உமாபதி சிவாச்சாரியர்
umāpati civāccāriyar
சந்தானாசாரியர் அல்லது சந்தான குரவர் என்று குறிப்பிடப்படும் சைவ சித்தாந்த ஆசிரியர்களுள் ஒருவர்.
சந்தானாசாரியர் அல்லது சந்தான குரவர் என்று குறிப்பிடப்படும் சைவ சித்தாந்த ஆசிரியர்களுள் ஒருவர். இவர் உமாபதி சிவம் எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரத்தில் தோன்றினார். புலவர் புராணம், சைவ சந்தானாசாரியர் புராணம், பின்னர் வந்த பல புலவர்கள் எழுதிய செய்யுள்கள், தாயுமானவரின் எந்நாட் கண்ணி முதலியவை உமாபதி சிவத்தின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. இவர் இயற்றிய ‘சங்கற்ப நிராகரணம்’ ‘ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம், வாழுநற் சகனம் நவிற்றுவனே’ (அடி 26–27) எனக் கூறுவதனால் அந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு சாலி வாகனத்துக்குச் சரியான கி.பி. 1313 என்று தெரிய வருகிறது. எனவே, உமாபதி சிவம் 13–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 14–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.
இவர் சிதம்பரத்தில் நடராசப் பெருமானுக்குப் பூசை செய்யும் உரிமை பெற்ற தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர்; வடமொழி வேதாகமங்களையும் தமிழ்த் திருமுறைகளையும் இருமொழி இலக்கியங்களையும் கற்றுத் துறை போகியவர்.
ஒருநாள் உமாபதி சிவம் வழக்கம் போல் கோவில் பூசையை முடித்து விட்டுப் பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் குடை, கொடி, தீவட்டி போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு பலர் போய்க் கொண்டிருந்தனர். அப்போது ‘பட்ட கட்டையில் பகற் குருடு ஏகுது பாரீர்’ என்றொரு குரல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீப்பந்தம் ஏந்திச் செல்வதையும் குறித்தே இவ்வாறு கூறப்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். உண்மையான குருவைத் தேடிக் கொண்டிருந்த உமாபதி அவ்வாறு கூறிய மறைஞான சம்பந்தரை நாடிச் சென்றார். அவருடைய பக்குவத்தை அறிய மறைஞானசம்பந்தர் நெசவாளிகள் பாவுக்கு வார்க்கும் கஞ்சியைத் தம் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிவம் சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால் வாங்கிப் பருகினார். மறைஞானசம்பந்தர் இவருக்கு உபதேசம் செய்தருளினார். அதன் பிறகு தில்லைத் தீட்சிதர்கள் உமாபதியைச் சமூகத்திலிருந்தும் ஊரிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். அவர் ஊருக்கு வெளியே கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரலானார். அதனால், கொற்றவன் குடி உமாபதி சிவம் என்றும் அழைக்கப்பட்டார். பிறகு அவ்வூர் கொற்றங்குடி என வழங்கப்பட்டது. இப்போது அதன் பெயர் கொத்தங்குடி.
உமாபதியின் பெருமையைப் பின்வரும் இருநிகழ்ச்சிகள் வெளிப்படுத்தும். தில்லை நடராசர் கோவிலில் திருவிழாவின் போது கொடி ஏறவில்லை. உமாபதியை அழைத்துவந்தார்கள். அவர் ‘கொடிக்கவி’ பாடினார். பின்னர்க் கொடி ஏறி விழா நடைபெற்றது. ‘அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைத் தீட்டு – படிமிசை, பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து, முத்தி கொடுக்க முறை’ எனத் தில்லை நடராசர் எழுதி அனுப்ப, உமாபதி மடத்துக்கு விறகு கொடுத்- துக் கொண்டிருந்த பெத்தான் சாம்பனுக்குத் தீக்கை செய்தருளினார். அவன் உடனே முக்தி பெற்றான். அரசனிடம் இச்செய்தி திரித்துக் கூறப்பட்டது. அரசன் வந்து மீண்டும் அந்த அற்புதத்தைச் செய்து காட்டுமாறு கட்டளையிட்டான். அப்போது அங்கே, அபிடேகநீர் பாய்ந்து அதனால் வளர்ந்திருந்த ஒரு முள்ளிச் செடிக்கு உபதேசம் செய்ய அது மறைந்தது. ஆனால், இத்தகைய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு இவருடைய நூல்களில் இல்லை. அது போலவே இவருடைய வரலாறு பற்றிய நூல் குறிப்பும் இல்லை.
சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் எட்டு இவர் இயற்றியவை. அவை ‘சித்தாந்த அட்டகம்’ என வழங்கப்படும். அவை யாவன: 1. சிவப்பிரகாசம், 2. திருவருட்பயன், 3. வினாவெண்பா, 4. போற்றிப் பஃறொடை (தமது குருவைப் போற்றும் நூல்), 5. கொடிக்கவி, 6. நெஞ்சுவிடு தூது (தம் குருவிடம் நெஞ்சைத் தூது விட்டதாக அமையும் பாடல்), 7. உண்மை நெறி விளக்கம் காரியத்தை விளக்கும் நூல்), 8. சங்கற்ப நிராகரணம்.
உமாபதிசிவம் வடமொழியிலும் சில நூல்கள் எழுதியுள்ளார். ‘நடராஜர்சஹஸ்ரநாமம்’, ‘ஸ்ரீருத்ரம்’, ‘சமகம்’, ‘வாயுசம்ஹிதை’ ஆகியவற்றிற்கு உரையும், யந்திர விதானத்துக்கு ஒரு சிற்றுரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பௌட்கர ஆகமத்துக்குப் பௌட்கர பாடியம் என்னும் உரை எழுதியுள்ளார். குஞ்சிதாங்கிரிசுதவம் என்னும் நூல் இறைவனின் தூக்கிய திருவடியின் பெருமையைப் பேசுகிறது. நடராசர் என்னும் சொல்லின் பெருமையை விளக்கும் வகையில் நடராசத்துவனி மந்திரத்தவம் என்னும் நூலையும் எழுதியதாகத் தெரிகிறது. இவர் எழுதிய பிற தமிழ் நூல்கள், 1. கோயிற் புராணம், 2. திருப்பதிக் கோவை, 3. திருப்பதிகக் கோவை, 4. சேக்கிழார் புராணம், 5. திருமுறை கண்ட புராணம், 6. திருத்தொண்டர்புராணசாரம், 7. தேவார அருள்முறைத் திரட்டு, 8. ஞானாசார சாத்திர பஞ்சகம் அல்லது ஞானசரிதை (ஞானபூசாகரணம், ஞானபூசை, ஞானதீட்சை அல்லது ஞானாதீட்சாவிதி, ஞானாந்தியேட்டி, போசனவிதி என்னும் 5 சிறு நூல்களைக் கொண்டது).
உமாபதி சிவம் ஒருவரே தாம் கூறப்போகும் பொருள் சைவசித்தாந்தம் என்றும் அது ‘வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்’ என்றும் சிவப்பிரகாசத்தில் கூறுகிறார். இவர் இந்நூலில் சைவசித்தாந்தக் கொள்கைகளை மட்டும் கூறவில்லை. பிற சமயத்தினர் இந்நெறியில் உள்ள குறைகளாகக் கூறியவற்றிக்கு விடை தருவதுபோலவும் எழுதியுள்ளார். திருவருட் பயன் என்னும் நூல் திருவள்ளுவர் கூறாமல் விட்ட வீடு என்னும் பகுதியை வெளிப்படுத்துவது போலப் பப்பத்துக் குறள்களையுடைய பத்து அதிகாரங்களைக் கொண்டது. சங்கற்பநிராகரணம் ஒன்பது சமயங்களின் வாதமும் மறுதலையுமாக மாறி மாறி வருகின்றது. இதில் குறிக்கப்பட்டுள்ள சமயங்கள் முறையே 1. மாயாவாதம், 2. ஐக்கியவாதம், 3. பாடாணவாதம், 4. பேதவாதம், 5. சிவ சமவாதம், 6. சங்கிராந்தவாதம், 7. ஈசுவர அவீகார வாதம், 8. நிமித்தகாரண பரிணாமவாதம், 9. சைவ வாதம்.
கைதேர்ந்த சிற்பி செதுக்கிய அரிய சிலை போல சங்கற்பநிராகரணம் அழகாக அமைந்துள்ளது. உமாபதி இந்நூலில் தம் திறமையை எல்லாம் காட்டி இருக்கிறார். இதில் வரும் சமயங்களில் ஒவ்வொன்றும் தன் முன்னதைக் கண்டிப்பதோடு மட்டுமன்றி அதைவிடச் சிறந்ததாகவும் அமைந்துள்ளது. டி.பி.சி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 938)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ace84pet/
தமிழ்“உமாபதி சிவாச்சாரியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ace84pet/APA
Oliyon Research. (2026). உமாபதி சிவாச்சாரியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ace84pet/MLA
"உமாபதி சிவாச்சாரியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ace84pet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment