உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்
uṇmaic cottu mutalīṭu niti niṟuvaṉaṅkaḷ
சொத்துகள், அடைமானங்கள் ஆகியவற்றைச் சிறு முதலீட்டார் முதலீடு செய்ய வகை செய்யும் நிதி நிறுவனங்கள் ஆகும்.
சொத்துகள், அடைமானங்கள் ஆகியவற்றைச் சிறு முதலீட்டார் முதலீடு செய்ய வகை செய்யும் நிதி நிறுவனங்கள் ஆகும். இதில் பங்கு பெறும் சிறு முதலீட்டாருக்கு இந்நிறுவனங்களின் மேலாண்மைப் பொறுப்பில் அடங்கும் சொத்துக்களின் (Assets) ஆதாயத்தில் பங்குரிமை அளிக்கப்படும். பல நாடுகளில் இத்தகைய நிறுவனங்கள் செயற்படினும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் (U.S.A.) இவை தனித் தன்மையுடன் பரவலாகச் செயற்படுகின்றன.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள் இருவகைப்படும். அவையாவன: 1. குறுகிய கால அடைமானங்களை முதலீடு செய்யும் அடைமான நிதி நிறுவனங்கள். இவை சிறப்பாகக் கட்டடப் பணிகள், திட்டங்கள், முன்னேற்றப் பணிகள் போன்றவற்றிற்குக் கடனுதவி அளிக்கின்றன. கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது அவற்றிற்குத் தேவையான பணத்தை முன்பணமாக (Advance) அளிக்கின்றன. அக்கட்டடப் பணி முடிவடைந்த பின்னர், கடன் அளிப்போர் ஒருவர் அக்கட்டடத்தை நீண்டகால அடைமானமாக எடுத்துக் கடனைத் தீர்த்துவிடுவார். 2. அறநிதி நிறுவனங்கள் (Equity Trusts); இவை நேரடியாக உண்மைச் சொத்துகளுக்கு நிதி உதவிகளை அளிக்கின்றன. இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான உண்மைச் சொத்துகள் வருவாய் ஈட்டும் சொத்துகளாயிருக்கும்.
உண்மைச் சொத்துகளைப் பிணையங்களாகக் கொண்டு செயற்படும் வாணிக நிதி நடவடிக்கை பலவற்றுள், உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்களின் (Real Estate Investment Trusts) நடவடிக்கை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை உண்மைச் சொத்துக்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளவும், அவற்றிலிருந்து வருவாய் ஈட்டவும், வரையறுத்த பங்குதாரர்களுடன் (Limited Partnership) செயற்படவும், நிலையான வருவாயுடைய பிணைய அடைமானங்களைப் (Fixed Income Mortgage Securities) பெறவும் வழி வகுக்கின்றன. மிகக் குறைந்த செல்வம் (Wealth) உள்ளவர்களும் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். ஓய்வூதிய நிதியை (Pension Fund) நிருவகிக்கும் மேலாண்மையினர் இந்நிறுவனங்களின் உண்மைச் சொத்தில் முதலீடு செய்வதால் குறைந்த செலவில் தனி நிதியியல் நுட்பப் பயிற்சி பெற்ற பணியாளர்களை அமர்த்தி, தங்கம் நிதியைப் பன்முகப்படுத்தப்பட்ட (Diversified) முதலீட்டுக்குப் பயன்படுத்துகின்றனர்.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தனிச் சிறப்பியல்புகளாவன: 1. அங்காடியின் பண நீர்மைத் தன்மை அன்றாடம் பகுத்தாராயப்பட்டு அவற்றின் அடிப்படையில் பங்குகளின் மதிப்பு சீர்தூக்கப்படுவதால், பங்குகளின் விலை செலவற்ற வகையில் வரையறுக்கப்படுகின்றது. 2. நிருவாகச் செலவு பங்கீட்டு முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதால், மேலாண்மை நிருவாகம் சிறந்த முறையில் நடைபெறுகிறது. 3. குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வகைக் கால தாமதமுமின்றித் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. 4. நடவடிக்கைகள், பணிகள், நிதிநிலை ஆகியவை அவ்வந்நாட்டுப் பொது நிதி அங்காடிச் சட்ட ஒழுங்குகளுக்குட்பட்டு, அரசின் நிதி முகவர்களால் அவ்வப்போது தணிக்கை செய்யப்பட்டு நற்சான்றளிக்கப்படுகிறது. இதனால், நொடிப்பு நிலை (Bankruptcy) ஏற்படாதவாறு பாதுகாக்கப்படுகிறது.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள் குறுகிய காலக் கடன் வசதிகளையே பெரும்பாலும் அளித்து வருகின்றன. எனினும், இக்காலத்தில் நீண்ட காலக் கடன்களையும் இவை வழங்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் வட்டிவீதம் வணிக வங்கிகளின் வட்டிவீதத்தை ஒத்ததாக உள்ளது. அமெரிக்காவின் கட்டடத் தொழிற்றுறையில் இவை தனிச் சிறப்பும் பெற்று விளங்குகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 844)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/am4gdjw4/
தமிழ்“உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/am4gdjw4/APA
Oliyon Research. (2026). உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/am4gdjw4/MLA
"உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/am4gdjw4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment