இலி பிளே, பிரடெரிக்கு
ili piḷē, piraṭerikku
பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகவியல் அறிஞராவார்.
பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகவியல் அறிஞராவார். ஐரோப்பாவில் சமூகவியல் சிந்தனையாளர்களின் கருத்துகளில் குறிப்பாகக் கி.பி. 1860–இலிருந்து 1940 வரை இவருடைய கருத்துகளில் தாக்கம் இருந்து வந்தது.
இவர் நார்மண்டி (Normandy) என்னுமிடத்தில் பிறந்தவர். இவர் எழுதிய புத்தகங்களுள் ‘ஐரோப்பாவின் வேலைக்காரி’ (Les Ouvriess Europeans, 1855) என்ற நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். இவர் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இலி பிளேயின் (Le Play Frederic) சமூகவியல் கருத்துகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை சமூகக் கட்டுப்பாடு, சமூக மாற்றம், சமூக ஆய்வு முறை என்பனவாம். இவர் குடும்பத்தைத் தந்தையாட்சிக் குடும்பம் (Patriarchal family), நிலையில்லாத குடும்பம் (Unstable family), தண்டுக் குடும்பம் (Stem family) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று கருதினார். தந்தையாட்சிக் குடும்பத்தில் தந்தையே எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். எல்லோரையும் வேலை வாங்குபவரும் பெறுகின்ற செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவரும் தந்தையே. இக்குடும்பத்தின் சொத்துகள் பொதுமையாக உள்ளன. இத்தகைய குடும்பங்கள் அக்காலத்தில் உருசியாவிலிருந்த விவசாயக் குடும்பங்களிடத்தும், மைய ஐரோப்பியக் குடும்பங்களிடத்தும் காணப்பட்டன. இரண்டாம் பிரிவினதாகிய நிலையில்லாத குடும்பம் இன்று மக்களிடையே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தனிக் குடும்பங்களைக் குறிப்பிடுகிறது. இவ்வகையான குடும்பங்கள் நிலைத்திருக்க முடியாமைக்குக் காரணம், பொருளாதாரச் சிக்கல்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாததாகும். இது தொழிற்சாலை சார்ந்த உழைப்பாளர் குழுவை சார்ந்தச் குடும்பங்களைக் குறிப்பதாகும். இவ்வகைக் குடும்பங்களில் திறமையுள்ளவர்கள், வெற்றி பெற்று முன்னேறுகின்றனர். மூன்றாம் பிரிவினதாகிய தண்டுக் குடும்பம் முதல் இரண்டு வகைக் குடும்பங்களின் தன்மையையும் பெற்றிருக்கிறது.
இவர் தம் சமூக மாற்றக் கோட்பாடுகளில் சமூகக் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சிறப்பிடம் கொடுத்தார். ஆனால், தொழில்நுட்ப மாற்றம் தேவை என்றும் கருதினார். எல்லாவகை மக்களும் சமூகத்தின் ஒழுங்கையும் ஒற்றுமையையும் நிலை நாட்டப் பத்துவகையான கட்டளைகளை ஏற்று நடக்கின்றனர் என்று கருதினார். இந்தப் பத்துக்கட்டளைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கினால் சமூகம் சீரழியத் தொடங்கி விடும் என்றும் கருதினார். சமய எதிர்ப்புக் கருத்துக்கள் சமூகச் சிதைவின் அறிகுறிகளாகும் என்பது இவர் கருத்து.
சமூக அறிவியல் துறையில் ஆய்வுமுறையில் தன் வரைவுமுறை அல்லது ஒரு பொருள் பற்றிய வரைவு முறை (Monograph Method) இலி பிளேயின் தனிச் சிறப்பு வாய்ந்த கருத்தாகும். இம்முறை இரண்டு தன்மைகளினால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறை நேரடியாகச் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களிலிருந்து தொடர்பு கொண்டு நோக்க வேண்டும் என்பதாலும், செய்திகளைச் சேகரிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையைத் தனிவரைவுமுறை கொண்டிருப்பதாலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 416)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aewk263u/
தமிழ்“இலி பிளே, பிரடெரிக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aewk263u/APA
Oliyon Research. (2026). இலி பிளே, பிரடெரிக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aewk263u/MLA
"இலி பிளே, பிரடெரிக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aewk263u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment