அடங்கன் முறை
aṭaṅkaṉ muṟai
அடங்கன் முறை என்பது, தேவார முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பாடிய பதிகங்களில் இக்காலத்தே கிடைப்பன அனைத்தையும் தொகுத்துள்ள தேவாரத் தொகுப்பினைக் குறிக்கும்.
அடங்கன் முறை என்பது, தேவார முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பாடிய பதிகங்களில் இக்காலத்தே கிடைப்பன அனைத்தையும் தொகுத்துள்ள தேவாரத் தொகுப்பினைக் குறிக்கும். இத்தொகுப்பினை ‘மூலரோது திருமுறைகள் ஏழு’ என்றும், ‘சிறப்புடைய மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்த திருநெறிய தமிழ்’ என்றும் உமாபதி சிவாச்- சாரியார் பாராட்டியுள்ளார். முறை என்ற சொல்லிற்கு அடைவு முதலாகக் கற்பு ஈறாகப் பதினாறு தனித்தனிப் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிட்டுள்ளது. இப்பதினாறு பொருள்களும் அடங்கன் முறையிலுள்ள தேவாரப் பனுவல்களுக்குப் பொருந்தும் என அறிஞர் ஆய்ந்து காட்டியுள்ளனர்.
சைவ உலகம் அச்சமய அருளாளர்கள் அருளிய திருப்பனுவல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகப் பகுத்துப் போற்றி வருகிறது. பன்னிரு திருமுறை வகுக்கப்பட்ட வரலாற்றினைத் திருமுறை கண்ட புராணம் என்னும் பெயரில் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் விளக்கிப் பாடியுள்ளார். அபய குலசேகரன் என்னும் இராசராச மன்னன், மூவர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தை மட்டும் பாடக் கேட்டு, முழுவதையும் கேட்க விரும்பித் தேடிக் கிடைக்காமல் மனம் நைந்தான். அக்காலைத் திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் எல்லாக் கலைகளும் உணர்ந்து, நம்பியாண்டார் நம்பி என்பார் ஒருவர் விளங்குவதைக் கேள்வியுற்றான். அங்குச் சென்ற மன்னன் மூவர் செய்தியினை அறிய வேண்டும் என்ற தன் அவாவினை நம்பியிடம் கூறி வேண்டினான். அரசன் வேண்டுகோளை ஏற்ற தம்பி, பொல்லாப் பிள்ளையாரை வேண்ட, அவரருளால் நம்பியாண்டார் நம்பி தேவாரம் பற்றிய செய்தியினையும் அது தில்லையில் மூவர் கைஇலச்சினையோடு காப்பிடப்பட்டுள்ளதனையும் அறிந்து மன்னனிடம் கூறினார். நம்பியும் அரசனும் தில்லை சென்று தேவாரம் பெறும் தங்கள் விருப்பினைத் தில்லை மறையவரிடம் கூற, அவர்கள், ‘தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்’ என மொழிந்தனர். அதனைக் கேட்ட மன்னன், விழாவெடுத்து மூவர் திருமேனியும் ஒருங்கே எழுந்தருளுமாறு செய்து வேண்டினான். மறையவர் காப்பு நீக்கித் திருக்கதவந்திறந்து காட்ட ஏடுகள் செல்லரித்துக் கிடக்கக் கண்ட மன்னன், கண்ணீர் ததும்ப நின்றான். ‘இக்காலத்திற்கு வேண்டுவன மட்டும் வைத்தோம்’ என்னும் வானொலி கேட்டு வருத்தம் நீங்கி, ஏடுகளைத் தொகுக்க ஏற்பாடு செய்தான். கிடைத்த மூவர் தேவாரப்பதிகங்களில் திருஞானசம்பந்தருடைய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6-ஆம் திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும் பாகுபாடு செய்து தொகுத்தனர். மூவர் தேவாரப் பதிகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பே அடங்கன் முறை எனப்பட்டது. ‘நல்லிசை யாழ்ப்பாணனார்’ மரபின் வந்த ஒரு பெண்மணியின் துணையால் அடங்கன் முறைப் பதிகங்களுக்குப் பண்ணும் கட்டளைகளும் வகுத்தமைக்கப்பட்டன. இத்தொகுப்பு அடங்கன் முறை என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது பண்முறையில் அமைந்த தொகுப்பாகும். இம்மூவர் தேவாரங்களுக்குத் தல முறையில் வகுத்தமைத்த பதிப்பும் உண்டு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 237)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abze9pe6/
தமிழ்“அடங்கன் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/abze9pe6/APA
Oliyon Research. (2026). அடங்கன் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abze9pe6/MLA
"அடங்கன் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/abze9pe6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment