உய்ந்தபிள்ளை
uyntapiḷḷai
இவர் இராமானுசர் காலத்தில் வாழ்ந்தவர்.
இவர் இராமானுசர் காலத்தில் வாழ்ந்தவர். இவரது பெயர் உஞ்சப் பிள்ளை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவர் ஆடற்கலையில் வல்லவர்; திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் கருத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு மெய்ப்பாடு காட்டி ஆடியவர். இவரைப் பற்றிய குறிப்புப் பெரியவாச்சான்பிள்ளை உரையில் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ‘என்னை வருக எனக் குறித்திட்டு’ என்னும் பெருமாள் திருமொழி தலைமகளின் ஊடலைத் தெரிவிக்கும் பாசுரம். இதன் ஈற்றடி ‘இன்னமென் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே’ என்பதாகும். இதற்கு உய்ந்த பிள்ளை தலைமகள் பெருமானைக் காலாலே உதைப்பதாகவும், கையாலே தள்ளுவதாகவும் மெய்ப்பாடு பிடித்தார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எம்பார் என்னும் ஆசாரியப் பெருமகனார், ‘கெடுவாய்! அப்படித் தலைமகள் செய்தாளாகில் அவனுக்குப் பொல்லாதவையாகுமோ? அவன் நெடுநாள் வேண்டிக் கிடந்தவையல்லவா அவை! அவனுக்கு அவையன்றோ தேட்டமானவை!’ என்று சொல்லி எப்படி ஆட வேண்டும் என்பதனைத் தம் கையையிட்டு முகத்தை மறைத்துத் திரிய வைத்துக் (திருப்பிக் கொண்டு) காட்டினாராம். மற்றொரு குறிப்பு ‘மெய்ச்சூது சங்கம் இடந்தான்’ என்னும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை இவர் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டும்போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. இப்பாட்டில், ‘அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்’ என்னும் அடியில் ‘அத்தூதன்’ என்பதற்குப் பெருமானைக் காட்டியும், ‘அப்பூச்சி’ என்பதற்குக் கண்ணை இறுத்துக் கொண்டும் வந்து மெய்ப்பாடு காட்டினார். இவ்வாட்டத்தினை இராமானுசருக்குப் பின்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எம்பார், ‘அப்பூச்சி’ என்பதற்குத் திருக்கைகளைத் திருத்தோளோடு சேர்த்துத் திருவாழி, திருச்சங்கு என்ற பாவனையில் ஆட வேண்டும் என்று குறிப்புக் காட்டினார். உய்ந்த பிள்ளை எம்பாரது குறிப்பினை ஏற்றுத் தம் ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். இம்மாற்றத்தினைக் கண்ட இராமானுசர் அதன் காரணத்தை அறியச் சுற்றிலும் பார்த்து, அங்கு எம்பார் இருப்பதனைக் கண்டு, ‘கோவிந்தப் பெருமாள் இருந்தீரோ?’ என்று கூறினாராம்.
திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் கருத்தினையும் உணர்ச்சியினையும் புலப்படும்வண்ணம் மெய்ப்பாடு காட்டி ஆடுவதற்கு அரையர் சேவை என்பது பெயர். அதனை ‘அரையர்’ என்னும் பட்டப் பெயர் கொண்டவர்களேயன்றி, உய்ந்த பிள்ளை போன்று அப்பட்டப்பெயர் இல்லாதவர்களும் செய்துள்ளனர் என்பது இவரது வரலாற்றால் அறிய முடிகிறது. தெ.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 949)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajcsxevn/
தமிழ்“உய்ந்தபிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ajcsxevn/APA
Oliyon Research. (2026). உய்ந்தபிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ajcsxevn/MLA
"உய்ந்தபிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ajcsxevn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment