சிவபெருமான் மூச்சுக்காற்றாகக் கருதப்படும் வேத இதிகாச புராணங்களுள் காந்த மகாபுராணத்தின் உபபுராணங்களாகப் போற்றப்படுவன பல உள. அவற்றுள் உபமன்யு பக்த விலாசம் என்னும் புராணமும் ஒன்று. இப்புராணத்திற்கு மூலம் ‘சிவரகசியம்’ என்னும் பேரிதிகாசமாகும். இராமாயணம், பாரதம் என்பன மனித தருமங்களை மட்டும் கூறுவன. இச்சிவரகசியம் இறைவனுடைய மறைபொருளை உபநிடதத்தின் உட்கருத்துகளை உரைக்கிறது. இது பன்னிரண்டு பகுதிகளையும் ஏறத்தாழ 125000 கிரந்தங்களையுமுடைய நூலாகும். இதில் 9–ஆம் பகுதியில் 18–ஆவது முதல் 66–ஆவது வரையுள்ள அத்தியாயங்களில் 63 நாயன்மார்களுடைய சரித்திரம் கூறப்பட்டுள்ளது. இதில் திருஞானசம்பந்தர் முதலான சைவ சமயாச்சாரியர்களின் வரலாறுகள் மிக விரிவாக அவர்கள் கண்டுவழிபட்ட தலங்களுடனும், அவ்வத்தல மூர்த்திகளின் தோத்திரங்களுடனும் கூறப்பட்டுள்ளன. மற்றவர்களின் வரலாறுகள் விரிவாகக் கூறப்படவில்லை. பெரியார் சிலரது வரலாறு சிவரகசியத்தைக் காட்டிலும் இவ் உபமன்யு பக்த விலாசத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நூல் மூன்று பாகங்கள் கொண்டு விளங்குகிறது. முதல் பாகத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் முதல் நமிநந்தி அடிகள் வரை உள்ள வரலாறுகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் திருஞானசம்பந்தர் வரலாறு மட்டுமே அமைந்துள்ளது. மூன்றாம் பாகத்தில் கலிக்காம நாயனார் முதல் இசை ஞானியார் வரை உள்ள வரலாறுகள் உள்ளன. அப்பாலும் அடிசார்ந்தார் முதல் இசைஞானியார்வரை உள்ள 8 அடியார்களின் வரலாறுகள் சிவரகசியத்தில் கூறப்பட்டிருப்பதை விட இந்த உபமன்யு பக்த விலாசத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இதைப் போல அகத்திய முனிவரால் இயற்றப் பெற்ற மற்றொரு பக்த விலாசமும் உண்டு. இவ்விரண்டினும் வரலாறுகள் ஒத்திருந்தாலும் பல நிகழ்ச்சிகள் வேறுபட்டுள்ளன. உபமன்யு பக்த விலாசத்தை எழுதியவர் உபமன்யு என்ற முனிவர். இவர் வியாக்கிரபாதரின் மகன் ஆவார்; ஈசனின் அருளால் பாற்கடலின் பாலை உண்டு வளர்ந்தவர்; கிருட்டிணணுக்குச் சிவதீட்சை அருளியவர். இவருடைய பெருமை பாரதம் முதலான இதிகாசங்களில் பேசப்பட்டுள்ளது.