பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவது கடினமான செயலாகும். நூல் புழுக்களை அறவே அழிக்க இயலாவிடினும், அவற்றால் விளையும் பேரிழப்பை ஓரளவு குறைக்க இயலும். மண்ணின் ஈரம், வெப்பம், மண்ணின் கூறு, பருவ நிலைகளைப் பொறுத்து, நூல் புழுக்களின் எண்ணிக்கை மாறும். நூற்புழுக்களைக் கீழ்க் காணும் பல முறைகளில் கட்டுப் படுத்தலாம். உழவியல் முறை. இம்முறை சிக்கனமும், எளிமையும் கொண்டது. நூல் புழுக் கொல்லிகளை விடக் குறைந்த அளவிலேயே, இம்முறையில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த இயலும். நூல் புழுக் கண்காணிப்பு. மண்ணில் உள்ள நூல் புழுக்களை நன்கறிந்து, மண்ணை மிகுந்த அளவு, மித அளவு, குறைந்த அளவு, நூல் புழுக்கள் கொண்டவை எனப் பிரித்தறிய வேண்டும். உருளைக் கிழங்கின் பொன்னிற நூல் புழுக்கள் மிகக் குறைவாக உள்ள நிலங்களில், உருளைக் கிழங்கைப் பயிர் செய்யலாம். கோடையில் 5–7 முறை உழவு செய்தும், வயல்களில் பயிரிடாமலும் தவிர்ப்பதால், வேர் முடிச்சு நூல் புழுக்கள் பெருகா வண்ணம் தடுக்கலாம். வயல்களில் உள்ள களைகள், கட்டைப் பயிர்கள், பயிரிடாப் பருவத்தில் தோன்றும் பயிர்களைக் களைந்து அழித்தல் இன்றியமையாதது. கோடை உழவு செய்வதால், தானியப் பயிர்களில் உற்பத்தியாகும் முட்டை வடிவ நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். கட்டைப் பயிர்களை அழிப்பதால், நெல்லில் தோன்றும் யூஃப்ரா நோயைக் கட்டுப் படுத்தலாம். களைகளை நீக்குவதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களான மெலாய்–டோகைன், இன்காகினிட்டா, மெ.ஜவானிக்கா, துளைத்துச் செல்லும் நூல் புழுக்களான ரோடா பெலணுசிமிலிஸ், ரோடிலென்குலஸ் ரெனிபாமிஸ் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம். பயிர்ச் சுழற்சி. நூல் புழு தாக்காத பொருளாதாரப் பயிர்களைப் பயிரிடுவதால், நூல் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம். நூல் புழுக்களின் எண்ணிக்கையும், பொருளாதார அழிவிற்குக் கீழே இருக்கும். சான்றாக, மேலை நாடுகளில், உருளைக் கிழங்கை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடுவதால், பொன்னிற நூல் புழுக்களின் தாக்கம் காணப் படுவதில்லை. ஏனைய காலங்களில், உருளைக் கிழங்கைத் தவிர, ஏனைய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுகின்றனர். கோதுமைப் பயிரில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, நூற்புழுக்கள் மொல்யா நோயை ஏற்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதுமை -பயிரிட்டும், மற்றப் பருவங்களில் பயறு வகை அல்லது தானிய வகை அல்லாத பயிர்களைப் பயிரிட்டும், இந்நூற்புழுக்களின் அழிவைத் தவிர்க்கலாம். வேர் முடிச்சு நூல் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, சோளம் போன்ற தானியப் பயிர்களைப் பயிரிடலாம். வேர் முடிச்சு நூல் புழுக்கள் தாக்கும் பயிர்களான காய்கறி, கரும்பு போன்றவற்றை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடலாம். இந்த முறைகளினால், மாற்றுப் பயிர்களைப் பயிரிடும் போது, விவசாயிகள் மிகு வருவாய் பெற இயலாத நிலையும் உள்ளது. பயிர்கள் பயிரிடும் காலத்தைப் பொறுத்து, நூற்புழுக்களின் எண்ணிக்கை உயர்ந்து, விளைச்சல் குறைகிறது. உருளைக் கிழங்கைப் பின் பட்டத்தில் பயிரிடுவதால்,பொன்னிற நூல் புழுக்கள் மிகுவதில்லை. பொறிப் பயிர்கள். குறைவான வருவாய் தரக் கூடிய, நூல் புழுக்கள் மிகுதியும் தாக்கும் பயிர்களைப் பயிரிடுவதால், முதலில் நூல் புழுக்கள் இப்பயிர்களைத் தாக்கும். நூல் புழுக்களின் வாழ்க்கைப் பருவங்கள் முடியும் முன்பே, அவற்றைத் தொடக்கத்திலேயே அழித்து விடலாம். பொன்னிற நூல் புழுக்கள் தாக்கும் உருளைக் கிழங்கிற்கு இடையே, தக்காளியைப் பயிரிட்டு, பின்னர்த் தக்காளிப் பயிரை அழிப்பதால், நூற்புழுக்களின் உற்பத்தியைத் தவிர்க்கலாம். மேலும், பயிர்களுக்குக் கீழே பசுமையான இலைகளையும், புற்களையும் பரப்புவதால், நூல் புழுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம். தரிசு நிலம். கோடைக் காலத்தில் உழவு செய்து, கட்டிகளை உடைத்துச் சமன் செய்து தரிசாக வைத்தால், சூரிய ஒளிக் கதிர்கள் பட்டு, பொன்னிற நூல் புழுக்கள், வேர் முடிச்சு நூல் புழுக்களைத் தடுக்கலாம். தாய்கறி, கரும்பு போன்றவற்றைப் பயிரிட்டுப் பின் நெல் பயிரிடுவதால், நீர் தேங்கியிருக்கும். இதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களைப் பெருமளவில் குறைக்கலாம். பண்ணைத் துப்புரவு. உழவு செய்தவுடன், உழவுக் கருவிகளை மண்ணின்றித் தூய்மை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு வயலில் உழவு செய்தவுடன், கலப்பையை மண்ணுடன் எடுத்துச் சென்று, வேறு வயலில் உழவு செய்யும் போது, நூல் புழுக்கள் அந்த வயலில் பெருக வாய்ப்புண்டு. எலுமிச்சைப் பயிர் உள்ள வயலின் வழியாகத் திராட்சைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எலுமிச்சையைத் தாக்கும் நூற்புழுக்கள் நீரில் சென்று, திராட்சையைத் தாக்கக் கூடும். இதனால், ஒவ்வொரு பயிருக்கும் தனித் தனி நீர் மேலாண்மை வேண்டும். வாழைக் கன்றின் மேல் தோலைச் சீவி விட்டு நடுவதால், கன்றைத் துளைத்துச் செல்லும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். நூல் புழுக்கள் தாக்கிய பூச்செடிகளின் மேற்பகுதியிலுள்ள இலை, தண்டு போன்றவற்றை வெட்டி அழிப்பதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். மேலும், நூற்புழுக்கள் தாக்காத வளமான நாற்று, விதை, விதைக் கரணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வதால், நூல் புழுக்களைத் தவிர்க்கலாம். சுடு நீர் முறை. விதை நெல்லைச் சுடு நீரில் 10–20 நிமிடங்கள் நனைப்பதால், நெல்லின் வெள்ளை நுனி இலை நோயைக் கட்டுப் படுத்தலாம். இரண்டு பங்கு நீர், இரண்டு பங்கு கொதி நீர், ஒரு பங்கு விதை என்னும் விகிதத்தில் கலக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவதற்குக் கிழங்குகளை நன்கு மூடப்பட்ட கிடங்குகளில் இட்டு, 50°C அளவில் வெப்பக் காற்றைச் செலுத்த வேண்டும். மேல் மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப்படுத்த, காய்ந்த இலை, தண்டுகளை 15 செ.மீ. உயரத்தில் மண்ணின் மேல் பரப்பி, அவற்றை எரிக்க வேண்டும். உருளைக் கிழங்கின் மேல் உள்ள பொன்னிற நூல் புழுக்களின் கூட்டுப் புழுக்களைத் தூரிகைகளைக் (brush) கொண்டு நீக்கலாம். சணல் சாக்குகளில், கிழங்குகளைப் போட்டு நன்கு குலுக்குவதால், உருளைக் கிழங்குகளில் ஒட்டியுள்ள கூட்டுப் புழுக்கள் விழுந்து விடும். வயல்களில் வேப்பம் புண்ணாக்கு, நிலக் கடலைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு போன்றவற்றை இடலாம். இதற்கு மேல், மரத் தூள், பயிர்க் கழிவுகளைப் பரப்பலாம். இதனால், மண்ணில் உருவாகும் பாக்டீரியாக்கள் நூல் புழுக்களை உண்டு, அவற்றின் உற்பத்தியைக் குறைக்கும். மக்கிய காட்டு உரம், எண்ணெய்ப் புண்ணாக்கு வகை, மரத் தூள் ஆகியவற்றை இடுவதால், வேர் முடிச்சு நூல் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இவ்வகை நூற்புழுக்கள் தாக்கும் பயிர்களான மிளகாய், காய்கறி வகை, பூ வகைக்கு இடையே, மஞ்சள் சாமந்தியைப் பயிர் செய்வதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். வேதி முறை. விதைகளை மெத்தில் புரோமைடு மருந்தில் 1 நாள் வைத்திருந்து, நச்சைப் புகைக்கச் செய்து, நூல் புழுக்களைக் கொல்லலாம். பஞ்சு நீக்கம் செய்த பருத்தி விதைகளை, டைபுரோமோ குளோரோ புரோபேன் நூல் புழுக் கொல்லியுடன் கலந்து விதைத்தால், விதைத்த 40 நாள்கள் வரை, நூல் புழுக்களின் தாக்குதலிலிருந்து, பருத்தி பாதுகாக்கப் படுகிறது. மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துதல். மண்ணில் இயற்கையிலேயே உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த, நூல் புழுக் கொல்லிகளைப் பயிர் விதைப்பு அல்லது நடவுக்கு முன்போ, பின்போ, நீருடன் கலந்து, மண்ணில் இட வேண்டும். நூல் புழுக் கொல்லியை மண்ணினுள் செலுத்து முன், நிலத்தை நன்றாக உழ வேண்டும். பயிர்களின் கழிவுப் பொருள்களை நீக்கி, மண் மிகுதியும், மென்மையாகும் நிலை வரும் வரை கட்டிகளை உடைத்துச் சமன் செய்ய வேண்டும். மண்ணில் ஈர மிகுதியோ, வறட்சியோ இருக்கக் கூடாது. விதைகள் நன்கு முளைக்கும் அளவுக்கு ஈரம் இருக்க வேண்டும். பயிர் நடுவதற்கு அல்லது விதைகள் நடுவதற்குக் குறைந்தது 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பே, நூல் புழுக் கொல்லிகளை மண்ணினுள் செலுத்த வேண்டும். இல்லையேல், விதைகளையும், நாற்றுகளையும், செடிகளையும் நூற்புழுக்கள் பாதிக்கும். நூற்புழுக் கொல்லிகளைச் செலுத்திய பின், மண்ணைச் சமன் செய்து, நூற்புழுக் கொல்லி செலுத்திய துளைகளை மூடி, மண்ணைக் கெட்டிப் படுத்த வேண்டும். நூல் புழுக் கொல்லிகள். டி.டி. கலவை என்பது குறிப்பிடத் தக்க நூல் புழுக் கொல்லியாகும். இதை, மண்ணில் செலுத்துவதற்கு முன், மண்ணில் நன்றாக நீர் பாய்ச்ச 'வேண்டும். பின்னர், நிலத்தை நன்றாக உழுது, சமன் செய்ய வேண்டும். டி.டி. கலவையை, நூல் புழுக் கொல்லியைச் செலுத்தும் ஊசிக் கருவி மூலம், மண்ணினுள் 30 செ.மீ. இடைவெளியில் செலுத்தலாம். மருந்து செலுத்திய வயலில் பாலித்தீன் உறைகளைப் பரப்பி, நச்சு வெளியே செல்லா வண்ணம் தடுக்க வேண்டும். டி.டி. கலவையிலிருந்து வெளி வரும் வளிமம், மண் துகள்களுக்கு இடையே ஊடுருவிச் சென்று, நூல் புழுக்களைக் கொல்லும். மண்ணின் மேல் குறைந்தது, இரண்டு நாள்களுக்குப் பாலித்தீன் அட்டைகளைப் பரப்பி மூடி வைக்க வேண்டும். இதனால், எஞ்சிய நூல் புழுக் கொல்லி மண்ணிலிருந்து ஆவியாக வெளியேறும். மருந்து செலுத்திய 14 நாள்களுக்குப் பின்னரே, விதைகளை விதைக்கலாம் அல்லது பயிர்களை நடலாம். டி.பி.சி.பி. என்பது ஒரு நீர்ம நூல் புழுக் கொல்லியாகும். இதை மண்ணிற்குள் ஊசிக் கருவி மூலம் செலுத்தலாம். அல்லது விதைப்பதற்கு முன்போ, நட்ட பின்போ நீர் பாய்ச்சும் போது, நீருடன் கலந்து விடலாம். இந்த நூற்புழுக் கொல்லியால், பயிர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. ஆனால், இதைக் கையாளும் போது, சில தீங்குகள் விளைவதால், இது பெரும்பாலும் பயன் படுத்தப் படுவதில்லை. ஃபென்சல்ஃபோதியான் என்பது குருணை வடிவான நூல் புழுக் கொல்லியாகும். இது இந்தியா, ஜெர்மனி, நீலகிரி மாவட்டப் பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொன்னிற நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்நூல் புழுக் கொல்லி விற்பனை செய்யப் படுவதில்லை. ஃபென்னமிஃபாஸ் என்னும் குருணை மருந்து நூல் புழுக் கொல்லி, நெமகூர் என்னும் வணிகப் பெயரில் ஆய்வில் உள்ளது. ஃயபோரேட் என்பதன் வணிகப் பெயர் திம்மெட் என்பதாகும். இது ஊடுருவிப் பாயும் பூச்சி கொல்லியுமாகும். விதைக்கும் போது, இதை விதையுடன் கலக்கலாம். இதை தொடு நஞ்சாகவும், வளிம நஞ்சாகவும், சிலந்தி நஞ்சாகவும் பயன் படுத்தலாம். இது நீண்ட நாள்கள் மண்ணில் நிலைத்து நிற்காது. இந்நூல் புழுக் கொல்லியால், வேர் முடிச்சு நூல் புழு, பொன்னிற நூல் புழு, வேர் அழுகல் நூல் புழு, திராட்சை நூல் புழு, பூப்பயிர் நூல் புழு போன்றவற்றைக் கட்டுப் படுத்தலாம். பொன்தியான் என்பது ஒரு கனிமப் பாஸ்ஃபரஸ் பூச்சி கொல்லியாகும். இது ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும், தொடு நஞ்சாகவும் பயன் படும். பயிர்களில், இது வேதி மாற்றமடைந்து, சல்பாக்சைடுகளாகவும் சல்ஃபோன் களாகவும் மாற்றப் படுவதால், கொல்லும் தன்மை கூடுதலாகக் காணப் படுகிறது. நட்ட 45ஆம் நாளில் இதை ஹெக்டேருக்கு 500 மி.லி. வீதம் நெல்லில் தெளிப்பதினால், நெல்லின் வெள்ளை நுனி நூல் புழுவின் தாக்குதலைக் கட்டுப் படுத்தலாம். கார்பமேட் கொல்லிகள். கார்போஃயூரான், இந்த நூல் புழுக் கொல்லி 3% குருணையாகும். இதன் வணிகப் பெயர் ஃபியூரடான் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லியைக் கொண்டு, நெல்லின் வெள்ளை நுனி நோய், வேர் நூல் புழு, வேர் முடிச்சு நூல் புழு, நீள் முட்டை வடிவ நூல் புழு, கோதுமை, பார்லிப் பயிர்களில் தோன்றும் தானிய நீள் முட்டை நூல் புழு, வாழையில் துளைத்து உண்ணும் நூல் புழு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம். ஆல்டிகார்ப். இதன் வணிகப் பெயர் டெமிக் என்பதாகும். 10% குருணையாக விற்கப் படும் இதை, ஊடுருவிப் பாயும் நூல் புழுக் கொல்லியாகவும் பயன் படுத்தலாம். இந்நூல் புழுக் கொல்லியில் உள்ள கந்தக அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து, வேதி மாற்றம் அடைந்து, சல்ஃபாக்சைடுகளாகவும், சல்ஃபோன்களாகவும் மாற்றப் படுகின்றன. ஆல்டிகார்ப் குருணைகளை, ஹெக்டேருக்கு 1 கி.கி. வீரிய மருந்து என்னும் அளவில் இடலாம். ஆக்சாமில். இந்த நூல் புழுக் கொல்லி, 24% நீர்மமாகவும், 10% குருணையாகவும் உள்ளது. இது பரந்த அளவில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தும் தன்மை உடையது. இதன் வணிகப் பெயர் வைடேட் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லி, பயிர்களின் மேல் தெளிக்கும் போது, ஊடுருவிச் சென்று, வேர்களில் உள் நூல் புழுக்களைக் கொல்லும் திறன் பெற்றுள்ளது. —குரு. பாலசுப்ரமணியன் துணை நூல். B. Vasantharaj David and T. Kumaraswamy, Elements of Economic Entomology, Popular Book Depot, Madras, 1975.