செவிப் பறை மாற்று
cevip paṟai māṟṟu
இது செவிப் பறையில் துளை விழுந்து, நடுச் செவிச் சிற்றெலும்பு சிதைந்து செவிடு ஏற்பட்டால், அக்குறைகளை நீக்கி, ஒலி கடத்தலை ஒழுங்கு செய்யத் தோல், சிரைத் தசைப் போர்வை அல்லது வேறு பொருளைப் பயன் படுத்தும் அறுவை முறையாகும்.
இது செவிப் பறையில் துளை விழுந்து, நடுச் செவிச் சிற்றெலும்பு சிதைந்து செவிடு ஏற்பட்டால், அக்குறைகளை நீக்கி, ஒலி கடத்தலை ஒழுங்கு செய்யத் தோல், சிரைத் தசைப் போர்வை அல்லது வேறு பொருளைப் பயன் படுத்தும் அறுவை முறையாகும். சில சமயம் இறந்தவர்களின் ஒட்டுறுப்பு, செவிப் பறை, சிற்றெலும்புக் கோவையை முழுதுமாக எடுத்துப் பதிப்பதும் உண்டு. செவிப் பறை, சிற்றெலும்புகள் முழுமையாக அல்லது பகுதியாக நோயால் சிதைந்திருந்தாலோ, அறுவையால் பாதிக்கப் பட்டிருந்தாலோ, மாற்று மருத்துவம் தேவைப் படுகிறது.
தொண்டை நடுச் செவிக் குழாய்கள் செயல் படாமலிருப்பதுடன், நரம்புச் செவிடும் சேர்ந்துள்ள நிலையில் மாற்று அறுவை கூடாது. மாற்று உறுப்பான தோல் அழிந்து விடுவது, ஒட்டுறுப்பு நகர்ந்து விடுவது, கேட்கும் திறன் மேலும் சீரழிவது, அழற்சி உண்டாவது, ஒவ்வாமை, தடுமன் இருப்பது ஆகியவற்றில் ஒட்டுச் சவ்வு நிலைத்து நில்லாது. எனவே, நான்கு வகை மாற்று அறுவை தேவைக்கேற்பச் செய்யப் படும்.
அறுவை முறை 1. செவிப் பறையின் நடுப் பகுதியில் துளையிருந்தால், நடுச் செவியை ஆய்ந்து, தூய்மை செய்து, செவிப் பறைத் துளையைச் சுற்றியுள்ள வெளிச் செல்களைச் சுரண்டி, பின்னர், கையின் மேல் பகுதியிலிருந்து எடுக்கப் பட்ட ஒரு துண்டுச் சிரையை வெட்டி, அதன் உள்பகுதி வெளியே தெரியுமாறு வைக்கலாம் அல்லது, காதின் பின் பகுதியிலிருந்து முழுத் தோலையும் எடுத்து வைக்கலாம். அறுவை முறை 2. மாஸ்ட்டாய்டு அறுவை முடிந்து, தூய்மை செய்த பின், காதின் பின் பக்கமிருந்து எடுக்கப் பட்ட முழுத் தோலைச் செவிப் பறை, சுத்தி, பட்டடை எலும்புகளின் மேலும் வெளிச் செவிக் குழலின் தோல் மீதும் ஒட்டும் படி வைக்கலாம்.
அறுவை முறை 3. செவிப் பறையும் சுத்தி, பட்டடை எலும்புகளும் சேதமாயிருந்தும், அங்கவடி எலும்பு அசையும் திறனுடன் இருந்தால், இம்முறை நல்லது. மாஸ்ட்டாய்டு அறுவை செய்து, எலும்பு, திசுக்களை அகற்றிய பின், ஒட்டுத் தோலை அங்கவடியின் தலைப் பகுதியிலும் வெளிச் செவிக் குழலின் தோல் பகுதியிலும் படுமாறு வைக்க வேண்டும்.
அறுவை முறை 4. அங்கவடியின் பாதம் மட்டும் நல்ல நிலையிலிருந்தால், மாஸ்ட்டாய்டு அறுவைக்குப் பின், ஒட்டுத் தோலை வட்டச் சாளரத் திரை மீது வெளிச் செவிக் குழாய்த் தோலுடன் ஒட்ட வைக்கலாம். ஒலி அலைகள், அங்கவடியின் பாதம் மீது விழும்; ஆனால் வட்டச் சாளரம் மீது விழாது.
அறுவை முறை 5. எஞ்சிய அங்கவடிப் பாதமும் அசைவற்றிருந்தால், மாஸ்ட்டாய்டு அறுவை செய்து. தூய்மைப் படுத்திய பின்பு, கிடை மட்ட அரை வட்டக் குழாயில் ஒரு சிறு துளை இட்டு, ஒட்டுத் தோலை அந்தத் துளையின் மேலும், வெளிச் செவித் தோலின் மேலும் ஒட்ட வைக்கலாம். ஒலி வழித் திருப்புதல் முறையில் ஒட்டுத் தோல் வட்ட சாளரத் திரை மீது வைக்கப் படும். தொண்டை நடுச் செவிக் குழாய் நீள் வட்டச் சாளரம் இணைந்த ஒரு காற்றறை உருவாக்கப் படும். ஒலி அலைகள் பின் பாதையாக வட்டச் சாளரம் மீது விழுந்து, நீள் வட்டச் சாளரம் வழி வெளியேறும். —டி.எம். பரமேஸ்வரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 908)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ap6vwhnf/
தமிழ்“செவிப் பறை மாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ap6vwhnf/APA
Oliyon Research. (2026). செவிப் பறை மாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ap6vwhnf/MLA
"செவிப் பறை மாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ap6vwhnf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment