அகசுடசு சீசர்
akacuṭacu cīcar
உரோமானியப் பேரரசின் முதல் பேரரசர் ஆவர்.
உரோமானியப் பேரரசின் முதல் பேரரசர் ஆவர். இவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. இவரது பிள்ளைப் பெயர் கேயசு அக்டேவியசு என்பதாகும். சூலியசு சீசர் (Julius Caesar) இவரை ஏற்புமகனாக எடுத்துக் கொண்டபோது இவர் கேயசு சூலியசு சீசர் அக்டோவியசு என அழைக்கப்பட்டார். இது இவரது இரண்டாம் பெயர். மூன்றாம் பெயர் பேரரசர் சீசர் அகசுடசு (Augustus Caesar) என்பதாகும். இவர் பேரரசராக கி.மு. 27-ஆம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார்.
அகசுடசு சீசரின் செல்வாக்கு பரந்து விரிந்தது. இவரது புகழ் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரி பெரும் புகழை ஈட்டியது. எனவே, இவரது காலத்தை ‘அகசுடசின் காலம்’ என்பர் வரலாற்றாசிரியர். இக்காலம் உரோமானிய இலக்கியத்திற்கும் கட்டடக் கலைக்கும் பொற்காலம் ஆகும். வர்சில் (Vergil), ஓராசு (Horace), ஒவிட் (Ovid), லிவி (Livy) போன்ற தலைசிறந்த எழுத்தாளர்கள் இவர் காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்களது பணிக்குப் பேரரசர் அகசுடசு பேராதரவு அளித்தார். அகசுடகம் ஒரு சிறந்த எழுத்தாளராவார்.
அகசுடசின் ஆட்சிக் காலத்தில் உரோமாபுரியில் பல்வேறு சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், கட்டடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. “உரோமாபுரியைச் செங்கற்களால் பார்த்தேன்; அங்குப் பளிங்குக் கற்களை விட்டுச் சென்றேன்” என்று பெருமிதத்துடன் இவர் கூறிக்கொண்டார். சூலியசு சீசரால் கட்டி முடிக்கப் பெறாது விடப்பட்டிருந்த கட்டடங்களைக் கட்டி முடித்ததுடன், பல்வேறு புதிய கட்டடங்களையும் கட்டினார். இவற்றுள் 82 கோயில்கள் அடங்கும். சிற்பக் கலைஞர்கள் அழகிய பல பணிகளை முதல் தரமான பாணியில் உருவாக்கினார்கள்.
சீசர் காலமானதும் உரோமாபுரியை அந்தோனி (Antony) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். ஆனால் அக்டேவியசு படையொன்றைத் திரட்டி வட இத்தாலியில் கி.மு. 43-ஆம் ஆண்டு அந்தோனியைத் தோற்கடித்தார். அக்டேவியசு, செனட் அவையை வற்புறுத்தி உரோமாபுரி அரசாங்கத்தின் தலைவராகத் தம்மைத் தேர்ந்தெடுக்கும்படி செய்தார். பின்னர், அக்டேவியசும் அந்தோனியும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து மூன்றாம் உறுப்பினராக அக்மிலியசு லெபிடசு என்னும் உரோமானியப் படைத்தலைவரையும் சேர்த்து, மூவர் கூட்டினை அமைத்துக் கொண்டனர். இதனை இரண்டாம் மூவர் கூட்டணி என்பர். இக்கூட்டணியினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகைவர்களைக் கொன்றனர்; அவ்வாறு கொல்லப்பட்டவர்களுள் சிசரோவும் ஒருவர்; அவர் அக்டேவியசின் நண்பர்; ஆனால் அவரை மார்க்கு அந்தோனி (Mark Antony) வெறுத்தார். சீசரைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்த புரூட்டசையும் (Brutus) காசியசையும் (Cassius) அவர்களுக்கு எதிராகப் படை திரட்டி, அக்டேவியசும் அந்தோனியும் எதிர்த்தனர். அந்தோனியின் திறமையின் விளைவாக அவர்கள் அக்கொலையாளிகளை கி.மு. 42-ஆம் ஆண்டு மாசிடோனியாவில் பிலிப்பி என்னுமிடத்தில் தோற்கடித்தனர். பேரரசில் மேலை மாநிலங்களுக்கு அக்டேவியசும், கீழைமாநிலங்களுக்கு அந்தோனியும் அரசர்களாயினர், திறமையற்றவரான லெபிடசு (Lepidus) ஆப்பிரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் விரைவில் அக்டேவியசு அவரைப் பதவியிலிருந்து விலக்கினார். அவர்களின் மற்றொரு பகைவரான இளைய பாம்பெ (Pompeii) என்பார் சிசிலியைக் கைப்பற்றியிருந்தார். ஆனால் கி.மு.36–ஆம் ஆண்டில் பாம்பெயை மார்க்கசு அக்கிரிப்பா என்பார் தோற்கடித்தார். அக்கிரிப்பா அக்டேவியசின் தளபதியும் சிறந்த அறிவுரையாளருமாவார்.
அக்டேவியசின் சகோதரி அக்டேவியா (Octavia) என்பவளை கி.மு. 40–இல் அந்தோனி மணந்து கொண்டார். ஆனால் எகிப்திய அரசி கிளியோபாத்திரா என்பாள்மீது மையல் கொண்ட அந்தோனி, பின்னர் அக்டேவியாவைக் கைவிட்டார். உரோமானியர் கிளியோபாத்திராவை வெறுத்தனர். உரோமானிய மாநிலங்களை அந்தோனி, கிளியோபாத்திராவுக்குப் பிறந்த தம் மக்களுக்குக் கொடுத்த போது அந்தோனிக்கும் கிளியோபாத்திராவுக்கும் எதிராக அக்டேவியசு போர் தொடுத்தார். அக்டேவியசின் தளபதியான அக்கிரிப்பா, அந்தோனியையும் கிளியோபாத்திராவையும் ஆக்சியம் என்னுமிடத்தில் நடந்த கடற்போரில் கி.மு. 31-இல் தோற்கடித்தார். ஆக்சியம் கிரீசின் மேற்குக் கரையிலுள்ளது. ஓராண்டுக்குள் அந்தோனியும் கிளியோபாத்திராவும் தற்கொலை செய்து கொண்டனர்.
அக்டேவியசு முடியாட்சியை கி.மு. 27-இல் நிலை நாட்டினார். செனட் அவை, அக்டேவியசுக்கு அகசுடசு என்னும் பட்டப் பெயர் கொடுக்கத் தீர்மானித்தது. சமயம், உள்துறை, படைத் தொடர்பான செயல்கள் போன்றவற்றைக் கவனிக்க அவருக்குச் சட்டப்படியான அதிகாரத்தைக் கொடுத்ததுடன், செனட் அவையும் அவருக்கு ஆலோசனைக் குழுவாக இருக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.
உரோமானியப் பேரரசில் வாழ்ந்த மக்கள் அகசுடசைத் தெய்வம் என வழிபட்டனர். அவருடைய கல்லறையின் அழிவுச் சின்னத்தையும் அவர் கட்டிய கட்டடங்கள் பலவற்றின் சின்னங்களையும் இன்றும் உரோமாபுரியில் காணலாம்.
அகசுடசின் சாதனைகள்
நூறாண்டுகள் உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்பட்டிருந்த உரோமானியப் பேரரசில் அக்டேவியசு, அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டினார். நாட்டில் நேர்மையான அரசாங்கம், நன்னிலையில் செலாவணியான நாணயமுறை, மாநிலங்களுக்கிடையே தடையிலா வாணிகம் போன்றவற்றைப் பேணிக் காத்தார். திறமை வாய்ந்த அஞ்சல்துறை, துறைமுகங்களின் வளர்ச்சி, குடியேற்ற நாடுகளை அமைத்தல் போன்றவற்றையும் அவர் முன்னேற்றமடையச் செய்தார். நாடு நெடுகிலும் சீரான நெடுஞ்சாலைகளை அமைத்துத் தொலைவிலிருந்த பேரரசுப் பகுதிகளை உரோமாபுரியுடன் இணைத்தார்.
அமைதி நிலவிய மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பைச் செனட் அவையிடம் ஒப்படைத்து, அமைதியற்ற மாநிலங்களின் பொறுப்பைத் தம்மிடம் அகசுடசு வைத்துக்கொண்டார். அதற்காக இவர் நிலையான படையொன்றையும் வைத்திருந்தார். மத்தியதரைக் கடலில் நிலையான கப்பற் படையொன்றையும் நிறுவினார். பேரரசரைக் காத்து நிற்கச் சிறிய மெய்க்காவலர் படையொன்றையும் இவர் உரோமாபுரியில் வைத்திருந்தார்.
அகசுடசு சீசர்
விரிந்த பேரரசு
அகசுடசு உரோமானியப் பேரரசை ஓரளவு விரிவடையச் செய்தார். ஆயினும் இவர் அமைதியிலேயே மிகுந்த நாட்டம் கொண்டார். தேவைப்பட்டபோது மட்டுமே இவர் போரில் ஈடுபட்டார். இவருடைய படைத்தலைவர்களான அக்கிரிப்பாவும் தைபீரியசும் இசுபெயின் (Spain), கால் (Gaul) (இன்றைய பிரான்சு), பன்னோனியா (Pannonia) தால்மேசியா (Talmasia) (இன்றைய அங்கேரி, யூகோசுலேவியாவின் பகுதிகள்) போன்றவற்றை வென்றார்கள். அகசுடசு எகிப்தைப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இசுபெயின், கால், தான்யூப் ஆறு வரையிலிருந்த தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளை அமைதிப்படுத்தினார். இவருடைய படையைச் செருமானியர் கி.பி. 9-ஆம் ஆண்டில் ‘நியூடோபார்க்குக் காடுகள்’ என்னுமிடத்தில் அழித்தனர். அதன் விளைவாக உரோமானியரின் எல்லைப்புறம் எல்ப் (Elbe) ஆற்றிலிருந்து இரைன் (Rhine) ஆற்றுக்குப் பின்னால் தள்ளப்பட்டது.
அகசுடசு பதட்டப்படாமல் எதனையும் ஆழ்ந்து செய்யும் அரசியல் வல்லுநர், பொது மக்களின், அன்பைப்பெறும் கலை இவருக்குக் கைவந்த ஒன்று. இவர் கி.பி. 14-ஆம் ஆண்டில் காலமானார்.
இலக்கியம்
உரோமானிய இலக்கியம் இவருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற வளர்ச்சி பெற்றிருந்தது. அகசுடசின் கருத்தறிந்துதான் வர்சில் (Virgil) ‘ஈனியாது’ (Aeneid) என்னும் நூலை எழுதினார். ஓராசு (Horace) என்பார் சமயச் சார்பில்லாக் கவிதைகளைத் தொகுத்தார். ஓவிது, காதல் கவிதைகளை எழுதிப் பிறன்மனை விழைதல் தகாதது என்று கூறியபோது உரோமாபுரியிலிருந்து விரட்டப்பட்டார். அவரைப்போன்றே காசியசு (Cassius) சர்விரசு (Serverus) என்பாரும் தாம் எழுதிய இலக்கியங்களுக் காக நாடுகடத்தப்பட்டனர்.
இறுதிக்காலம்
தமது வாரிசாக வரத் தகுதி படைத்த ஒருவரைத் தேடி அலைந்தும் அகசுடசு வெற்றி பெறவில்லை. சொந்த மகன் இல்லாத காரணத்தால் அககடசு தம் நெருங்கிய உறவினரான மார்செலசு என்பாரையும் தம் நண்பர் அக்கிரிப்பாவையும், பின்னர்த் தம் பேரர்கள் கேயசு (Gaius), இலூசியசு (Lucius) என்பாரையும் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர்கள் அனைவரும் இவர் காலமாவதற்கு முன்னரே மாண்டனர். இறுதியாக, கி.பி.4-ஆம் ஆண்டில் இவருடைய ஒன்றுவிட்ட மகனாகக் கருதப் பெற்ற தைபீரியசு (Tiberius) என்பாரை வேண்டா வெறுப்போடு தம் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். இவருடைய மகளும் பேத்தியும் கற்பிழப்புக் குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டனர், சொல்லொணாத்துயருற்ற அகசுடசு தம் இறுதி ஆண்டுகளில் கொடுங்கோலராய் மாறினார்; தேர்தல்களை முறைகேடாகக் கட்டுப்படுத்தினார்; நாட்டில் பல்வேறு தடைச் சட்டங்களைச் செயல்படுத்தினார்; தவறான செயல்களைப் புரியத் தம் வாரிசுகளுக்கு வழிகாட்டினார்.
அகசுடசின் ஆட்சி வல்லாட்சிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் அவர் உரோமானியப் பேரரசின் வளர்ச்சிக்குப் புரிந்த பெருஞ்செயல்கள் அவருடைய குறைகளைவிடச் சிறப்பானவை. இருநூறாண்டுகள் உரோமானியப் பேரரசில் அமைதி நிலவியமைக்கு அகசுடசின் ஆட்சியே மூல காரணம் எனில் மிகையாகாது. அவர் தம் 76–ஆம் ஆண்டில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 67)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aj3fvmp4/
தமிழ்“அகசுடசு சீசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aj3fvmp4/APA
Oliyon Research. (2026). அகசுடசு சீசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aj3fvmp4/MLA
"அகசுடசு சீசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aj3fvmp4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment