இரேணுகை
irēṇukai
இரேணுவின் மகள். இவளை வருமராசன் பெண் எனவும் கூறுவர்.
இரேணுவின் மகள். இவளை வருமராசன் பெண் எனவும் கூறுவர். இவள் சமதக்கினி முனிவரின் மனைவி. இவள் கங்கைக்கு நீராடச் செல்லும்போது, வான்வழிச் சென்ற சித்திரசேனன் என்ற கந்தருவன் வடிவினை நீரில் கண்டு மனம் குலைந்து நிற்ப, அதனை முனிவர் அறிந்து, தம் மகன் பரசுராமனை நோக்கி அவளைக் கொலை செய்யுமாறு பணித்தார். அவனும் தந்தை சொன்னவாறு தாயைக் கொன்று மனம் கவன்றிருந்தான். தந்தை மகன் கவலையைப் போக்க, அவன் வேண்டும் வரம் தர முன்வந்தார். அவ்வரத்தால், தாயைக் கொல்ல மறுத்தமையால், தந்தையின் சாபம் பெற்று ஒறுக்கப் பெற்றிருந்த தன் தமையன்மார்களை மீட்டுத் தாயை உயிரெழுப்பியதோடு, தன்னை மகன் கொன்றான் என்ற உணர்வு அவளுக்கு இல்லாதிருக்குமாறும் செய்தான்.
இரேணுகை மகன் பரசுராமன் கார்த்த வீரியார்ச்சுனனைக் கொன்றான். எனவே கார்த்த வீரியார்ச்சுனன் மக்கள் சமதக்கினியைக் கொன்றனர். இதைக்கண்டு இரேணுகை அங்கே வர, அவர்கள் அவளையும் இருபத்தோர் அடி அடித்து, குற்றுயிராக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அவள் தன் மகன் பரசுராமன் வருமளவும் உயிர்விடாதிருந்து, நடந்தது கூறி இறந்தனள், தாய் இருபத்தொரு முறை சத்திரிய அரசன் மக்களால் அடியுண்டதால் இருபத்தோர் அரசுவழி முறைகளைக் கொன்று, அவர்தம் குருதியைக் குளமாகத் தேக்கி, அதில் இருபத்தொரு முறை மூழ்கிப் பெற்றோர்க்கு நீத்தார்கடன் செய்தான். நீத்தார்கடன் செய்து கொண்டிருந்த ஐந்தாம் நாள் ஒரு புலியைக் கனவில் கண்டு அஞ்சி, ‘அம்மா அம்மா’ என்று அலறினான். எனவே அக்கடன் முற்றுப் பெறாததால் தாய் தலை மட்டுமுடையவளாக வெளிப்பட்டாள். அது கண்ட பரசுராமன் தத்தாத்திரேயர் என்ற முனிவரிடம் உடலின்றித் தலையளவில் தாய் வெளிப்பட்ட காரணம் கேட்டபோது, அவர் கருமம் முற்றுப்பெறாத நிலையில் அழைத்ததால் உனது தாய் தலையளவில் வெளிப்பட்டாள் என்று அவர் கூறினார். பரசுராமன் அம்முனிவர் வழிப்படுத்திய வண்ணம் கடன் முடித்தான். பின்னர் அம்முனிவர் இரேணுகையைக் கிராமங்கட்குச் சென்று, அங்குள்ளோர் துன்பங்களை நீக்கித் தலையளவிலேயே தெய்வமாயிருக்கும்படி பணித்தார். அவளும் அவ்வாறே தெய்வமானாள். கிராமங்களில் மாரி, முத்துமாரி என்னும் பெயர்களில் அமைந்து, அம்மை நோய் முதலியன தீர்த்து விளங்கும் சிறுதெய்வமாகக் கருதப்படுவது இத்தெய்வமேயாகும் என்று கூறப்படுகிறது. கு.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 251)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/any7k69w/
தமிழ்“இரேணுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/any7k69w/APA
Oliyon Research. (2026). இரேணுகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/any7k69w/MLA
"இரேணுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/any7k69w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment