சங்ககாலச் சோழ மன்னர்களுள் ஒருவன்; சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்று வழங்கப்படுவான். இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குத் தந்தை. இச்செய்தியினை முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய சிறுபாணாற்றுப் படையில் ‘வென்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்’ என்னும் பகுதியிற் குறிப்பிட்டுள்ளார். ‘வென்ற வேலினையுடைய, அழகினையுடைய பல தேரினையுடைய இளஞ்சேட்சென்னியுடைய புதல்வன்’ என்று இத்தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இத்தொடரிலுள்ள ‘உருவப்பல் தேர் இளையோன்’ என்னும் பகுதி இவ்வரசன் பெயர்க்காரணத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இவன் அழுந்தூர் என்பவனின் மகளை மணந்தவன். இதனை நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் (தொல் அகம். 30சூ) சுட்டிக்காட்டியுள்ளார் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கிய இம்மன்னனைப் பரணரும் (புறம். 4) பெருங்குன்றூர்க் கிழாரும் (புறம். 266) பாடாண்திணை, பரிசில்கடா நிலைத் துறையில் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பரணரும் இம்மன்னனின் பெயர்க் காரணத்தை ‘நீயே அலங்குளைப் பரீஇ இவுளிப். பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி’ என்னும் அடிகளில் (புறம் 4; 13, 14) குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார். பெருங்குன்றூர் கிழார் இம்மன்னனை ‘நீர்திகழ்கழனி நாடு கெழுபெருவிறல், வான்தோய் நீள்குடை வயமான் சென்னி’ என்று இவனுடைய வீரமும் ஈரமும் புலம்படுமாறு குறிப்பிட்டுள்ளார் (புறம். 266; 6, 7).