மூளையின் பல்வேறு பாகங்களைச் சிறிது சிறிதாக அகற்றி, உயிரியின் நடத்தையில் ஏற்படும் மாறுதல்கள் யாவை என்பதை நோக்குவது. அவ்வாறே உளநோயால் பாதிக்கப்பட்டவர்களது மூளையின் குறிப்பிட்ட பாகங்களை அறுவை மருத்துவ முறையால் அகற்றிவிட்டு அவர்களது நடத்தையில் முன்னேற்றம் உள்ளதா என்பதை நோக்குவது. இது அகற்றுமுறை (Method of Extirpation) என்று கூறப்படுகிறது. மற்றொரு ஆராய்ச்சி வகை தூண்டுதல் முறை (Method of Stimulation). இதன்படி மூளையின் பகுதிகளை மின் ஆற்றல் கொண்டு தூண்டி, உயிரியின் நடத்தையில் மாறுதல்களை நோக்குவது. இவ்விரண்டு வகையான ஆராய்ச்சிகளால் உயிரியின் மூளையைப் பற்றிய அறிவும் மூளை எப்படிச் சிந்தனை, மனவெழுச்சி போன்றவைகளுக்கு இருப்பிடமாக அமைந்துள்ளது என்பதும் அறியப்பட்டன.
மனிதனின் உடலமைப்பு
மனிதனின் பல கோடி நரம்புகள் உள்ளன. இந்நரம்புகள் மிகவும் மெல்லியனவாகவும் பல கிளைகள் கொண்டனவாகவும் இருக்கின்றன. இவை உடலில் பல பாகங்களாகிய தசைகள், புலன் உறுப்புகள் முதலியவற்றோடு சேருகின்றன. எனினும் பல பிரிவுகள் நேரடியாக ஒன்றோடொன்று இணைக்கப்படவில்லை. இவை யாவும் மூளையின் மூலமாகவும் தண்டுவடத்தின் மூலமாகவும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மனித உடலின் தூண்டுதலால் ஏற்படும் துடிப்புகளை (Impulses) மூளைக்கோ தண்டுவடத்துக்கோ எடுத்துச் செல்லும் நரம்புகளை ‘உணர் நரம்புகள்’ (Sensory Nerves) என்றும், தசைகளுக்கும் சுரப்பிகளுக்கும் (Glands) எடுத்துச் செல்லும் நரம்புகளை ‘இயங்கு நரம்புகள்’ (Motor Nerves) என்றும் குறிப்பிடுவார்கள். பல்வேறு நரம்புகளுக்கும் மூளைக்கும் தண்டு வடத்திற்கும் உள்ள தொடர்பை ஒரு தந்தி நிலையத்திற்கு ஒப்பிடுவதுண்டு. செய்திகள் வெளியிலிருந்து தந்திக் கம்பிகள் வழியாகத் தலைமை, நிலையத்திற்குச் செல்கின்றன. தலைமை நிலையத்தில் அச்செய்திகள் பாகுபடுத்தப்பட்டுப் பிறகு உரிய இடத்திற்குத் தந்திக் கம்பிகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.
மறிவினை
புலனுணர் கருவிகள் தூண்டப்பட்டு அவற்றின் காரணமாக உடலுறுப்புகள் இயங்குவது மறிவினை எனப்படும். மறிவினை ஏற்படுவதற்குத் தலைமை நரம்பு மண்டலம் இன்றியமையாததாகும். மறிவினைகள் (Reflexes) உயிரியின் தற்காப்புக்காகவும் நலத்திற்காகவும் அமைந்த இயற்கை வழியாகும். மறிவினைகளுள் முக்கியமானவை–ஒளி ஊடுருவும் படலம் (Cornea) தூண்டப்பட்டால் இமைத்தலும், விழித்திரை (Retina) மேற்படும் ஒளியினால் கண் சுருங்குதலும், ஆபத்தான தூண்டல்களிலிருந்து திடீரென்று விலகுதலும், சுவைப்புலனுணர்வு உறுப்புகள் தூண்டப்பட்டால் உமிழ்நீர் சுரத்தலும் ஆகிய செயல்களாகும்.
மறிவினை இரண்டாகும். ஒன்று, இயற்கையாக ஓர் உயிரியில் தோன்றுவதாகிய இயற்கை மறிவினை. மற்றொன்று, ஆக்கநிலையிருத்தம் செய்யப்பெற்ற (Conditioned) மறிவினை. இயற்கை மறிவினை ஓர் உயிரியோடு பிறந்த இயக்கமாகும். இவை ஓர் இன உயிரிகள் யாவற்றிலும் ஒரே தன்மையுடையனவாக இருக்கும்.
மைய நரம்பு மண்டலம்
ஓர் உயிரியின் பல்வேறு இயக்கங்களை இயக்கியும் கட்டுப்படுத்தியும் வைப்பது மைய நரம்பு மண்டலமாகும். இவ்வமைப்பு மீன் இனம் முதல் மனிதன் ஈறாகவுள்ள உயிர் வாழ்வனவற்றில் காணப்படுகிறது. ஆனால் இது மனிதனிடத்தேதான் மிகவும் பக்குவமடைந்துள்ளது. மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) மண்டையிலும் (Skull) முதுகெலும்பு வடத்திலும் (Verteberal Column) அடங்கியுள்ளது. மூளை, தண்டுவடம் ஆகியவை மூளைத்தண்டுவட நீரில் (Cerebrospinal Fluid) மிதந்துகொண்டிருக்கின்றன. இந்நீர் மூளையையும் தண்டுவடத்தையும் வெளியுலகத்து அதிர்ச்சியினின்றும் காப்பாற்றுகிறது.
தண்டுவடத்தின் செயல்கள் இருவகைப்படும். அவை உட்செல்லும் நரம்புகளின் செய்தியை மூளைக்கு அனுப்புவதும் மூளையிலிருந்து வரும் செய்- தியை வெளிச்செல் நரம்புகளுக்கு அனுப்புவதுமாகும். தண்டுவடம் மூளையின் உதவியின்றி மறிவினையைத் தூண்டுவதும் உண்டு. தவளை போன்ற கீழ்த்தர உயிரிகளின் மூளையைத் தண்டுவடத்தினின்றும் அகற்றியபோதிலும் அவை பல தூண்டல்களுக்குத் துலங்கின. மனிதனிடத்தில் காணப்படும் முதுகு நிமிர்தல், குனிதல், சொறிதல் போன்ற நடத்தைகள் தண்டுவடத்தினாலேயே நடைபெறுகின்றன.
மூளையை முக்கியமாக முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். மூளையின் பின்பகுதியில் முகுளம் (Medulla Oblongata), சிறுமூளை (Cerebellum) ஆகிய இரு முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றுடன் மூளையின் இருபகுதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை (Pons) என்னும் பகுதியும் உள்ளது. இப்பகுதியே நடுமூளையையும் முகுளத்தையும் இணைக்கிறது. மூச்சுவிடுதல், இதயத் துடிப்பின் வேகம் ஆகியவற்றின் நிலையங்கள் முகுளத்தில் உள்ளன.
முன் மூளையை மூளையின் முக்கியமான பகுதியாகக் கருதலாம். இப்பகுதியில்தான் புறணி (Cerebral Cortex), மூளை நரம்பு முடிச்சு (Thalamus), கீழ் மூளை நரம்பு முடிச்சு (Hypothalamus) ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பாகங்களே பல உள நிகழ்ச்சிகளுக்குக் காரணமாக அமைகின்றன. மனிதனிடத்தும் மற்ற உயர்தர விலங்குகளிடத்தும் இப்பகுதியே மிகவும் பக்குவமடைந்துள்ளது. பெருமூளைப்புறணி மூளையின் வெளிப்பாகமாகும். பெருமூளைப் புறணியிலுள்ள சராசரி 140 கோடி உயிரணுக்கள் (Cells) நரம்புகளில் பாயும் செய்திகளின் திசைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
சிறுமூளை பின் மூளையில் அமைந்திருக்கிறது. கை, கால் முதலியவை ஒன்றி வேலை செய்வதற்கான நிலையம் (Centre) சிறு மூளையில்தான் உள்ளது. உடல் செங்குத்தாகவும் சமநிலையாகவும் இருப்பதற்கு இப்பகுதி காரணமாக உள்ளது.
நடுமூளை முன் மூளைக்கும் பின் மூளைக்குமிடையே ஒரு பாலம் போலுள்ளது. இப்பகுதி செய்திகளை மேலும் கீழும் அனுப்ப உதவுகின்றது. மேலும் இப்பகுதியில் கட்புலன், செவிப்புலன் ஆகியவற்றிற்குரிய முக்கிய நிலையங்கள் உள்ளன.
மூளை நரம்பு முடிச்சு என்னும் மூளையின் பகுதி வெளியுலகத்துத் தூண்டல்களினால் புலன்கள் வழியாக வரும் பல்வேறு துடிப்புகளை அவற்றிற்குரிய பகுதிகளுக்குள் செலுத்துகிறது. தோலிலிருந்து வரும் துடிப்புகளைப் புறணியின் ஒரு பாகத்திற்கும், செவிப் புலனிலிருந்து வரும் துடிப்புகளைப் புறணியின் மற்றொரு பாகத்திற்கும் செலுத்துகிறது. புலனுணர்ச்சி, இயக்கம் ஆகியவற்றுக்கான பெரும்பாலான இயைபுகள் மூளை நரம்பு முடிச்சிலேயே ஏற்படுகின்றன; மூளை நரம்பு முடிச்சு புறணியிலிருந்தும் துடிப்புகளைப் பெறுகிறது. இத்துடிப்புகள் தம் இயக்கங்களைக் கட்டுப்படுத்தவே ஏற்படுகின்றன. மூளை நரம்பு முடிச்சுக்குச் சேதம் ஏற்பட்டால் இயக்கங்கள் மிகைப்படுகின்றன. எளிதாகச் சுற்றற்குரிய செயல்களும் மூளை நரம்பு முடிச்சால் ஏற்படுகின்றன என்று கருதப்படுகிறது.
கீழ்மூளை நரம்பு முடிச்சு சிறிய பாகமாக இருந்த போதிலும் அது பல முக்கியமான இயக்கங்களை உடையது. அது மனவெழுச்சி (Emotions), ஊக்கி ஆகியவற்றிற்கு நிலையமாக உள்ளது. மனவெழுச்சிகளுக்கும் கீழ்மூளை நரம்பு முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பினை ஆராய்ச்சி வாயிலாக முதன் முதலாக வெளியிட்ட பெருமை கானன் (Cannon); பார்டு (Bard) ஆகியோரைச் சாரும், உறக்கம், விழிப்பு இரண்டிற்கும் கீழ்மூளை நரம்பு முடிச்சு ஆதார நிலையமாக அமைந்திருக்கிறது.
மூளையில் பல மடிப்புகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை ‘உரோலேண்டோ’ (Rollando), ‘சில்வியசு’ (Sylvius) என்பவையாகும். உரோலேண்டோ என்னும் பிளவு மூளையின் மேல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்கிறது. இது ஏறக்குறைய மூளையின் நடுவில் உள்ளது. இக்கோட்டின் முன்புறத்திலுள்ள மூளையின் பாகம் முன்மடல் (Frontal Lobe) எனப்படும். இது நெற்றியின் பாகத்தில் தொடங்கி ‘உரோலேண்டோ’ப் பிளவுவரை நீண்டிருக்கிறது. விலங்கின் முன்மடலைவிட மனிதனின் முன்மடல் பெரிதாக உள்ளது. இயக்க இடம் (Motor Area) ‘உரோலேண்டோ’ப் பிளவுக்கு முன்னே அமைந்திருக்கிறது. இப்பகுதியே மனிதனின் கை, கால் முதலிய உறுப்புகளில் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இடத்திற்கு முன் பகுதி ‘முன் இயக்க இடம்’ (Pre-Motor Area) எனப்படும். இது மனிதனது உடல் முழுதும் பரவியுள்ள சிக்கலான இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. ‘சில்வியசு’ப் பிளவு மூளையின் முன்புறத்தின் அடிப்பாகத்திலிருந்து செல்கிறது. முன் இயக்க இடத்திற்குக் கீழேயும் சில்வியசுக்கு மேலேயும் இருப்பதை ‘இயைபு இடங்கள்’ (Association Areas) என்பர். இப்பகுதியே மனிதனின் நினைவு, சிந்தனை போன்ற உளச் செயல்களில் பங்கெடுத்துக் கொள்கிறது. முன்மடலுக்குச் சேதம் ஏற்பட்டால் மனிதனின் செயல்களில் மாறுபாடுகள் தோன்றும் முன் இயக்க இடத்திற்குச் சேதம் ஏற்பட்டால் ஓரளவுக்குப் பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றில் சீர்குலைவு ஏற்படுகிறது.
‘சில்வியசு’ப் பிளவுக்கு அடியிலுள்ள பகுதியை முன் மடலிலிருந்து பிரிப்பது பக்கவாட்டு மடல் (Temporal Lobe). பக்கவாட்டு மடலின் மேல் ஓரத்தில் செவிப் புலன் பகுதி உள்ளது. இப்பகுதியை மின் ஆற்றல் கொண்டு தூண்டினால் ஒருவனிடம் பல்வேறு ஓசைகள் எழும். பக்கவாட்டு மடல் மூளையின் இரு கோணங்களிலும் அமைந்திருக்கிறது. ஒரு கோணத்தி்ல் மட்டும் இப்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டால் கேட்கும் திறன் குறைகிறது. இரண்டு கோணங்களிலும் உள்ள இப்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டால் ஒருவன் முழுச் செவிடனாகிறான். பக்கவாட்டு அடிப்பாகத்தில் சுவை உணர்வுக்குரிய இடம் (Gestatory Area) இருக்கிறது. இப்பகுதிக்குப் பின் இப்பகுதிக்குப் பின் முகருணர்விடம் (Olfactory Area) உள்ளது. மூளைப் பின்மடல் (Occipital Lobe) மூளையின் பின்புறத்தில் இருக்கும் சிறிய பாகமாகும். இது கட்புலனுக்கு இருப்பிடம். விழிகள் வழியாக உட்செல்லும் செய்திகள் இப்பகுதியை அடைகின்றன. அச்செய்திகளைப் பொருள் (Meaning) படச் செய்வது இப்பகுதியே ஆகும். இப்பகுதிக்குப் பழுது ஏற்பட்டால் ஒருவன் முழுக்குருடு ஆவதில்லை. ஆனால் படிப்பது, பொருள்களை அறிந்துகொள்வது போன்றவை பாதிக்கப்படுவனவாகக் கருதப்படுகிறது.
இயைபுச் செயல்கள்
இயைபு இடம் பெரு மூளைப் புறணியில் (Cerebral Cortex) இருக்கிறது. இந்த இடம் ஒருவனிடத்து ஏற்படும் பல செயல்களை ஒழுங்காக இணைக்க உதவுகிறது. இப்பகுதியில் புலனுணர்வு இடத்தை இயக்க இடத்துடன் இணைக்கும் பல நரம்புகள் உள்ளன. கற்றல், சிந்தனை, நினைவு போன்ற உளத்திறன்களுக்கு இயைபு இடம் ஆதார நிலையமாகவும் கருதப்படுகிறது. இப்பகுதிக்குச் ரேதம் ஏற்பட்டால் குறிப்பிட்ட இயல்பை இழப்பதில்லை. ஆனால் உளத்திறமையில் பொதுவாகக் குறைவு ஏற்படுகிறது. திறனின் குறைவு, சேதம் ஏற்படும் பகுதியின் அளவுக்குத் தக அமைந்துள்ளது. இந்த உண்மையை முதன்முதலாகக் கண்டவர் இலாசுலி (Lashley) என்னும் நரம்பியல் அறிஞர். மேலும், அவர் கண்ட உண்மையாவது சேதமடைந்த பகுதியின் இயக்கத்தை நாளடைவில் மற்றப் பகுதிகள் சமமாகப் பெற்று இயங்குகின்றன என்பதாகும். இந்த உண்மையைச் சம சக்திக் கொள்கை (Theory of Equipotentiality) என்று கூறுவார்கள்.
இயையு இடத்தில் மேலே கூறிய உளத்திறன்களோடு பேச்சைப் புரிந்துகொள்ளுதல், எழுதுதல் போன்ற நடத்தைகளுக்குத் தனிப்பட்ட நிலையங்களும் உண்டு.
பேச்சு
பேசுவதற்கான முக்கிய பகுதி பக்க மடலிலும் பக்கவாட்டு மடலிலும் அமைந்துள்ளது. இப்பகுதி செவிப் புலனுக்கான பகுதிக்கு அருகிலேயும் உள்ளது. அதன் காரணமாகத்தான் குழந்தைகள் முதன்முதலில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, பிறகு பேச முயற்சி செய்கிறார்கள். செவிப்புலனுக்குரிய பகுதிக்குச் சேதம் ஏற்பட்டால் பேச்சை இழக்க நேரிடும் அல்லது தடைபடும். இதற்கு உணர்வு மறதி (Sensory Aphasia) என்பது பெயர். இக்குறை ஏற்பட்டால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியும்; ஆனால் புரிந்துகொள்ள இயலாது. மேலும் பாதிக்கப்பட்டவனது பேச்சு பொருளற்றிருக்கும். முன் இயக்க இடத்திற்கு (Pre–Motor Area) ஏதேனும் சேதம் ஏற்பட்டால் இயக்கப் பேச்சுக் குறை (Motor Aphasia) ஏற்படும். அதனால் சொற்களைத் திருந்த ஒலிக்க முடியாத நிலை ஏற்படும். இதற்குக் காரணம் பேசுவதற்குரிய தசைகள் இயைந்து இயங்குவதில்லை. தசைகளில் குறைகள் இல்லாவிடினும் இயைபில் குறை இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. முன் இயைபு இடம் (Frontal Association Area) அறிவுக் கூர்மைக்கு முக்கியமான பகுதியாகும். ஒருவனது முன் இயைபு இடம் சேதமடைந்தால் அவனது வேலைத்திறன் குறைகிறது. முன்யோசனை இன்றிச் செயல்களில் ஈடுபடும் போக்கை அடைகிறான். உளச்சோர்வு போன்ற உளநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்பகுதியை அறுவை முறைப்படி அகற்றிவிட்டால், அவர்கள் ஓரளவு குணமடைவதாகக் கருதப்படுகிறது. இது முன் மூளை அறுவை முறை (Frontal Lobstomy) எனப்பெயர் பெறும்.
மனவெழுச்சியும் தானியங்கு மண்டலமும்
தானியங்கு மண்டலம் மூளையினின்றும் தண்டுவடத்தினின்றும் வெளிப்பட்டு உடலின் பல்வேறு பகுதிகளில் தொடர்பு கொள்ளும் நரம்புகளைக் கொண்டதாகும். தானியங்கு மண்டலம் (Autonomous Nervous System) இருவகைப்படும். அவை சார்பு இயக்க மண்டலம் (Sympathetic System), எதிரியக்க மண்டலம் (Parasympathetic System) எனப்படும். சார்பு இயக்க மண்டலம் இருதயத் துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும் மிகுதிப்படுத்தி, மேல்புறத்துத் தசைகளுக்குச் செலுத்துகிறது. அதன் காரணமாகக் சீரணம் செய்யும் உடற்பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. மிகுதியான இரத்தமானது வேறு பகுதிகளுக்குச் செலுத்தப்பட்டுச் சீரண உறுப்புகளுக்குக் குறைவதன் காரணமாக ஒருவன் அச்சம், சினம் போன்ற மனவெழுச்சி வயப்பட்டால் சீரண உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. எதிரியக்க மண்டலம் ஒருவன் அமைதியாக இருக்கும்போது இயங்குகிறது. உடலின் பகுதிகளுக்குச் சக்தி ஊட்டும் பகுதி இது தான். இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைப்பது, இருதயத் துடிப்பைக் குறைப்பது போன்றவை இப்பகுதியின் இயக்கங்களில் சில ஆகும்.
மனவெழுச்சி நிலையில் இரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் ஏற்படுவதோடு, சுவாசிக்கும் முறையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவற்றோடு கண் பாவைகள் (Pupils) விரிதல், நாக்கு வறட்சி ஏற்படல் போன்றவை ஏற்படுகின்றன. மனவெழுச்சி நிலையில் சார்பு இயக்க மண்டலத்தில் ஏற்படும் மற்றொரு மாறுதல் அண்ணீரகச் சுரப்பியால் (Adrenal Gland) ஆகும். இச்சுரப்பி சிறுநீரகத்திற்கு (Kidney) மேலே அமைந்துள்ளது. இச்சுரப்பியினின்றும் உயிர்வினை ஊக்கிச் (Harmone) சத்துகள் ஓடும் இரத்தத்தில் கலந்து மூளைக்கும் உடலின் பல வேறு தசைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் மனவெழுச்சி வயப்பட்டால் துடிப்பு மிகுதியாக ஏற்படுகிறது.
ஊக்கியும் நடத்தையும்
ஊக்கி என்னும் சொல் விடாய்கள், உந்துகள், இயல்பூக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லாகும். பறவை, விலங்கினங்களில் ஊக்கிகள் ஓரளவுக்கு உடலைச் சார்ந்து அமைகின்றன. ஆனால் மனிதனிடம் அவை தொடக்கத்தில் உடலைச் சார்ந்து இருந்தபோதிலும், அவன் வளர வளர அவை பெருத்த மாறுதல்கள் அடைவதோடு உடலைச் சார்ந்த ஊக்கிகளோடு தொடர்பற்றும் போகின்றன. அதன் காரணமாக ஊக்கிகளை உடல்சார்பு ஊக்கிகள் (Physiological Motives) என்றும் உளச்சார்பு ஊக்கிகள் (Psychological Motives) என்னும் குறிப்பது உண்டு. இங்கு முக்கியமான உடல்சார்பு ஊக்கிகளான தாகம், பசி, தூக்கம், பால் இவைகளுக்கு விளக்கம் தரப்படும்.
தாகம்
உடலில் ஏற்படும் பல்வேறு சுரப்பிகளினின்றும் வெளிப்படும் சத்துகள் உடலைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் கலக்கின்றன. இவ்வாறு கலக்கும் சத்துகள் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அச்சத்துகள் இவ்வுறுப்புகளுக்கு வலிமையும் சக்தியும் அளிக்கின்றன. உடலின் இரத்தம் அதற்கான குழாய்கள் வழியாகச் சுற்றிவர நீர் அவசியமாகிறது. இந்த நீர் குறைந்தால் இந்தக் குறைவை எடுத்துக்காட்ட இயற்கை வழியாகத் தாக உணர்ச்சி ஒருவனிடம் ஏற்படுகிறது. உடலிலுள்ள நீரானது குறைவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவைகளுள் முக்கியமானது உடல் வெப்பநிலையிலுள்ளபோது உடலிலுள்ள நீரானது வியர்வையாக வெளிப்பட்டுத் தோலின்மேல் பரவி உடலின் தட்பவெப்பநிலையை நடுத்தர நிலைக்குக் கொண்டுவர உதவுவதாகும். இவ்வாறு வியர்வையாக வெளிப்படும் நீரானது சூழ்நிலையின் வெப்பநிலையின் காரணமாக ஆவியாகி உடலை விட்டு நீங்குகிறது. உடலின் நீரானது உடலுக்குத் தேவையற்ற பொருள்களைக் கழிப்பதற்குப் பயன்படுகிறது. சிறுநீர் கழித்தல் இதற்குச் சான்றாகும். மூளையின் பகுதியான கீழ்மூளை நரம்பு முடிச்சிலுள்ள உயிரணுக்கள் தாகத்துக்கான நீரின் அளவை ஒழுங்குபடுத்துவதாக ஆராய்ச்சி உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. ஒருவன் தாக உணர்ச்சியைத் தொண்டையிலும் வாயிலும் பெறுவது அறிவிப்புகள் (Signals) எனக் கருதலாம்.
பசி
உடல் தன் வளர்ச்சிக்கும் சூழ்நிலைத் தூண்டல்களுக்கும் செயலாற்றுவதன் காரணமாக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆற்றல் உணவிலிருந்து தான் பெறப்படுகிறது. ஒருவனுக்குப் பசி உணர்வு ஏற்பட்டால் வயிற்றிலுள்ள சீரண உறுப்புகளில் மாறுதல்கள் உண்டாகின்றன. அதன் காரணமாகப் பசி உணர்வுக்கு வயிற்றிலுள்ள சீரண உறுப்புகள் தாம் காரணம் என்று கருதுவதுண்டு. ஆனால் குடலில் ஏற்படும் புண் காரணமாகச் சீரண உறுப்புகள் அறுவை மருத்துவத்தால் நீக்கப்பட்டோர் பசி உணர்வை உடையவர்களாக உள்ளனர். இதனால் பசி உணர்வுக்கு வேறு உடல் உறுப்புகளும் காரணமாக உள்ளன எனத் தெரிகிறது. இது உடலில் ஏற்படும் பலவித வேதியல் மாறுதல்கள் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
உறக்கம்
உறக்கமானது கழிவுப் பொருள்கள் அதிகம் சேகரிக்கப்படுவதன் காரணமாகவும் தனிப்பட்ட சில வேதிப்பொருள்கள் மிதமாக உடலில் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாகவும் உண்டாவதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சி உண்மைகள் இக்காரணங்களை உறுதிப்படுத்தவில்லை. ஒருசிலரைப் பல நாட்கள் தூங்கவிடாமல் வைத்து, அவர்களின் உடல் வலிமையையும் உளத்திறன்களையும் ஆராய்ந்த போது அவற்றில் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சி செய்தோர் வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் உடல் வலிமையையும் உடல் உணர்வுகள் சிலவற்றையும் சிந்தனை, ஆய்வுத்திறன், கற்பனை போன்றவற்றையும் இழந்து காணப்பட்டார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூக்கத்திற்கு அடிப்படைக் காரணம் மூளையிலுள்ள சில பகுதிகள் என இப்போது கருதப்படுகிறது. ஆனால், மூளையின் தூக்கத்திற்கான நிலையங்கள் யாவை எனக் கூறும் நிலையில் இப்போதைய ஆராய்ச்சி உண்மைகள் இல்லை.
பால்உந்து
உடல்சார் ஊக்கிகளில் பால்உந்து தனிப்பட்டதாகும். பால்உந்து ஆற்றல் வாய்ந்தது; உயிரிகள் இந்நில உலகத்தில் நிலைத்திருக்கப் பரம்பரை வளர்ச்சிக்குப் பால்உந்து முக்கியமாக உள்ளது. எனினும் தாகம், பசி, உறக்கம் போன்று ஓர் உயிரி உயிர் வாழ்வதற்குப் பால்உந்து இன்றியமையாதது அன்று. ஆண் பெண் வளர்ச்சியின் கட்டத்திலே ஆணின் பாலுறுப்பும் பெண்ணின் கருப்பையும் (Ovary), முக்கியமான சத்துகளை–இன வளர்ச்சி சத்துகளை வெளிப்படுத்துகின்றன. இச்சத்துகளே இருபாலரிடமும் பால் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கின்றன ஒருவன் இளமைப் பருவத்தை அடைந்ததும் அவனது பால் சுரப்பிகள் முதிர்ச்சி அடைகின்றன. இப்பருவத்தில் ஆண், பெண் இரு பாலார்களிடமும் உடல் வடிவம் மாறுகிறது. பால் உறுப்புகள் முதிர்ச்சி பெறுகின்றன. இரு பாலாரிடமும் நடத்தையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு எதிர்பாலினருடன் பழகும் ஆவல் ஏற்படுகிறது. பால் சுரப்பிகள் நன்கு வளர்ச்சி பெறாவிட்டாலோ பால் சார்ந்த சுரப்பிகள் பரிசோதனைக்காக அறுவை மருத்துவ முறைப்படி அகற்றப்பட்டாலோ அவர்களிடையே பால் தொடர்புடைய நடத்தைகள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. மனிதர்களைப் பொறுத்தவரையில் பால் நடத்தை மிகவும் சிக்கலாக உள்ளது. இதற்குக் காரணம் தொன்றுதொட்டுப் பால் நடத்தை குறித்துச் சமூகம் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருப்பது தான் என்று கூறலாம்.
நாளமிலாச் சுரப்பிகள் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துகளை உடலைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் செலுத்துகின்றன. இந்தச் சத்துகள் உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த உட்சுரப்பி நீர்கள் உடலுறுப்புக்களின் இயக்கத்தை அதிகப்படுத்தவோ குறைவுபடுத்தவோ செய்கின்றன.
எல்லாச் சுரப்பிகளும் தம் சத்துகளை இரத்தத்தில் கலப்பது இல்லை. சான்றாக, கணையம் (Pancreas) என்னும் சுரப்பி அதன் சத்தைச் சீரணத்திற்குக் காரணமான குடலில் நேராகச் செலுத்துகிறது. ஆனால், அதே சுரப்பி ‘இன்சுலின்’ (Insulin) என்னும் சத்தினை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கிறது. சுரப்பிகளில் முக்கியமானவை கேடயச் சுரப்பி (Thyroid Gland), அண்ணீரகச் சுரப்பி (Adrenal Gland), பாலணுச்சுரப்பி (Gonads), அடி மூளைச் சுரப்பி (Pituitory Gland) ஆகியவையாம்.
கேடயச் சுரப்பி கழுத்துக்கு அடியில் உள்ளது. இதைக் கையினால் தடவிப் பார்த்து அறியலாம். ஆனால், இதற்குச் சேதம் ஏற்பட்டால் ஒருவனுடைய செயல்களில் விறுவிறுப்பு மிகவும் குறைகிறது. இந்த நிலைக்குக் குறைத் ‘தைராய்டியக்கம்’ (Myxodema) எனப்பெயர். இதனால், உடலிலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன; தசைகளின் இயக்கங்களிலும் மூளையின் இயக்கங்களிலும் குறைவு ஏற்படுகிறது. ஒரு சிலர் மன வளர்ச்சி குன்றியவர் போலவும் நடந்து கொள்கிறார்கள். இந்தச் சுரப்பி அதிகம் வேலை செய்யத் தொடங்கினால் முன்கோபம், கவலையில் ஆழ்தல், பிறழ்வான உளநிலை அதிக விறுவிறுப்பு போன்றவை ஏற்படும்.
அண்ணீரகம் சிறுநீரகத்திற்கு மேலே உள்ளது. இச்சுரப்பி புறணி (Cortex), அகணி (Medulla) என இருபகுதிகளைக்கொண்டது. புறணியினின்றும் வெளிப்படும் சத்துக்குக் ‘கார்ட்டின்’ (Cortin) எனப் பெயர். அகணியிலிருந்து வெளிப்படும் சத்துக்கு ‘ஆட்ரினலின்’ (Adrenalin) எனப்பெயர். ‘கார்ட்டின்’ சத்து உடலின் தசை வலிவுக்கும் இயக்கத்திற்கும் பாலியக்கத்திற்கும் முக்கியமானது. காச நோயின் காரணமாக இப்பகுதிக்குச் சேதம் ஏற்படுவது உண்டு; இதனால், ‘அடிசன் நோய்’ (Addisons Disease) ஏற்படலாம். இந்த நோயின் அறிகுறிகள் பால்உந்து இல்லாமை, உயிர்ப்பொருள் மாற்றலில்குறை, (Metabolism), தோல் கருமையாதல், தட்பவெப்ப நிலையைத் தாங்க இயலாமை, உறக்கமின்மை (Insomnia) போன்றவையாகும். இந்நோயின் காரணமாக நடத்தையிலும் பெருத்த மாறுதல்கள் ஏற்படும். இம்மாறுதல்களுள் முக்கியமானவை எளிதில் சினமடைதல், எப்பொருள்களின்மேலும் அருவருப்புக் கொள்ளுதல், பிறரோடு ஒத்துழைக்க இயலாமை போன்றவை ஆகும். இந்த உடல், உள்ளக் கோளாறுகளைக் ‘கார்ட்டின்’ சத்தினைச் செயற்கையாக உடலில் முறைப்படிச் செலுத்தி நீக்கிவிடமுடியும்.
‘ஆட்ரினலின்’ மிகவும் முக்கியமான சத்தாகும். செயற்கை முறையில் சிறிதளவு ‘ஆட்ரினலினை’ உடலில் செலுத்தினால், இதயத் துடிப்பின் வேகம் அதிகப்படும்; தசைகளுக்கும் மூளைக்கும் மிகுதியாக இரத்தம் பாயும்; ஆனால், ஈரலிலிருந்து அதிகச் சர்க்கரை வெளிப்படும். அயர்ச்சி எளிதல் ஏற்படாது. எளிதாக வியர்வை கொட்டும்; கண்விழிகள் அகலப்படும்.
பாலணுச் சுரப்பி மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் வெறும் மாறுதல்கள் ஏற்படுத்தும் ஒரு சுரப்பியாகும். இதில் உண்டாகும் சத்துகள் இன வளர்ச்சிக்கு முக்கியமான விந்தணுக்களை (Spermatozoa) ஆணிலும் அண்டத்தைப் (Ovum) பெண்ணிலும் உண்டாக்குகின்றன. இவை தவிர மற்றச் சத்துகளையும் பாலணுச் சுரப்பி உண்டாக்குகிறது. அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகும். பாலணுச் சுரப்பி வெளியிடும் சத்துகளின் வலிவு இளம்பருவத்தில் உடலிலும் உள்ளத்திலும் பலமாறுதல்களை ஏற்படுத்துகின்றது. அம்மாறுதல்களில் பால்உந்து மிகுதியானால் ‘காம வேட்கை’ மிக்கவராகின்றனர்.
அடிமூளைச் சுரப்பி (Pituitary Gland) மிகவும் இன்றியமையாத சுரப்பிகளுள் ஒன்றாகும். இச்சுரப்பி மூளையோடு நேராக இணைக்கப்பட்டுள்ளது. இதினின்றும் வெளிப்படும் சத்துகள் ‘தைராய்டு’, அண்ணீரகம், பாலணுச் சுரப்பி முதலியவை சிறந்த முறையில் இயங்குவதற்கு உதவுகின்றன. அதன் காரணமாக இதைத் ‘தலைமைச் சுரப்பி’ என்று கூறுவர். அடிமூளைச் சுரப்பியின் வெளிப்பகுதியில் உற்பத்தியாகும் சத்துகள் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்தச் சுரப்பி குழந்தைப் பருவத்தில் மிகுதியாக வேலை செய்தால், தசைகளும் நரம்புகளும் விரைவாக வளர்ந்து அளவில் பெரிதாகின்றன. இச்சுரப்பி மிகுதியாகச் சுரப்பதே ஒருவன் அளவுக்கு மீறிய உயரமாக வளர்வதற்குக் காரணமாகிறது. இதற்கு மாறாக, இச்சுரப்பி குழந்தைப் பருவத்தில் இயல்பாக வேலைசெய்யாத நிலையில் ஒருவன் வளர்ச்சி குன்றிக் குறுகிய வடிவத்தை (Midget) அடைகிறான். அடிமூளைச் சுரப்பி இயல்பாக இயங்கினால், அது முன் கூறிப்படி, மற்றச் சுரப்பிகளைத் தூண்டி ஒருவனிடத்துச் சுறுசுறுப்பையும் சிந்தனையில் தெளிவையும் தீர்மானத்தில் உறுதியையும் உண்டாக்குகிறது. இச்சுரப்பி ஏதோ கோளாற்றினால் இயல்பாக இயங்காவிடின் ஒருவன் வலிமையற்றுப் போவதோடு எளிதாகக் கோழையாகவும் எளிதில் கண்ணீர் விடுபவனாகவும் ஆகிறான். தா.எ.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 793)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/apb6rfrg/
தமிழ்“உடலியல்சார் உளவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/apb6rfrg/APA
Oliyon Research. (2026). உடலியல்சார் உளவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/apb6rfrg/MLA
"உடலியல்சார் உளவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/apb6rfrg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment