அருணகிரிநாதர், சு.சு
aruṇakirinātar, cu.cu
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சுரகுளத்தூரில் 1895–ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் பிறந்தார்.
வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சுரகுளத்தூரில் 1895–ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் பிறந்தார். சுப்பராய முதலியாரும் கன்னியம்மாளும் இவர்தம் பெற்றோராவர்.
அருணகிரிநாதருக்கு ஆங்கிலம் பயில வாராததனால் பள்ளிப் படிப்புப் பாதியில் நின்றது. யாழ்ப்பாணம் கனகசபையின் அறிவுரையால் தமிழ் கற்ற இவர் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எந்த நிலையிலும் மனிதன் நேர்மையை இழக்கக் கூடாது என்பது இவரது கொள்கையாக அமைந்திருந்தது.
நீதிக் கட்சியில் ஈடுபாடு கொண்ட இவர், அக்கட்சிச் சார்பில் வெளியான ‘திராவிடன்’ என்ற நாளேட்டின் துணையாசிரியராகப் பணியாற்றினார். நீதிக்கட்சியின் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
இவர் கி.பி. 1937–ஆம் ஆண்டு ‘ஆனந்தபோதினி’ என்னும் சிறுகதைத் திங்களிதழைத் தொடங்கினார். அவ்விதழில் அருணன், விசயன் முதலிய புனை பெயர்களில் எழுதிவந்தார். இவர் பல புதினங்களையும் எழுதியுள்ளார். ‘சுதந்திர நாடு’ என்ற இதழுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். இவ்வதழில் ‘மின்னொளி’ என்ற புனை பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார்.
இந்தி எதிர்ப்புப் போரில் தம் மனைவி உண்ணாமுலையாரையும் ஈடுபடுத்தினார். அதன்விளைவாக அவ்வம்மையார் தம் கைக் குழந்தையுடன் ஓராண்டுக் காலம் சிறைப்படுத்தப்பட்டார்.
தமிழாசிரியராகவும் இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் திகழ்ந்த இவர், சென்னைப் பண்டிதர் சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது தமிழ்ப் புலவர் பெருமக்கள் குறைகளை நீக்க ஒரு மாநாடும் நடத்தினார்.
அருணகிரிநாதர் பிறருக்கு உதவும் இயல்பினர். நாவலர் சோமசுந்தர பாரதியார் இவருக்கு ‘ஆசிரிய மணி’ என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
வடபழநி ஆண்டவர் அந்தாதி, மனைவியின் கடமை, வாழ்வதற்கு வழி, பேரும் புகழும், வீரகேசரி, அசலாம்பிகை, திருக்கழுக்குன்றத்துக் கொலை, பத்மாசனி, அமரநாதன், சற்குண வல்லி, குமுத ரஞ்சனி, ஆனந்த மனோகரன், அமிர்தசாகரன், அமிர்த குமாரி, செய்யாத குற்றத்திற்குச் சென்ம தண்டனை, தென்னிந்தியப் பெருமக்கள், புகழேந்திப் புலவர், பட்டினத்தார், கொலம்பசு, புத்தர், அசோகர், அயல் நாட்டுப் பெரியோர், அமெரிக்காவின் மூன்று பெருமக்கள், சேம்சு கார்பீல்டு, வில்லியம் மில்லர், நல்லோர் நடந்த வழி, தமிழர் வாழ்ந்த விதம், தமிழ் நாட்டுப் பெரியோர். இவர்கள் உயர்ந்த விதம், அறிஞர் வரலாறு, தமிழ் மக்கள் சென்ற வழி முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.
இவர் தம் எழுபத்தொன்பதாவது வயதில் (17–4–1974) காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ‘வயலக்கா’ என்னும் ஊரில் இயற்கை எய்தினார்.மு.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 808)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aegh5wvg/
தமிழ்“அருணகிரிநாதர், சு.சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aegh5wvg/APA
Oliyon Research. (2026). அருணகிரிநாதர், சு.சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aegh5wvg/MLA
"அருணகிரிநாதர், சு.சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aegh5wvg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment