செய்திக் கோட்பாட்டியல்
ceytik kōṭpāṭṭiyal
இது ஒரு வகைத் தொலை தொடர்புக் கோட்பாடு (communication theory) ஆகும்.
இது ஒரு வகைத் தொலை தொடர்புக் கோட்பாடு (communication theory) ஆகும். இது தொலைத் தொடர்பில் குறியீடு மாற்றல் (coding) கணக்கீடுகளில் பயன்படுகிறது. செய்திக் கோட்பாட்டியலின் (information theory) முதன்மையான கருத்து, கிடைக்கக் கூடிய செய்திகளில் எவ்வளவு செய்திகள் பயன் படும் வகையில் அமைந்துள்ளன என்பதாகும். செய்தி கோட்பாட்டியல், கணித அறிவியலான நிகழ் தகவைக் கொண்டு விளக்கப்படுகிறது. தொலைத் தொடர்பில் குறிப்பலைகளைப் பெறுதல், இரைச்சல் கட்டுப்பாடு, விரைவுச் செய்திகள் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.
வெவ்வேறு தொலைத் தொடர்பு அமைப்புகளை வேறுபடுத்தி அறிய, செய்திக் கோட்பாட்டியல் உதவுகிறது. 1940இல் இந்த ஒப்புமை நோக்கு ஆய்வு பயனுள்ளதாக இருந்தது. செய்தித் தொடர்புக் கம்பிகள், ரேடியோ அதிர்வெண் நிற மாலை போன்றவற்றை அறிய, பல்வேறு அமைப்புகள் கண்டறியப் பட்டன. 1920இல் தந்திப் பொறி அமைப்பின் சிக்கல்கள் நைகுயிஸ்ட், ஹார்ட்லி ஆகியோரைக் கவர்ந்தன. பின்னர், செய்திக் கோட்பாட்டியலுக்கு அடிப்படையாக ஒரு தத்துவத்தை வெளியிட்டனர். 1948இல் செனான் என்பார், செய்தி கோட்பாட்டியலை அடிப்படையாகக் கொண்டஒரு பொதுவான கொள்கையை வெளியிட்டார்.
செய்திக் கோட்பாட்டியலில், தொலைத் தொடர்பு அமைப்புகள் குறிப்பலையாக்க வீதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்புமைப்படுத்தப் படுகின்றன. குறிப்பலையாக்க வீதத்தை வரையறுப்பது சற்றுச் சிக்கலாகவே இருந்து வந்தது. பின்னர், செனான் என்பார் அளவிடப்பட்ட செய்திகளிலிருந்து குறிப்பலையாக்க வீதத்தை வரையறுத்தார். ஏற்ற முறை (optimal system) என்பது ஒரு தொகுதித் தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டது. இது பெரும் குறிப்பலையாக்க வீதத்தை அடைகிறது. தொலைத் தொடர்பு அமைப்பை உருவமைப்பதில் ஏற்ற முறை குறிப்பலையாக்க மதிப்பீட்டைத் தருகிறது. எனினும், ஏற்ற முறையைப் பயன்படுத்துதல் சற்றுச் சிக்கலானது. இது விரைவுச் செயல் முறை அமைப்புகளுக்கு மிகு நுட்பத்தை அளிக்கிறது.
தொலைத் தொடர்பு அமைப்புகள். செய்திக் கோட்பாட்டியியலின் நிலைப் புள்ளியிலிருந்து ஒரு வழித் தொடர்பு அமைப்பு வடிவமைக்கப்படுகிறது. அமைப்பை வடிவமைப்போருக்கு, மூன்று விதி முறைகள் உள்ளன.
மூலம். இது அலை பரப்பியிலிருந்து செய்திகளை அனுப்புகிறது.
இலக்கு. இது பரப்பியிலிருந்து வரும் செய்திகளைப் பெற்றுக் கொள்கிறது.
வழி (channel). இது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள குறிப்பலைகளை மூலத்திலிருந்து இலக்கிற்கு அனுப்புகிறது.
அலை செல்லும் ஊடகத்தின் தன்மையைப் பொறுத்து, அதன் தடைகள் கண்டறியப்பட்டுக் கருவிகள் உருவமைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, வானொலியை உருவமைப்பதில், கொடுக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட வானொலி அதிர்வெண் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அலைப் பரப்பியின் திறன் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்துக் கட்டுப்பாடுகளும், வழியின் விளக்கத்தைக் கொண்டே அமைகின்றன. எப்போதும் மூலத்தின் செய்திகள் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக அமைவதில்லை. பரப்பியின் இறுதியில், ஒரு துணைக் கருவி உள்ளது. இது ஒரு குறியீடு மாற்றி (encoder) ஆகும். இது செய்தி மூலங்களை உருவாக்கி, உள்ளீட்டிலிருந்து வழிக்கு அளிக்கிறது. இதே போல் ஏற்பியின் இறுதியில், ஒரு குறியீடு மாற்றி (decoder) இணைக்கப் பட்டுள்ளது. இது வெளியீட்டு வழியை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மாற்றுகிறது. இரண்டு குறியீடு மாற்றிகளும் துணைக் கருவிகள் ஆகும்.
தொடர், தொடர்ச்சியற்ற நிகழ்ச்சிகள். மூலம் தொடர்ச்சியற்று இருக்கும் போது, செய்திகள் வரிசையான பகுதிகளைக் கொண்டிருக்கும். மூலங்கள் முழு எண் செய்திக் கூறுகளை உருவாக்குவது தொடர்ச்சியற்றது ஆகும். ஏனைய மூலங்கள் தொடர்ச்சியானவை ஆகும். (எ-டு. பேசுதல், இசை மூலங்கள்). எவ்வகைக் குறிப்பலைகளைப் பரப்புகின்றன என்பதைப் பொறுத்து, வழி தொடர்ச்சியானவை என்றும், தொடர்ச்சியற்றவை என்றும் வகைப்படுத்தப் படுகிறது. பல்வேறு அலை பரவும் ஊடகம் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. துடிப்பு முறையைக் (pulse techniques) கொண்டு, இதைத் தொடர்ச்சியற்ற வழியாக மாற்றலாம். தொடர் நிகழ்ச்சிகள், சில நேரங்களில் குறிப்பலையின் குறிப்பிட்ட பட்டை அகலத்தைக் கொண்டுள்ளன. இதை, தொடர்ச்சியற்ற எண்களாக மாற்ற இயலும்.
குறியீடு அல்லது செய்திக் கூறு மாற்றல். முதலில் ஒரு வகைக் குறியீடு மாற்றி செய்திகளைப் பல வரிசையான அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கும். அடுத்து, ஒவ்வொரு பகுதிக்குரிய உள்ளீட்டிற்கு ஏற்றவாறும் பிரதியிடும். இவ்வகைக் குறியீடு மாற்றி, பகுதிக் குறியீடு மாற்றி எனப் படுகிறது. எடுத்துக் காட்டாகத் தந்திப் பொறியில், பகுதிக் குறியீடு மாற்றி பயன்படுகிறது (ஒவ்வொரு பகுதியையும் தனிக் குறியீடுகள் குறிக்கின்றன). இரைச்சல் வழியால் (noisy channel) பெறப்படும் செய்திகளைக் குறியீடு மாற்றம் செய்ய முடிவதில்லை. வழி இரு வகையான துடிப்புகளைப் பரப்புகிறது. இரு நிலை இலக்கங்கள் (binary digit) 0, 1 என்பன இரு வகைத் துடிப்புகளைக் குறிக்கின்றன.
மூலம் A, B, C, D என்னும் நான்கு எழுத்துகளில் குறிக்கப்படுகின்றது. ஒவ்வொரு தனி எழுத்தையும், இரண்டு இரு நிலை இலக்கமாகக் குறியீடு மாற்றம் செய்ய முடியும் (குறியீடு 1). குறியீடு மாற்றியில், ஒவ்வொரு நேரத்திலும் இரைச்சலின் காரணமாகப் பிழைகள் உண்டாக்கப்படும். இப்பிழைகள் குறியீடு IIஆல் குறிக்கப்படும். இவை மூன்று இலக்கங்களைக் கொண்டவை. குறியீடு II ஒற்றைப் பிழைக் கண்டறிதலையும், குறியீடு III இரட்டைப் பிழைக் கண்டறிதலையும் குறிப்பிடுகின்றன.
ஓர் இரைச்சலற்ற இரு நிலை வழி (binary channel) பின் வருமாறு குறிக்கப் படுகிறது. ஓர் எளிய குறியீடு மாற்றல் 27 வெவ்வேறு ஐந்து இலக்கக் குறியீடுகளைக் கொண்டது. சொல் இடைவெளியின் (word space) குறியீடு # ஆகும். இவை #, A, B, C, …… Z; அதாவது # 00000, A 00001, В 00010, C 00011, …… Z 11011. சொல் # CAB என்பது 00000000110000100010 எனக் குறியீடு மாற்றம் செய்யப் படுகிறது. இதே முறை தந்திப் பதிவுச் செலுத்துகையில் (teletype transmission) பயன் படுகிறது.
இரு நிலைச் சமச் சீர்மை வழி (binary symmetric channel). இரு சமமான இரு நிலை மூலங்களைக் கருதினால். ஒவ்வொரு குறியீடு பரவுவதற்கான நிகழ் தகவு p, அதற்கு மாறான நிகழ் தகவு q = 1-p ஆகும்.
மூலத்தின் இயல்பாற்றல் (entropy) H, வழியின் திறன் (capacity) C ஆகும். இரைச்சல் இருக்கும் போது, C இன் மதிப்பு H ஐ விடச் சிறியது ஆகும். C = 1 + p \log p + q \log q (எ-டு: ஒரு முறை பெறப்படும் பிழைகள் 64 எனில், திறன் \begin{align} C = 1 + 63/64 \log 63/64 + 1/64 \log 1/64 \\ = 1 - 0.116 = 0.884 \end{align} இரைச்சல் இல்லாத நிலையில், இதன் திறன் 88% ஆகக் குறைகிறது. —பெ. துரைசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 771)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ap54tevx/
தமிழ்“செய்திக் கோட்பாட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ap54tevx/APA
Oliyon Research. (2026). செய்திக் கோட்பாட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ap54tevx/MLA
"செய்திக் கோட்பாட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ap54tevx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment