இலிண்டன், இரால்பு
iliṇṭaṉ, irālpu
அமெரிக்கப் பண்பாட்டு மானிடவியலாராவர்.
அமெரிக்கப் பண்பாட்டு மானிடவியலாராவர். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மானிடவியல் துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்களுள் இவரும் ஒருவர். இரால்பு இலிண்டன் (Ralph Linton) கி.பி. 1893–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 27–ஆம் நாள் பிலடெல்பியாவில் (Philadelphia) பிறந்தார். இவர் பென்சில்வேனியாவில் இசுவார்த்மோர் (Swarthmore) கல்லூரியில் இளம்பட்டப்படிப்பையும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் 1916–ஆம் ஆண்டு தொல்லியல் முதுகலைப்பட்டத்தையும், ஆர்வர்டு (Harvard) பல்கலைக்கழகத்தில் 1925–ஆம் ஆண்டு டாக்டர் பட்டத்தையும் பெற்றார். டாக்டர் பட்டம் பெறும்போது தலைசிறந்த மானிடவியல் வல்லுநர்களுள் ஒருவரான பிரான்சு போவாசு (Franz Boas) என்பவரின் தொடர்பினை இவர் பெற்றார். அவரோடு கொண்ட தொடர்பிற்குப் பிறகு சமகாலத்திய பண்பாடுகளை அறிவதில் இவர் ஆர்வம் செலுத்தினார். இவர் 1922–ஆம் ஆண்டு சிகாகோவிலுள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் வட அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய சேகரிப்புகளுக்கு உதவிக் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னர் விசுகான்சின் (Wisconsin) பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்குப் பணியாற்றும்போது இவர் எழுதிய ‘மனிதனைப் பற்றிய ஆய்வு’ (The Study of Man, 1936) என்னும் நூல் சமூகவியல், உளவியல், உயிரியல், வரலாற்றியல் ஆகிய நான்கு துறைகளில் புதிய கொள்கைகளை ஒருங்கிணைத்து மனிதனைப் பற்றிய அறிவியலுக்குப் புதிய அணுகுமுறையை உருவாக்கியது. இவரது படைப்புகளுள் இதுவே தலையாயது. இதனையடுத்து இவர்தம் ஆய்வுகள் சமுதாயத்தின் அமைப்பினைத் ‘தகுதி’ (Status), ‘செயற்பாங்கு’ (Role) என்னும் கோட்பாடுகளோடு ஒவ்வொரு தனிமனிதனையும் சமுதாயத்தையும் முழுவதுமாக இணைத்து ஆராய ஓர் அணுகுமுறையை உருவாக்கின.
இவரது மற்றுமொரு சிறந்த வெளியீடு ‘பண்பாட்டின் வளர்ச்சி’யாகும் (The Tree of Culture–1955), இவரது மறைவுக்குப்பின் வந்த இவ்வெளியீடு, ஒவ்வோர் உயிரியையும் அது சமூகத்தில் கொண்டுள்ள நடத்தைகளையும் பிணைப்பினையும், உயிரியல்சார் அடிப்படையில், மனிதன் உயர் பாலூட்டிகள் (Primates) ஆகியவற்றோடு தொடர்புபடுத்தி விளக்குகிறது. இவர்தம் வெளியீடுகளுள் முதன்மையானது ‘தனலா: மடகாசுகர் மலைவாழ் பழங்குடி’ (The Tanala: A Hill Tribe of Madagaskar, 1933), ‘ஏழு அமெரிக்க இந்தியப் பழங்குடிகளிடையே பண்பாட்டுப்பேறு’ (Accultaration in Seven American Indian Tribes, 1940), ‘ஆளுமையின் பண்பாட்டுப் பின்னணி’ (The Cultural Background of Personality, 1945) ஆகியவையாகும். இவர் 1953–ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 24–ஆம் நாள் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 407)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6kn7fg5/
தமிழ்“இலிண்டன், இரால்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a6kn7fg5/APA
Oliyon Research. (2026). இலிண்டன், இரால்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6kn7fg5/MLA
"இலிண்டன், இரால்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a6kn7fg5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment