எரி விளைப் பொருள்கள் நீராவி உற்பத்தி செய்யும் பகுதிகளையும், மீச்சூட்டுப் (super heating) பகுதிகளையும் கடந்து வந்த பின்னர், அவற்றிலிருந்து வெப்பத்தை உறிஞ்சும் ஓர் உறுப்பு, சிக்கனப்படுத்தி (economizer) எனப்படும். நீராவி உண்டாக்கத் தேவையான எரி பொருளை மிச்சப்படுத்துவதால், இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. சிக்கனப்படுத்தி விசையுடன் கூடிய பாய்வைக் கொண்ட, வெப்பச் சலன முறையில் வெப்பத்தைக் கடத்தும் கருவியாகும். இதனுள் ஊட்டு நீர், நீராவி உண்டாக்கும் பகுதிகளை விட மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப்படுகிறது. சிக்கனப்படுத்தி, கொதி கலனுக்குரிய ஊட்டு நீர் எக்கியின் உதவியால் நீரைப் பெற்று, அந்நீரை உயர் வெப்ப நிலையில் கொதி கலனுக்குச் செலுத்துகிறது. சிக்கனப்படுத்தியின் உதவியால், ஊட்டு நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால், கூடுதலான நீராவி உண்டாக்கும் பகுதிகளின் தேவை குறைகிறது. மேலும், அனல் புகையிலிருந்து (flue gas) வெப்பம் உறிஞ்சப்படுவதால், புகை போக்கியிலிருந்து அனல் புகை வெளியேறும் போது, குறைந்த வெப்ப நிலையில் உள்ளது. பொதுவாக எஃகு குழாய்களும், வெளிப்புறமாக நீட்டப்பட்ட பரப்புடன் கூடிய எஃகு குழாய்களும் சிக்கனப்படுத்தியில் வெப்பம் உறிஞ்சும் பகுதியாக உள்ளன. சிக்கனப்படுத்தி, நீராவி உண்டாக்கும் தொகுதியின் ஒரு பகுதியாதலால், அத்தொகுதிக்குள்ளாகவே அமைக்கப்படுகிறது. எரிபொருளின் வினை, ஊட்டு நீரின் வெப்ப நிலை, அனல் புகையின் வெளி வெப்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,சிக்கனப்படுத்தியின் அளவு அமைகிறது. பெரும்பாலான இடங்களில் சிக்கனப்படுத்தியும், காற்று வெப்பப்படுத்தியும் மிகு திறனைப் பெறும் பொருட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. —வா. அனுசுயா